Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!

20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!

"Siuuu..." என்று கைகளை விரித்து குதிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பார்த்து கால்பந்தை காதலிக்கத் தொடங்கிய ஒரு தலைமுறை இன்று வளர்ந்தேவிட்டது.

பள்ளி மைதானங்களில் கோல் அடித்தாலே "Siuuu..." என்று கத்தாத சிறுவர்கள் இருக்க மாட்டார்கள். தெரு கால்பந்து முதல் உலகக் கோப்பை வரை, அவரது கோல் கொண்டாட்டத்தை ஒருமுறையாவது பின்பற்றாத ரசிகர்களும் இருக்க மாட்டார்கள்.

போர்ச்சுகலின் சிறிய தீவான மடெய்ராவில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்த அவர், வறுமையையும் பல சவால்களையும் கடந்து தனது கனவை நனவாக்கியவர். 12 வயதிலேயே குடும்பத்தை விட்டு லிஸ்பனுக்கு சென்று, கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் கடுமையாக உழைத்தார். அந்த உழைப்புதான் அவரை உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக மாற்றியது. அதனால்தான் ரொனால்டோவை உலகம் ஒரு கால்பந்து வீரராக மட்டும் அல்ல, விடாமுயற்சியின் அடையாளமாகவும் பார்க்கிறது.

ஒழுக்கமும் அர்ப்பணிப்புமே ரொனால்டோவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. 40 வயதிலும் உலகத் தரத்தில் போட்டியிடும் அளவுக்கு உடலை பராமரித்தற்கு இந்த ஒழுக்கமே காரணம். திறமை மட்டுமே ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லாது; அதற்கு தொடர்ச்சியான உழைப்பும் தேவை என்பதை நிரூபித்தவர் ரொனால்டோ.

அதுமட்டுமல்ல, அவரது குணத்தை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் இன்றும் கால்பந்து உலகில் அதிகம் பேசப்படுகிறது. 2014-15 லா லிகா தொடரில், ரியல் மாட்ரிட் - ராயோ வாலெகானோ போட்டியில் அடிக்கப்பட்ட ஒரு கோல் ஆரம்பத்தில் ரொனால்டோவின் பெயருக்கு வழங்கப்பட்டது. அந்த சீசனில் கோல்டன் பூட் விருதுக்கான போட்டி கடுமையாக இருந்ததால், அந்த ஒரு கோலும் அவரது சாதனைக்கு முக்கியமானதாக இருந்திருக்கலாம்.

ஆனால், போட்டி முடிந்த பிறகு அந்த பந்து தனது தலையில் படவில்லை என்பதை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன் பிறகு அந்த கோல் உண்மையில் ஷாட் அடித்த கரெத் பேலின் பெயருக்கு மாற்றப்பட்டது. தனக்குச் சொந்தமில்லாத ஒரு கோலை தனது கணக்கில் வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. "அது என் கோல் இல்லை" என்று சொல்லத் தயங்காத அந்த அவரின் நேர்மையை ரசிகர்கள் இன்றும் பேசுவார்கள். அதனால்தான், ரொனால்டோவை ரசிகர்கள் சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவரது குணத்திற்காகவும் கொண்டாடுகிறார்கள்.

மைதானத்தில் மட்டுமல்ல, மைதானத்திற்கு வெளியேயும் ரொனால்டோ பலருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். குழந்தைகளின் மருத்துவ சிகிச்சை, பேரிடர் நிவாரண உதவிகள், சமூக நலப் பணிகள் என பல்வேறு துறைகளில் அமைதியாக உதவி செய்து வருகிறார். மேலும் அவர் உடலில் பச்சைக் குத்தியதில்லை. ஏன் தெரியுமா? அடிக்கடி இரத்த தானம் செய்வார். பச்சைக் குத்தினால் சில காலம் இரத்த தானம் செய்ய முடியாது. அதனால்தான் அவர் அதைத் தவிர்த்தார்.

ரொனால்டோ பற்றி இன்னொரு விஷயம்.. 2021 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரின்போது பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அமர்ந்திருந்த மேசையின் முன், ஸ்பான்சர் நிறுவனமான கோகா-கோலா, இரண்டு கோகா-கோலா பாட்டில்களை வைத்திருந்தது. ரொனால்டோ அவற்றை கையில் எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் காட்டி "Água!" (தண்ணீர்) என்று கூறினார்.

அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. ரொனால்டோவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. நிகழ்வுக்குப் பிறகு கோகா-கோலாவின் சந்தை மதிப்பு குறுகிய நேரத்தில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சரிந்தது. ஒரு வீரரின் தாக்கம் உலகளாவிய பிராண்டுகளுக்குக் கூட எவ்வளவு பெரியதாக இருக்க முடியும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியது.

ரொனால்டோ தனது உடற்தகுதி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டில் மிகவும் கண்டிப்பானவர். குளிர்பானங்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவு மற்றும் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுப்பதே அவரது நீண்டகால வெற்றியின் ரகசியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2006-ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் முறையாக களமிறங்கிய ரொனால்டோ, அதன்பிறகு 2010, 2014, 2018, 2022... இப்போது 2026 என ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் போர்ச்சுகலின் நம்பிக்கையாக திகழ்ந்தார். கோல்கள், சாதனைகள், மறக்க முடியாத வெற்றிகள் என கால்பந்து உலகில் எண்ணற்ற சாதனைகளை கண்டவர்களின் ரொனால்டோவும் ஒருவரே. இவ்வாண்டிலும் கூட உலகக் கோப்பை வரலாற்றில் ஐந்து வெவ்வேறு தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த உலகக் கோப்பையும் ரொனால்டோவுக்கு மிகவும் முக்கியமான தொடராகவே பார்க்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த வீரர்களும், இளம் வீரர்களும் இணைந்த போர்ச்சுகல் அணி கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால், நாக்அவுட் சுற்றில் ஏற்பட்ட தோல்வி, போர்ச்சுகலின் பயணத்திற்கு எதிர்பாராத முறையில் முற்றுப்புள்ளி வைத்தது. இறுதி விசில் ஒலித்ததும் ரசிகர்களை நோக்கி கையை அசைத்தபடி மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம், ஒரு போட்டியில் தோற்ற வீரரின் உணர்வு மட்டுமல்ல; இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சுமந்து வந்த ஒரு கனவு நொறுங்கிய வேதனையாகவே தெரிந்தது.

ஒவ்வொரு உலகக் கோப்பையிலும், "இந்த முறையாவது ரொனால்டோ கோப்பையைத் தூக்குவார்" என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அந்தக் கனவு மீண்டும் நனவாகவில்லை. கால்பந்து அவருக்கு எண்ணற்ற சாதனைகளையும், புகழையும், விருதுகளையும் கொடுத்தது. ஆனால் உலக சாம்பியன் கோப்பையை மட்டும் கடைசி வரை கொடுக்கவில்லை. இறுதி விசிலுக்குப் பிறகு ரசிகர்களை நோக்கி அவர் திரும்பிப் பார்த்த அந்த ஒரு பார்வை, "இவ்வளவுதானா என் உலகக் கோப்பை பயணம்?" என்று அமைதியாகக் கேட்பதைப் போல இருந்தது.

ஒரு வீரர் தோற்றுப் போகலாம். ஒரு அணி வெளியேறலாம். ஆனால் சில தோல்விகள், ஒரு தலைமுறையின் உணர்வாக மாறிவிடும். ரொனால்டோவின் இந்த உலகக் கோப்பை தோல்வியும் அப்படித்தான். உலகக் கோப்பை கோப்பையை அவர் வெல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் அவர் வாழ்கிறார். தோல்வி வந்தாலும் தளராமல் போராட வேண்டும், வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் முயற்சியை கைவிடக் கூடாது என்பதை தனது வாழ்க்கையால் சொல்லிக் கொடுத்தவர் ரொனால்டோ.

கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பையை வெல்ல முடியாத ஜாம்பவான்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறலாம். ஆனால் உலகம் அவரை அதனால் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை. வறுமையை வென்ற மனிதராகவும், ஒழுக்கத்தை வாழ்க்கையாக்கிய வீரராகவும், நேர்மையை மதித்த தலைசிறந்த போட்டியாளராகவும், ஒரு தலைமுறைக்கு கால்பந்து என்றால் என்ன என்பதை கற்றுக்கொடுத்த நாயகனாகவும்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றும் நினைவுகூரப்படுவார். சில நேரங்களில் கோப்பையை வெல்லாதவர்கள்தான், மக்களின் இதயங்களை முழுமையாக வென்றவர்களாக மாறுகிறார்கள்; ரொனால்டோ அந்த அரிதான மனிதர்களில் ஒருவர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal