Dailyhunt
இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு : சீனாவிலிருந்து வரும் கப்பல்

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு : சீனாவிலிருந்து வரும் கப்பல்

லங்கையில் தற்போது நிலவும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இந்த ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது 'சினோபெக்' நிறுவனத்தின் வழமையான இருப்புகளுக்கு மேலதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேரடி ஒப்பந்தங்கள்

அத்துடன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக ரஷ்யாவுடன் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க விசேட தூதுவரிடம் கோரிக்கை

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், அங்கிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதியை வழங்குமாறு இலங்கை அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

அமெரிக்க விசேட தூதுவர் செர்ஜியோ கோர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய 30 நாள் சலுகைக்காலம் ஏப்ரல் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. எனினும், குறைந்தது மூன்று மாத கால அனுமதியாவது கிடைத்தால் மட்டுமே ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தைத் தொடர முடியும் என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil