Dailyhunt
சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர : வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர : வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

தற்போதைய உலகப் போர்ச் சூழலினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

இதன்போது எரிபொருள் மற்றும் வலுசக்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எரிபொருள் செலவினங்களுக்கு ஏற்ப விலைகளைத் திருத்தியமைக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், சந்தைப் பெறுமதிக்கு இணங்க, தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, "எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கடுத்த அண்மைய தினமொன்றில் எரிபொருளுக்கான புதிய செலவு அடிப்படையிலான விலைக் சூத்திரத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

அந்தச் செலவு முந்தைய மாதத்தின் உண்மையான தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது, உண்மையான செலவைக் கணக்கிட்டு, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கவும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரை மானியம் வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.

இதன்படி கணக்கிடும் போது, ஒரு மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய், அதாவது 2,000 கோடி ரூபாய் செலவாகும். மூன்று மாதங்களுக்கான இந்த முன்மொழிவை நாங்கள் தயாரித்துள்ளோம். இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே இந்த மானியங்களை நாம் வழங்க வேண்டும்." என தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil