Dailyhunt
யாழில் சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த ஜி.எல்.பீரிஸ்! விமலேஸ்வரி கடும் கண்டனம்

யாழில் சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த ஜி.எல்.பீரிஸ்! விமலேஸ்வரி கடும் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு கூரல் நிகழ்விற்கு முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அழைக்கப்பட்டமைக்கு ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு கூரல் நிகழ்வில் ஜி.எல்.பீரிஸ் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டமை குறித்து ஊடக சந்திப்பொன்றை நடத்திய அவர் தனது கண்டனத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முறியடித்தவர் ஜி.எல்.பீரிஸ் எனச் சுட்டிக்காட்டிய விமலேஸ்வரி, அன்று விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல் சமாதானத்தை குலைத்த ஒருவரை இன்று சமஷ்டி குறித்து பேச அழைத்திருப்பது வேடிக்கையானது என தெரிவித்துள்ளார்.

டக்ளஸிடமிருந்து அரசியல் பாடம்

இவர்களது இவ்வாறான போக்கு தொடருமானால், வருங்காலங்களில் தந்தை செல்வாவின் நினைவு நிகழ்வுகளுக்கு மகிந்த ராஜபக்ச அல்லது கோட்டபய ராஜபக்ச போன்றவர்களையும் அழைத்து ஒற்றையாட்சியின் அவசியம் குறித்தோ அல்லது முள்ளிவாய்க்கால் வழிமுறைகள் குறித்தோ பேச வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவர் விமர்சித்துள்ளர்.

இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மக்களின் தியாகங்களையும் இழப்புகளையும் மறந்து, கொள்கைப்பற்றின்றி செயற்படுவதாகக் குற்றம் சாட்டிய விமலேஸ்வரி, தமிழ் தேசியத்தைப் பேசியவர்கள் இன்று கூட்டாட்சி பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை கடந்த 30 வருடங்களாக டக்ளஸ் தேவானந்தா கூறி வந்தபோது அவரை எள்ளி நகையாடியவர்கள், இன்று அதே நிலைப்பாட்டுக்கே வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கையில் மாறாது நிற்கும் டக்ளஸ் தேவானந்தாவையே அழைத்து இவர்கள் அரசியல் பாடம் கற்க வேண்டும் என்றும், இன்றைய அரசியல்வாதிகளின் இத்தகைய நகர்வுகள் தமிழ் இனத்தின் இருப்பையும் இலக்குகளையும் சிதைக்கும் செயலாக அமைந்துள்ளதாகவும் அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil