வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக நேற்று(06) திங்கட்கிழமை குளத்தில் வலையை வீசி விட்டு திரும்பிய பின்னர் மீண்டும் சம்பவ தினமான இன்று(07) செவ்வாய்க்கிழமை காலையில் சென்று வீசிய வலையை மீட்டு மீனை பிடிப்பதற்காக சென்றவர் பகல் ஆகியும் வீடு தீரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர்.
இதன்போது, குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு வலிப்பு நோய் இருப்பதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, சுங்காங்கேணி சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய தம்பிராசா மகேந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

