யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் உணவு வழங்கும் வெளிநபர்களின் உணவுகள் குறித்து திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு (30) இவ்வாறு பரிசோதனையை மேற்கொண்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், திருநெல்வேலி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் வெளி நபர்கள் நீண்டகாலமாக உணவு வழங்கி வருகின்றனர்.
தொடர்ச்சியான முறைப்பாடுகள்
இந்தநிலையில், குறித்த பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனுக்கு இவர்கள் தொடர்பில் தொடர்ச்சியான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு விடுதிகளுக்கு உணவு வழங்குவோரிடம் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

குறித்த பரிசோதனையின் போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதோடு, குறைபாடுகளை விரைந்து நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், எதிர்காலத்தில் தொடர்ந்து குறைபாடுகள் இனங்காணப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

