இலங்கையில் செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு யுத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது.
பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.
எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.
டீசலை சந்தைக்கு விநியோகித்தல்
அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம். ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.

எனவே, மேலும் ஏற்படும் விலை அதிகரிப்பை எரிபொருள் பாவனையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என தெரிவித்தார்.

