Dailyhunt
ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம்

ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம்

Courtesy: பா.பிரியங்கன்

னந்தபுரம் - இது ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம்.

காலம் ஈழத் தமிழர்களை வஞ்சித்து அவர்களின் தேசத்தை பறித்து, ஆன்மாவை அலைக்களித்து, அனாதிகளாக்கி, அவர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி ஆண்டுகள் கடந்தும், என்றும் தனது இருப்புக்காய் போராடியே ஆக வேண்டிய காலக்கட்டாயத்தை தவிர்த்து விட முடியவில்லை.

ஒரு இனமாக ஈழத்தமிழர்களின் இழப்புக்கள் வார்த்தைகளால் வகைப்படுத்த முடியாது. புண்பட்டு, புதைக்கப்பட்டு, அடையாளங்கள் அழித்தொழிக்கப்பட்ட இந்த இனத்தின் நம்பிக்கையாய் காலம் தந்த கடவுளையும் தொலைத்துவிட்டு, இன்று வீதி சண்டையிடும் பரிதாப நிலையில் ஈழத் தமிழினம் இருந்தாலும், இன்றைக்கு ஒரு தசாப்தங்கள் முன்புவரை உலகமே வியந்த போரியல் பண்பாட்டு உச்சத்தைப் பெற்றிருந்தவர்கள் நாம்.

மண்டியிடா மாண்பு

அப்படியான ஒரு போரியல் மரபின் நிகழ்ச்சியில், இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் தமிழன் அடிபணிவதும் இல்லை, யாருக்கும் எப்போதும் மண்டியிடப் போவதும் இல்லை என்ற பேருண்மையை சிறிலங்கா அரசுக்கும் சர்வதேச நாடகதாரிகளுக்கும் தோலுரித்துக் காட்டிவிட்டு தங்களை தியாகித்தது தமிழர் சேனையும் அதன் போரியல் மரபும்.

ஆனந்தபுரம் - ஈழத் தமிழர் ஆன்மாவில் வேரூன்றிப் போன, மறந்து கடந்து விட முடியாத ஒரு சமர்க்களத்தின் கதை அது. ஈழத் தமிழ் பிள்ளைகளிடத்தில் காலம் காலமாக கடத்த வேண்டிய மண்டியிடா ஈழத்தமிழர் மாண்பும், அவர்களை அழித்து ஒழிக்க போரியல் ஒழுக்கத்தை மீறி அம்மணமாய் நின்ற ஒரு அரசின் கதை.

உலகமே சேர்ந்து ஒரு இனத்தைப் படுகொலை செய்த அத்தியாயம் ஒன்றில் ஈழத் தமிழினத்துக்கு அநியாயம் இழைத்த இன்னும் ஒரு பாகம்தான் ஆனந்தபுரம் சமர்.

2009 மார்ச் மாதமும் அதன் நெருப்பு நாட்கள்

2009 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆனந்தபுரம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த பெரு வீரத்தின் போர்நில காட்சிகள் கந்தகத்தையும் பொஸ்பரசு குண்டுகளையும் நிறைத்து நின்ற நாட்கள் அவை.

ஈழத் தமிழினம் தனது 30 ஆண்டு கால உரிமைப் போரை ஒரு கட்டத்தில் எல்லைக்குட்படுத்தி அடுத்த கட்டத்துக்கு கையகப்படுத்த வேண்டிய கால நிர்பந்தத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நாட்கள் அவை.

புலிவீரத்தின் பிரதாபங்கள் பேசப்பட்ட தளபதிகளும், ஈழத் தமிழினத்தின் ஒப்பற்ற காலக் கடவுளும், மண்ணையும் மக்களையும் மட்டுமே நேசித்த போராளிகளும் என யாவரும் ஒரு பெட்டிக்குள் முடக்கப்பட்டு, 'முடிவுறுத்தியே ஆகுவோம்' என்ற எதிரியின் முழுமூச்சான போர் விதி மீறல்களும் ஒன்றாகிப் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

தொடர்ந்து எதிரிகளின் நிலைகளை அழித்து பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய போதும், படைபலம் மிகைப்படுத்தப்பட்டு பாரிய எண்ணிக்கையிலான ராணுவங்களை அந்த நிலமெங்கும் குவித்திருந்தது சிறிலங்கா அரசு.

புலிகள் தரப்பிற்கு இதற்கு மேலும் வளங்கள், செயற்பாடுகள் இருக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்த அரச பயங்கரவாதத்தின் பக்கமாக வல்லாதிக்க அரசுகள் கடல் தடுப்புச் சுவரை ஏற்படுத்தி இருந்த நிலையில், 'இனி எல்லாம் முடிந்துவிட்டது' என்ற ஒரு கட்டத்துக்கு போராளிகளையும் தளபதிகளையும் சிந்திக்க வைக்கும் அளவுக்கு நகர்ந்து கொண்டிருந்தது அந்த நாட்கள்.

இறுதி முயற்சி

வளங்கள் யாவும் தடைப்பட்ட நிலையில் வெறும் ஆட்பல வளத்துடன் ஓய்வு உறக்கமின்றி போரிட்டுக் கொண்டிருந்த போராளிகள் வன்னி பெருநிலப் பரப்பின் பெரும்பகுதியை விட்டு பின்வாங்கி இருந்தனர்.

ஆனாலும் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து, ஒரு புள்ளியிலிருந்து ஒரு மாற்றம் நிகழ்ந்து, தாயக நிலத்தை மீண்டும் அடித்துப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் போராளிகளும் தளபதிகளும் ஏன் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களும் கூட நம்பிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த நிலையில் ஆனந்தபுரம் பகுதியில் மக்கள் பாதுகாப்பு வலயத்துக்கு அப்பால் ஒரு போர்க்களம் ஒன்றை தயார்படுத்தினார்கள். அதுவே ஒரு இறுதி முயற்சி என்ற நம்பிக்கையோடு.

தலைவர் பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் இணைந்த தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்புத் தாக்குதல் ஒன்றை முன்னெடுத்து, எதிரியை ஊடறுத்து உட்சென்று பலமுனைத் தாக்குதல்களுக்கான திட்டமாக அது அமைந்திருந்தது.

புலிகளின் ஒட்டுமொத்தமான பலமும் அங்கு ஒன்று திரட்டப்பட்டு, பேரளவிலான போராளிகள் ஒரு கட்டளையின் கீழ் தமது பல்முனைத் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தார்கள்.

எப்படியாவது இந்த வியூக சதுரத்திலிருந்து உலகத் தமிழினத்தின் உயிருக்கு மேலான, தமது உடல் பொருள் ஆவி யாவற்றையும் அர்ப்பணித்த தலைவரை காப்பாற்ற வேண்டும், தாயக நிலத்தின் தடங்களில் அந்த மன்னாதி மன்னனை ஆள வைத்து வாழ வேண்டும் என்று ஒற்றை ஓர்மத்தோடு போராட தயாரானார்கள்.

காவியமான புதல்வர்கள்

அதன்படியான தாக்குதல் மிகப்பெரும் இழப்புக்களை அரச படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டு தலைவரை அந்த வியூக வலைக்குள் இருந்து வெளியேற்றி ஒரு அதிரடியான தாக்குதலை முன்னெடுத்தார்கள் விடுதலைப் புலிகள்.

இதன்போது நாம் ஒவ்வொருவருக்குமான தாயக கனவுடன் சாவினைத் தழுவ தயாரான பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியர் துர்கா உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் - மேற்குறித்த ஏழு பிரிகேடியர்கள், 19 கேர்னல்கள், 111 லெஃப்டினன்ட் கேர்னல்கள், 252 மேஜர்கள் உட்பட 689 போராளிகள் நெஞ்சுரத்தோடு போராடி தமது இறுதி மூச்சை தாயக நினைவோடு கலந்து போயினர்.

நம் கண்ணீரில் இன்றும் துளிர்த்துக் கொண்டிருக்கும் தேசத்துக்காக, இதே போன்ற அந்த நாட்களில் தமிழினத்தின் ஒப்பற்ற போரியல் நாயகர்களான அந்த தளபதிகளை, புலிகளின் கோர தாக்குதல்களை முறியடிக்க வக்கற்று மனித குலத்துக்கு ஒவ்வாத வெண் பொஸ்பரசு குண்டுகளையும் கந்தக குண்டுகளையும் ஆனந்தபுரம் மண்ணின் மீது வீசி எறிந்தார்கள்.

முழுவதுமாக நச்சுக்குண்டுகளின் புகைகள் நிறைத்துவிட்ட போதும், 'தேசத் தலைவனை காத்துவிட்டோம்' என்ற இறுதி இலக்கின் மீதான ஆத்ம திருப்தியோடு அடங்கிப் போனார்கள்.

வரலாற்றின் பேர் அத்தியாயம்

சொல்லப்போனால் ஈழத் தமிழினம் சந்தித்தே இருக்கக்கூடாத ஒரு நாள் அது. அடிமையின் அடிமைக்கும் அடிமையாய் இருந்த நம்மில், நாம் யாருக்கும் அடிமை இல்லை என்று புதிய பரணி பாடிய தமிழர் தேசிய ராணுவத்தை கட்டமைத்து வளர்த்து, உலகமே வியந்து பொறாமை கொண்டு அழித்து ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு ஒப்பற்ற ஒரு போர்ப்படையைத் தலைவரின் கனவுக்குச் செயற்பட்ட கரங்களான எங்கள் தளபதிகள் தங்களை இறுதியில் எங்களுக்காக அர்ப்பணித்து தாயக மண்ணின் காற்றில் காவியமாகிப் போனார்கள்.

காலம் நிகழ்த்திய ஓரவஞ்சனைப் போரில் இந்த உலகில் எந்த ஒரு அரசும் கொண்டிராத காவியப் புதல்வர்களைப் பிரசவித்த நம் ஈழத்தாய், நஞ்சுப்புகை மயக்கத்தில் கிடந்த புதல்வர்களை அணைத்துக் கொண்டாள்.

ஆனந்தபுரம் ஈழத் தமிழரின் போராட்டத்தில் ஒரு தோல்வியின் அடையாளம் அல்ல; அது மண்டியிடாத தமிழர் வீரத்தின் அத்தியாயம்.

எமது அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய ஒரு ஓர்மத்தின் கதை. சமரசம் செய்து வாழ்வதிலும் பார்க்க சமாதி வாழ்வதே மேல் என்று இந்த உலகத்துக்கும் அதன் வல்லாதிக்க சக்திகளுக்கும் அவற்றின் செவிப்பறைகளில் உரத்துச் சொல்லிவிட்டுப் போன செய்தி.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 04 April, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil