அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க செயற்கைக்கோள் படமெடுக்கும் நிறுவனமான பிளானட் லேப்ஸ், ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மோதல் பகுதியின் காட்சிகளை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட பிளானட் லேப்ஸ், அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் இந்த முடிவை அறிவித்ததுள்ளது.
மோதல் பகுதியின் படங்களை காலவரையின்றி நிறுத்தி வைக்குமாறு அனைத்து செயற்கைக்கோள் படமெடுக்கும் நிறுவனங்களையும் அமெரிக்க அரசாங்கம் கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளது.
மத்திய கிழக்கு படங்கள்
இந்தக் கட்டுப்பாடு, கடந்த மாதம் பிளானட் லேப்ஸ் விதித்த மத்திய கிழக்கு படங்களின் மீதான 14 நாள் தாமதத்தை விரிவுபடுத்துகிறது.

இந்தத் தாமதத்தின் நோக்கம், எதிரிகள் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் தாக்குவதற்கு அப்படங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி வரையிலான படங்களை நிறுத்தி வைப்பதாகவும், மோதல் முடிவடையும் வரை இந்தக் கொள்கை நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பிளானட் லேப்ஸ் கூறியுள்ளது.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் இராணுவப் பயன்பாடுகளில் இலக்குகளை அடையாளம் காணுதல், ஆயுதங்களை வழிநடத்துதல், ஏவுகணைகளைக் கண்காணித்தல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் எதிரிகள் மூலம் பெறப்பட்ட படங்கள் உட்பட, வணிக ரீதியான படங்களை ஈரான் அணுகக்கூடும் என்று சில விண்வெளி வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதன்படி இது குறித்த உளவுத்துறை தொடர்பான விடயங்களில் கருத்துத் தெரிவிக்க மாட்டோம் என்று பென்டகன் கூறியுள்ளது.

