சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு தயாரிப்பு மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோத மின்னணு சிகரெட்டுக்களுடன் வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நபருக்கு 26 வயது என்பதுடன் அவர் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு சிகரெட்
மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS ரங்கலா கடற்படை முகாமின் கடற்படையினரும், மிரிஹான பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர், மின்னணு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட 130 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வாகனம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

