தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை தக்கவைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வரும் பின்னணியில், ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது.
இதுதொடர்பான கடிதத்தில், த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் தரப்பில் வெற்றிபெற்ற 5 பேரும் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை த.வெ.க தலைவர் விஜயிடம் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து த.வெ.க பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. மேலும் த.வெ.க அமைச்சரவையில் காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் ஆசனம் ஒதுக்க முடிவு என இந்திய ஊடகங்கள் விளக்கியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மை பெறுவதற்கு 10 இடங்கள் குறைவாகப் பெற்றதால், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் டிவிகே கட்சி, அரசாங்கத்தை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதன்படி காங்கிரஸ், பாமக, இடதுசாரிக் கட்சிகள், சிபிஎம் மற்றும் விசிக போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவை டிவிகே நாடுவதாகவும், இந்த ஆதரவு ஒன்றுசேர்ந்து கட்சி பெரும்பான்மை இடங்களைக் கடக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தவெக-விற்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விஜய் தலைமையில் ஆட்சி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள் குழுவின் கூட்டம் நேற்று நள்ளிரவில் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் விஜய் தலைமையில் ஆட்சி அமைவதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தவெக எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற முக்கிய நிபந்தனையையும் காங்கிரஸ் விதித்துள்ளது.
விஜய்யின் அரசில் இரண்டு அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவை என்டிடிவி-க்கு உறுதிப்படுத்திய காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், "அரசு அமைப்பதில் டிவிகே-க்கு ஆதரவளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அரசியல் விவகாரக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
திமுக கடும் எதிர்ப்பு
காங்கிரஸின் இந்த முடிவிற்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தங்களது கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் 'முதுகில் குத்திவிட்டதாக' திமுக பேச்சாளர் சரவணன் விமர்சித்துள்ளார்.
இருப்பினும், இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில்கள் எதுவும் வெளிவரவில்லை.

