Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அருள்வான் - விமர்சனம்

அருள்வான் - விமர்சனம்

Hero News Online 1 week ago

டிப்பு: அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி.டி.வி. கணேஷ், ஜான் விஜய், பேபி கிருத்திகா, 'பருத்தி வீரன்' சரவணன், வினோதினி, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர்

இயக்கம்: கணேஷ் விநாயகன்

ஒளிப்பதிவு: எம்.சுகுமார்

படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

கலை இயக்கம்: லால்குடி இளையராஜா

தயாரிப்பு: '90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்' எஸ்.ஜி.சரவணன்

வழங்குபவர்: 'சக்தி பிலிம் ஃபேக்டரி' சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

தேனி மாவட்டம் கொடைக்கானல் மலையில், அகமலை என்றொரு கிராமம். போக்குவரத்து உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த மலைகிராமத்தில் காடர் மொழி பேசும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டும் என்றால் எட்டு கிலோ மீட்டர் நடந்து போனால் தான் சாத்தியம் என்பதால், அந்த கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமலேயே வளர்க்கிறார்கள்.

அந்த கிராமத்தின் தலைவரது மகள் அமரவள்ளி (ரம்யா பாண்டியன்), அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தனை (ஆரவ்) திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு குறிஞ்சி (பேபி கார்த்திகா) என்ற பத்து வயது மகள் இருக்கிறார்.

இந்நிலையில், பாண்டியன் (ஜான் விஜய்) என்ற கபட ரேஞ்சர், குறிஞ்சியின் தாத்தாவை - அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதால் - ஏமாற்றி கைநாட்டு வாங்கி, அந்த கிராமம் முழுவதையும் தனியார் நிறுவனத்திற்கு விற்றிருப்பதாகச் சொல்லி, அங்கு வாழும் மக்களை அந்நிலத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகிறார்.
இப்படி வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கி அவதிப்படும் இம்மக்களைக் காப்பாற்ற முன்வராமல் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

படிப்பறிவு இல்லாமல் போனதால் தான் நாம் இப்படி கேட்பாரற்றுப் போனோம் என்று வருந்தும் தாத்தாவின் வார்த்தைகளைக் கேட்டு, எப்படியாவது படித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் சிறுமி குறிஞ்சி. தான் மட்டுமல்ல, அந்த கிராமத்தில் உள்ள ஏனைய சிறுவர் சிறுமிகளும் படிக்க வேண்டும்; அதற்கு தன் கிராமத்துக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இச்சூழலில் குறிஞ்சி பருவம் எய்திவிடுவதால், அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள் பெரியவர்கள். ஆனால், தான் கல்வி கற்க வேண்டும், தனது கிராமத்துக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் குறிஞ்சி, அக்கிராமத்தை விட்டு வெளியேறி, நகரத்துக்கு வந்து, தேனி மாவட்ட கலெக்டரைத் தேடி அலைகிறார்.

குறிஞ்சி பேசும் காடர் மொழி நகரவாசிகளுக்குப் புரியாததால், பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கிறார். இதனிடையில், விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு வரும் மாவட்ட கலெக்டர் முத்துவேலை (அருள்நிதி) சந்திக்கிறார். அவரிடம் தன் ஆசையை, லட்சியத்தை எடுத்துக் கூறுகிறார்.

குறிஞ்சியின் நியாயமான ஆசையைப் புரிந்துகொள்ளும் கலெக்டர் முத்துவேல், அதை நிறைவேற்ற குறிஞ்சியின் கிராமத்துக்குச் செல்லுகிறார். அங்கு பள்ளிக்கூடம் அமைக்க முயற்சி செய்கிறார். ஆனால், ஆபத்தான அந்த மலைப்பகுதியில் அமைக்கப்படும் பள்ளியில் பணிபுரிய ஆசிரியர்கள் யாரும் முன்வராததால் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

அதன்பிறகு என்ன நடந்தது? கலெக்டர் முத்துவேல் சிக்கல்களைத் தகர்த்து, குறிஞ்சியின் லட்சியத்தை நிறைவேற்றினாரா? குறிஞ்சி படித்து என்ன ஆனார்? அவரது பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? கபட ரேஞ்சர் பாண்டியன் என்ன ஆனார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சமூகப் பொறுப்புணர்வுடன் அட்டகாசமாக விடை அளிக்கிறது 'அருள்வான்' திரைப்படத்தின் மீதிக்கதை.

மாவட்ட கலெக்டர் முத்துவேலாக அருள்நிதி நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கு அவரது நிஜ பாட்டனார் பெயர் (அதாவது கலைஞர் மு.கருணாநிதியின் தந்தையின் பெயர்) வைக்கப்பட்டிருப்பது ஒரு அரசியல் குறியீடாக கவனிக்க வைக்கிறது. படத்தில் அவர் இடைவேளைக்குப் பிறகு தான் வருகிறார் என்றாலும், அவருடைய கதாபாத்திரம் மிக மிக முக்கியமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவருக்கு இப்படம் ஒரு மைல் கல். நேர்மையானவராகவும், பழங்குடி மக்கள் கல்வி பெற்று உயர வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவராகவும், எளிய மக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவும் நடித்திருக்கும் அருள்நிதி, இறுதியில் நாம் நினைத்துப் பார்க்காத முடிவை எடுத்து, நம் மனங்களைக் கவர்ந்துள்ளார். அவரது இயல்பான பேச்சும், முதிர்ச்சியான நடிப்பும், அலட்டாத உடல்மொழியும், இப்படியொரு கலெக்டர் நமக்கு வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பாராட்டுகள் அருள்நிதி!

இப்படக்கதையின் முதன்மை கதாபாத்திரமான சிறுமி குறிஞ்சியாக பேபி கிருத்திகா நடித்திருக்கிறார். அவரது உருவம் போலவே அவரது யதார்த்தமான நடிப்பும் அழகாக இருக்கிறது. தனது காடர் மொழி மற்றவர்களுக்குப் புரியவில்லை என்றாலும், படிப்புக்காக ஏங்கி அம்மொழியில் அவர் முன்வைக்கும் கோரிக்கை கல் மனதையும் கரைய வைக்கும். எமோஷனல் காட்சிகளில் நம்மை அழ வைத்திருக்கும் கிருத்திகா விரைவில் பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பது நிச்சயம்.

சிறுமி குறிஞ்சியின் பெற்றோராக, காடர் பழங்குடியின தம்பதி கந்தன் - அமர வள்ளியாக ஆரவ் - ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். எளிய மக்களின் பிரதிநிதிகளாக சிம்பிள் மேக்கப்பில் நடித்து கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே அழகான காதலையும் வெளிப்படுத்துகிறார்கள்.

பத்திரிகையாளர் தன்ராஜாக வரும் காளி வெங்கட், கபட ரேஞ்சர் பாண்டியனாக வரும் ஜான் விஜய், கலெக்டரின் பி.ஏ சந்திரனாக வரும் விடிவி கணேஷ், மற்றும் பருத்தி வீரன் சரவணன், வினோதினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகன். தன்னுடைய முதல் படமாக 'தேன்' என்ற அற்புதமான படத்தைக் கொடுத்த இந்த இயக்குநர், தன்னுடைய இரண்டாவது படமாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆசியாவின் பழமையான மொழியான காடர் மொழியைத் தெரியப்படுத்தி, அரசியல்வாதிகளின் பார்வையும், அரசதிகாரிகளின் பாதமும் படாத இடங்களில் வாழும் பழங்குடியின மக்கள் சார்பாக நின்று, அவர்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை, எவ்வித பாசாங்கும் இல்லாமல், உண்மைக்கு நெருக்கமாகத் திரையில் படைத்துக் காட்டி மிகப் பெரிய சேவை செய்திருக்கிறார். படத்தில் இவர் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு ஏற்று ஆவன செய்தால், அதுவே இவருக்கும், படத்துக்கும் பெரிய வெற்றியாக இருக்கும். பாராட்டுகள் இயக்குநர் கணேஷ் விநாயகன்.

ஒளிப்பதிவு அரக்கன் எம்.சுகுமாரின் கேமரா மலைகளின் உயர்ந்தோங்கிய அழகையும், மலைவாழ் மக்களின் பரிதாப வாழ்க்கையையும் பார்வையாளர்களிடம் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் கதைக்கேற்ப அமைந்துள்ளன. பின்னணி இசையில் அவரது தனி முத்திரை தெரிகிறது.

லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு, உண்மை நிகழ்வுகளை உணர வைக்கும் விதத்தில் படத்தை நகர்த்தி செல்கிறது.

லால்குடி இளையராஜாவின் கலை இயக்கம் கச்சிதம்.

'அருள்வான்' - அனைவரும் அவசியம் ஆதரிக்க வேண்டிய படம்; குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழுங்கள்!

ரேட்டிங்: 4/5

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hero News Online