Dailyhunt
மருத்துவ பரிசோதனைகளுக்காக கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான்

மருத்துவ பரிசோதனைகளுக்காக கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான்

புதிய இணைப்பு

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இன்று கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட பிள்ளையானை சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான், இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

முதலாம் இணைப்பு

குற்றப்புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கொழும்பு நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்காக இன்றைய தினம் (02.04.2026) அவர் சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் விசாரணைகளுக்குப் பிறகு, அவர் அங்கிருந்து மீண்டும் அழைத்து செல்லப்பட்டு பின்னர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட அவர், ஏப்ரல் 12 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் சி.ரவிந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil