உக்ரைனின் தலைநகரான கீவில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், அங்குள்ள இரண்டாவது முக்கிய பாலத்தின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை (03) காலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 'வடக்கு பாலம்' மீதான வீதிப் பகுதியும், அங்குள்ள மின்சாரப் பேருந்துகளுக்கான மேல்நிலை மின் கம்பிகளும் சேதமடைந்ததனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரஷ்ய ட்ரோன்களால் நகரின் மற்றொரு முக்கிய பாலமான தெற்கு பாலம் பலமுறை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்து
தெற்குப் பாலத்தின் மீதான தாக்குதல்களால் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது; அப்பாலத்தின் வழியாகச் செல்லும் மெட்ரோ மற்றும் கார் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று டெலிகிராம் செயலியில் பதிவிட்ட கிளிட்ச்கோ, "வடக்கு பாலம் தாக்கப்பட்டுள்ளது. அவசரகால சேவைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள். பாலத்தின் இடது கரையிலிருந்து வலது கரைக்குச் செல்லும் போக்குவரத்து தற்போது தடைபட்டுள்ளது
தெற்குப் பாலத்தின் மீதான முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, கீவ் பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமையன்று அவசர கூட்டத்தை நடத்தியது.
மொஸ்கோ நகரம் முக்கிய உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் விநியோகக் கட்டமைப்பு, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பிற முக்கிய வசதிகளைத் தாக்கி வருவதால், நகரம் இப்போது மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது" என குறிப்பிட்டுள்ளார்.

