Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நல்ல படம் - விமர்சனம்

நல்ல படம் - விமர்சனம்

டிப்பு: டாக்டர் ஏ ஹரிஷ் அழகுபாண்டியன், தனலட்சுமி, மொட்ட ராஜேந்திரன், கல்கி ராஜா, பிரியதர்ஷினி, ரமா ராஜேந்திரா மற்றும் சிலர்

எழுத்து & இயக்கம்: சி.பிரபு ராம்

ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹாரிஸ்

இசை: சகிஷ்னா சேவியர்

பாடல் வரிகள்: பொத்துவில் அஸ்மின்

தயாரிப்பு: ஏ.அழகுபாண்டியன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

எந்நேரமும் மது அருந்துவதை வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் கொண்டிருப்பவர் கதையின் நாயகன் குமரன் (டாக்டர் ஏ ஹரிஷ் அழகுபாண்டியன்). பார் உரிமையாளரான அவர், தன் குடிகார நண்பர்களோடு சேர்ந்து 'மதுபிரியர் மறுமலர்ச்சி சங்கம்' என்ற ஒன்றை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். குமரன் திருந்த வேண்டும் என்று விரும்பும் அவரது அம்மா, தங்கை, மற்றும் காதலி தனலட்சுமி (தன லட்சுமி) ஆகியோர் அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும் அவர் திருந்துவதாக இல்லை.

இந்நிலையில், வெகுமக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள (!) ஒன்றிய பாஜக அரசின் பிரதமர், பெண்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரலுக்கு செவி சாய்த்து (!), நாடு முழுவதும் மதுவுக்குத் தடை விதித்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக அறிவிக்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் குமரன் மற்றும் அவரது சங்க உறுப்பினர்களின் வாழ்நிலை தலைகீழாக மாறுகிறது.

ஒரு சொட்டு மது கூட கிடைக்காமல் அவர்கள் படாதபாடு படுகிறார்கள். கள்ளச் சாராயம் உற்பத்தி செய்ய முயன்று, அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் திண்டாடுகிறார்கள். "மதுக்கடைகளைத் திற; மது விலக்கை ரத்து செய்" என்று தெருவில் இறங்கி ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

அதன்பிறகு என்ன நடந்தது? ஒன்றிய அரசு இறங்கி வந்ததா? அல்லது குமரனும் அவரது சகாக்களும் திருந்தி மது அருந்தாமல் வாழப் பழகினார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவையுடனும், அதீத கற்பனையுடனும் விடை அளிக்கிறது 'நல்ல படம்' திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, மதுபிரியர் மறுமலர்ச்சி சங்கத் தலைவர் மற்றும் பார் உரிமையாளர் குமரனாக டாக்டர் ஏ ஹரிஷ் அழகுபாண்டியன் நடித்திருக்கிறார். வீட்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தன் அம்மா மற்றும் தங்கை எதிரிலேயே மது அருந்தி அட்டகாசம் செய்வது, தன் குடிகார சங்க உறுப்பினர்களோடு சேர்ந்து அலப்பறையைக் கூட்டுவது, காதலியிடம் "இனி நான் குடிக்க மாட்டேன்" என்று சத்தியம் செய்துவிட்டு மறுபடியும் குடிப்பது என்பன போன்ற ரகளையான காட்சிகளில் அருமையாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். பொறுப்புணர்வு ஏற்பட்ட பிறகு வரும் காட்சிகளில் உணர்வுபூர்வமாக நடித்து, கவனம் ஈர்த்துள்ளார்.

நாயகனின் காதலி 'தனலட்சுமி'யாக தனலட்சுமி நடித்திருக்கிறார். நாயகனை காதலிப்பது மற்றும் அவரை திருத்த முயல்வது ஆகிய தன்மைகளை உள்ளடக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக வரும் ரமா ராஜேந்திரா, மற்றும் மொட்ட ராஜேந்திரன், கல்கி ராஜா, பிரியதர்ஷினி, மனைவி இறந்தது கூட தெரியாமல் தொடர்ந்து குடிக்கும் நபர் உள்ளிட்ட மதுபிரியர் மறுமலர்ச்சி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சி.பிரபு ராம். மதுபிரியர்களின் லூட்டியைக் காட்சிப்படுத்தி, கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஒன்றிய பாஜக அரசு " நாடு தழுவிய பூரண மதுவிலக்கை" கொண்டு வருவதாக அதீத கற்பனை செய்து, அதீத விசுவாசத்தைக் காட்டியிருக்கும் இயக்குநர், அப்படிபூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்தினால் மதுபிரியர்கள் என்ன பாடு படுவார்கள் என்பதையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். எனினும், திரைக்கதையில் அழுத்தம் இல்லாததாலும், போதுமான அளவு நகைச்சுவை இல்லாததாலும், நாடக பாணியில் படம் நகருவது பெரிய குறை.

சகிஷ்னா சேவியரின் இசை, இனியன் ஜே ஹாரிஸின் ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் திரைக்கதையோடு சேர்ந்து பயணித்திருக்கின்றன.

'நல்ல படம்' - ஒருமுறை பார்க்கலாம்!

ரேட்டிங்: 2.75/5.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hero News Online