புதிய இணைப்பு
2020-ல் அமெரிக்காவால் கொல்லப்பட்ட, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உயர் பதவியில் இருந்த தளபதி காசெம் சுலைமானியின் மருமகள், அவரது மகளுடன் சேர்த்து கைதுசெய்யப்பட்ட நிலையில் இருவரும் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் அமெரிக்காவில் வசித்து வந்தபோது, (அஃப்ஷர்) ஈரானிய ஆட்சியின் பிரசாரத்தை ஊக்குவித்தார், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் மற்றும் இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களைக் கொண்டாடினார், புதிய ஈரானிய உச்ச தலைவரைப் புகழ்ந்தார், அமெரிக்காவை 'மாபெரும் சாத்தான்' என்று கண்டித்தார், மேலும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஈரானிய புரட்சிகர காவலர் படைக்கு தனது அசைக்க முடியாத ஆதரவைத் தெரிவித்தார்," என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், அஃப்ஷர் தனது குழந்தையுடன் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மறைந்த தளபதி ஜெனரல் காசெம் சுலைமானியின் மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஹமிதே சுலைமானி அஃப்ஷார் மற்றும் அவரது மகளின் சட்டபூர்வ அமெரிக்க நிரந்தர குடியுரிமை அந்தஸ்து, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவால் இரத்து செய்யப்பட்டதாக இன்று(04)சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவுச் செயலரின் பதிவு
சமூக ஊடகத்தில் இட்ட ஒரு பதிவில், அந்த இரு பெண்களும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் வரை, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்க துறை (ICE) காவலில் இருப்பதாக ரூபியோ கூறியுள்ளார்.

ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சுலைமானி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் முதலாவது பதவிக்காலத்தின்போது ஈராக்கில் நடந்த அமெரிக்க வான்வழித் தாக்குதலில் (2020-ல்) கொல்லப்பட்டார்.
சுலைமானி அஃப்ஷார் "ஈரானில் உள்ள சர்வாதிகார, பயங்கரவாத ஆட்சியின் வெளிப்படையான ஆதரவாளர்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
சுலைமானி அஃப்ஷார் தனது சமூக ஊடக கணக்கில் "ஈரானிய ஆட்சியின் பிரச்சாரத்தை" ஊக்குவித்ததாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
பாக்தாத் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார்
சுலைமானி அஃப்ஷரின் கணவருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை, சுலைமானி அஃப்ஷரின் மகள் அல்லது கணவரின் பெயர்களை வெளியிடவில்லை.

ரூபியோவும் X தளத்தில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்தார், அதில் சுலைமானி அஃப்ஷரும் அவரது மகளும் "கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார்கள்" என்று கூறியிருந்தார்.
ஜெனரல் காசெம் சுலைமானி, ஈரானின் உயர்மட்ட குட்ஸ் படையின் தலைவராக, மத்திய கிழக்கில் ஈரானிய இராணுவ நடவடிக்கைகளை முன்னின்று நடத்தினார். 62 வயதான அவர், ஈரான் ஆதரவு பெற்ற மற்ற போராளிகளுடன் பாக்தாத் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார்.
நினைவு கூர்ந்த ட்ரம்ப்
புதன்கிழமை தனது நாட்டு மக்களுக்கான உரையின் போது, ஜனாதிபதி ட்ரம்ப், அந்தத் தளபதி மீது தான் உத்தரவிட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு, சுலைமானி பற்றிப் பேசினார்.

"எனது முதல் பதவிக்காலத்தில் ஜெனரல் காசெம் சுலைமானியைக் கொன்றேன். அவர் ஒரு தீய மேதை, புத்திசாலி, ஆனால் ஒரு கொடூரமான மனிதர். சாலையோர வெடிகுண்டுகளின் தந்தை, அவர் வாழ்ந்த விதம் மிகவும் கொடூரமானது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
சுலைமானி இன்னும் உயிரோடு இருந்திருந்தால், போரில் ஈரான் ஒருவேளை மிகவும் சிறந்த, வலிமையான நிலையில் இருந்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

