Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாக்குறுதிகளை நிறைவேற்றாத அனுர அரசு : யாழில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அனுர அரசு : யாழில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு

ற்போது ஆட்சியில் உள்ள அனுர அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, எதிர்வரும் 12ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(01)செவ்வாய்க்கிழமை மாலை, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றில் நடைபெற்றது.

தொடந்து ஏமாற்றப்படும் தமிழ் மக்கள்

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையைக் கண்டித்தும், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலும் எதிர்வரும் 12ஆம் திகதி,அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் ஆதரவையும் ஆணையையும் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த அழைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

சொந்த நிலங்களை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டம்

குறிப்பாக வலிகாமம் வடக்கில் பல பகுதிகளில் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளும் எதிர்பார்த்த அளவில் முன்னெடுக்கப்படாமல் பின்னடைவு நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா நிதி உதவி வழங்கியுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான உடன்படிக்கைகள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் கூட அக்கறை காட்டாத நிலை

தேர்தல் காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் கூட அக்கறை காட்டாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் போதிய கரிசனையை வெளிப்படுத்தவில்லை எனவும், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுவதாகக் கூறப்படும் தொல்லியல் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் கண்டித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் *12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில்*, தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil