Dailyhunt
த.வெ.க.வுக்கு ஆதரவு: எடப்பாடி இல்லத்தில் என்.ஆனந்த்..! உச்சக்கட்ட பரபரப்பில் களம்

த.வெ.க.வுக்கு ஆதரவு: எடப்பாடி இல்லத்தில் என்.ஆனந்த்..! உச்சக்கட்ட பரபரப்பில் களம்

புதிய இணைப்பு

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

5 ஆண்டுகள் வலுவான ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை

இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறுகையில், "ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்பட கட்சியின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக வெளியான தகவல் தவறு.

ஆதவ் அர்ஜுனா நிறுவனத்திற்கு சொந்தமான காரில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றவர்கள் தவெக நிர்வாகிகள் இல்லை" என்று கூறினார்.

முதலாம் இணைப்பு

இன்று நடைபெறவிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) எம்.எல்.ஏக்கள் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் த.வெ.க. 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பின்னணியில் பேச்சுவார்த்தைகள்

த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தவெகவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil