நடிப்பு: சித்து, தர்ஷிகா, ரித்விகா, பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், விஜய் சத்யா, சாப்ளின் பாலு மற்றும் சிலர்
எழுத்து & இயக்கம்: பாலாஜி
ஒளிப்பதிவு: மணிகண்டன் பி.கே
படத்தொகுப்பு: ராஜா ஆறுமுகம்
இசை: சக்தி பாலாஜி
பாடல் வரிகள்: லாவர்தன்
தயாரிப்பு: கோதை என்டர்டெயின்மென்ட் & எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி
பத்திரிகை தொடர்பு: சக்தி சரவணன்
தமிழ்நாடு - கேரளா எல்லையில் இருக்கும் 'மேக்கரை' என்ற மலை கிராமத்தில், ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜூன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் கொலையுண்டு இறப்பது வழக்கமாக இருக்கிறது…
…பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இக்கிராமத்தில் வாழ்ந்த வனமங்கை என்ற பெண்ணை தசரதன் என்பவர் காதலித்ததாகவும், ஒருநாள் தன் காதலியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட அவர், காதலியை உயிரோடு எரித்துவிட்டதாகவும், அப்போது மரண வேதனையில் அந்த காதலி வனமங்கை விடுத்த சாபத்தால் தான், ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜூன் மாதத்தில் அவ்வூர் ஆண்கள் மர்மமான முறையில் கொலையுண்டு இறப்பது வழக்கமாக இருப்பதாகவும், வனமங்கையின் கோபத்தைத் தணிக்க அவ்வூர்மக்கள் அவருக்கு சிலை வைத்து பூஜைகள் செய்து வருவதாகவும், இதனால் மர்மக்கொலையில் இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்ததேயொழிய முற்றாக நின்றுவிடவில்லை - இப்போதும் தொடர்கிறது என்றும் மக்கள் அச்சத்துடன் நம்புகிறார்கள்.
அப்படி அவர்கள் அஞ்சி நடுங்கும் ஒரு ஜூன் மாதத்தின் தொடக்கத்தில், அவர்களது சாப - அமானுஷ்யக் கதைகளில் நம்பிக்கை இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டர் இளம்பாரி (சித்து), மேக்கரை போலீஸ் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்பதற்காக தன் மனைவி உமையாள் (தர்ஷிகா) மற்றும் கைக்குழந்தையுடன் வருகிறார். பூட்டிக்கிடக்கும் அவ்வூர் நாட்டாமையின் (வேல ராமமூர்த்தி) வீட்டில் குடும்பத்துடன் குடியேறுகிறார். அவ்வூரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அழகு (பிரதீப்), தன் ஊர் பற்றி இன்ஸ்பெக்டர் இளம்பாரிக்குத் தேவையான தகவல்களைச் சொல்லி, அவருக்கு உதவியாகவும், துணையாகவும் இருக்கிறார்.
இந்நிலையில், அந்த ஊரில் இளம்பெண் ஒருவர் மாயமாகி விடுகிறார். அந்த வழக்கு குறித்து இன்ஸ்பெக்டர் இளம்பாரி விசாரிக்கும்போது, அந்த பெண் ஓர் இளைஞரைத் தேடி சென்ற தகவல் தெரிய வருகிறது. அந்த இளைஞரை விசாரிப்பதற்காகச் சென்றால், அவரும் மாயமாகியிருப்பது தெரிய வருகிறது. இதற்கிடையே, மாயமான பெண்ணின் தோழியும் மாயமாகி விட, இந்த மூவரும் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்படுகிறார்கள்.
எந்தவித தடயங்களும் இல்லாமல், மூன்று கொலைகள் தொடர்பான வழக்கை இன்ஸ்பெக்டர் இளம்பாரி விசாரித்துக் கொண்டிருக்கும்போது, ஏற்கெனவே கொலையுண்ட இளைஞரின் நண்பர் தன் வீட்டுக்குள்ளேயே ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதையும், தன் மனைவி உமையாள் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் இளம்பாரி.
கேரள சிறையில் இருந்து தப்பித்த சைக்கோ கொலையாளி தான் இந்த ஐந்து கொலைகளை செய்திருப்பதாகவும், அவன் கேரள காவல் துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறி காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த ஐவர் கொலை வழக்கை முடித்து வைக்கிறார்கள்.
ஆனால், இதை ஏற்க மறுக்கும் இளம்பாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும் இந்த கொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்க, அதை அவர் எப்படி கண்டுபிடித்தார்? கொலையாளி யார்? வனமங்கையா, அல்லது வேறு நபரா? எதற்காக இந்த கொலைகள்? என்பன போன்ற கேள்விகளுக்கு, யூகங்களையெல்லாம் பொய்யாக்கும் திருப்பங்களோடும், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லரோடும் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் மீதிக்கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் இளம்பாரியாக சித்து நடித்திருக்கிறார். சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்திருக்கும் சித்து, மிகையான ஹீரோயிசம் இல்லாத, ஆனால் அழுத்தமான கதாபாத்திரத்தில், கதைக்குள் நாயகனாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மர்மக்கொலைகளைத் துப்புத் துலக்க அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ரசிப்புக்கு உரியவையாக இருக்கின்றன.
இன்ஸ்பெக்டர் இளம்பாரியின் மனைவி உமையாளாக தர்ஷிகா நடித்திருக்கிறார். சிரித்த முகமும், இடுப்பில் கைக்குழந்தையுமாக பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கிறார். அளவோடு நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் அகால முடிவு காரணமாக அவர் பார்வையாளர்களின் அனுதாபங்களை அள்ளிக்கொள்கிறார்.
கணவரை இழந்த இளம் விதவையாக கனி என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்திருக்கிறார். தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி முற்றிலும் வித்தியாசமான மிக முக்கிய கதாபாத்திரத்தில் இதில் அருமையாக நடித்து, கதையின் திருப்பங்களுக்கு காரணமாக இருக்கிறார்.
கான்ஸ்டபிள் அழகு கதாபாத்திரத்தில் பிரதீப் நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பகுதியில் அமைதியாக இருந்துவிட்டு கடைசியில் நிறம் மாறும் கதாபாத்திரத்தில் ஜமாய்த்திருக்கிறார்.
ஊர் நாட்டாமையாக வரும் வேல ராமமூர்த்தி, டாக்டராக வரும் நிழல்கள் ரவி, மற்றும் ஜெயக்குமார், அருள் டி சங்கர், விஜய் சத்யா, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி. அமானுஷ்யமான சம்பவங்கள், 'தி டார்க் ஹெவன்' என்ற மர்மமான புத்தகம், சில மர்மக் கொலைகள், பழங்காலத்திய கதைகள்… இவற்றினூடாக இப்போது பார்வையாளர்கள் கண் முன்னே நடக்கும் சில மர்ம மரணங்கள்… என்று அனைத்திற்கும் ஒரு தொடர்பினை முடிச்சாக்கி இறுதி வரையிலும் பார்வையாளர்களை சீட் நுனியில் அமர்ந்து, பரபரப்புடன் நகம் கடித்தபடி படத்தை பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு சமயத்தில் சந்தேகப்படும் அளவுக்கு மிக நுணுக்கமாக திரைக்கதை அமைத்து, கடைசி வரை சஸ்பென்ஸை கட்டிக்காத்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்கு உரியவர்.
ஒரு கிரைம் சஸ்பென்ஸ் அமானுஷ்யத் திரில்லருக்கு தேவையான நேர்த்தியான ஒளிப்பதிவை பி.கே.மணிகண்டனும், மிரட்டலான பின்னணி இசையை சக்தி பாலாஜியும், குழப்பம் இல்லாத படத்தொகுப்பை ராஜா ஆறுமுகமும் தரமாக வழங்கி, இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
'தி டார்க் ஹெவன்' - சுவாரஸ்யமான, விறுவிறுப்பான திரில்லர் விரும்பிகளுக்கு செம விருந்து!
'ரேட்டிங்: 4/5

