Dailyhunt
"அப்போ CAA.. இப்போ FCRA"  பாஜகவுடன் கூட்டு.. கிறிஸ்தவர்களுக்கு துரோகம்:  பழனிசாமியை விளாசிய முதலமைச்சர்!

"அப்போ CAA.. இப்போ FCRA" பாஜகவுடன் கூட்டு.. கிறிஸ்தவர்களுக்கு துரோகம்: பழனிசாமியை விளாசிய முதலமைச்சர்!

ழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (04-04-2026) காலை, நாகர்கோயிலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உரையின் விவரம்:

தமிழ்நாடு முழுவதும் சூரிய உதயத்தைப் பார்க்க மக்கள் அனைவரும் வரும் மாவட்டம் குமரி! அப்படிப்பட்ட மாவட்டத்திற்கு, உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்க வேண்டும் என்று ஆதரவு கேட்டு உங்களை எல்லாம் நான் பார்க்க வந்திருக்கிறேன்.

குமரிக்கு நான் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில், ஓடோடி வந்து பார்த்திருக்கிறேன். அதேபோன்று, 2025 புத்தாண்டுக்கு முந்தைய நாள் நம்முடைய திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா கொண்டாட இங்குதான் நான் வந்தேன். இப்போதுகூட, பிப்ரவரி மாத கடைசியில் நாகர்கோயிலுக்கு நான் வந்தேன்.

அதுவும் எப்படிப்பட்ட நிகழ்ச்சி தெரியுமா? மிகப்பெரிய சாதனை படைத்த அரசு நிகழ்ச்சி! அதாவது, 3 லட்சத்து 12 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு வந்தேன்! மாவட்ட மக்கள் தொகையில் பாதிபேர் அன்று பயனாளிகள். உங்களுக்குத் தெரிந்து இதுவரை நாகர்கோயில் நகரத்தில் அந்த விழா போன்று ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறதா? சொல்லுங்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது கிடையாது. மிகப் பெரிய நிகழ்ச்சி மட்டுமல்ல, திராவிட மாடல் முதல் வெர்ஷனுடைய நிறைவான அரசு நலத்திட்ட நிகழ்ச்சியும் குமரி மாவட்ட நிகழ்ச்சிதான்! கிரிக்கெட்டில் கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது போன்று, குமரி மாவட்டத்தில்தான் அந்த நிகழ்ச்சியோடு, மேலும் பல நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொண்டேன்.

நாகர்கோயிலில் தெற்கு எல்லைப் போராட்ட நாயகர் மார்ஷல் நேசமணி அவர்களின் தளபதியான குமரிக் கோமேதகம் பொன்னப்ப நாடார் அவர்களுக்கு திருவுருவச் சிலையை நான் திறந்து வைத்தேன்.

அகஸ்தீஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்புகளையும்,

குமரியில் தமிழர் பேரறிவுச் சிலையாக தலைவர் கலைஞர் அமைத்த திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவாக அலங்கார வளைவையும் திறந்து வைத்தேன்.

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோயில் வந்து சேரவே எனக்கு 2 மணி நேரம் ஆனது. காரணம், அப்படி ஒரு அன்பான வரவேற்பால் என்னை திக்குமுக்காட வைத்துப் பெருமைப்பட்டது குமரி மக்களான நீங்கள்தான்! ஒரு மாதம் சென்றதே தெரியவில்லை. அதற்குள், இதோ திரும்பவும் உங்களைப் பார்க்க வந்துவிட்டேன்.

2026 சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0-வுக்கு குமரி மாவட்டம் ரெடியா? திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, நெல்லை ஆகிய ஊர்களில் நான் பரப்புரையை முடித்துவிட்டுதான், இந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் தயார் ஆகிவிட்டார்கள். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி மீண்டும் அமைய வேண்டும் என்றால், குமரி மாவட்டத்தில் இருக்கும் எல்லாத் தொகுதியிலும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். நம்முடைய அந்த வெற்றி வேட்பாளர்களை இப்போது உங்கள் முன்னால் நான் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

முதலில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய வெல்லும் வேட்பாளர் மாவட்டச் செயலாளர் சகோதரர் ஆர். மகேஷ் போட்டியிடுகிறார். நான் இளைஞரணியில் இருந்த காலத்தில் இருந்தே, என்னுடன் சேர்ந்து பயணித்தவர். நாகர்கோயில் மாநகராட்சி மேயராக இருந்து, நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்து, மிகச் சிறப்பாக பணியாற்றிய மகேஷ் அவர்களுக்கு, கன்னியாகுமரி தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய வெல்லும் வேட்பாளர் எஸ். ஆஸ்டின். கழகத்தின் துணை அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருப்பவர். சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும், மாநிலங்களவை உறுப்பினராக ஒரு முறையும் மக்கள் பணியாற்றியவர். சிறுபான்மைச் சமூக மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து உழைப்பவர். சட்டமன்றத்தில் சிறப்பான வாதங்களையும், மக்களுக்கான கோரிக்கைகளையும் எடுத்து வைக்கும் ஆஸ்டின் அவர்களுக்கு, நாகர்கோயில் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.

அடுத்து, கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய பெருமதிப்பிற்குரிய இனிய சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் குமார் அவர்கள். அதே தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, உங்களுக்கு நன்றாக அறிமுகமானவர். சட்டமன்ற காங்கிரஸ் குழுவின் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். இன்னும் சொன்னால் நான் சிலை திறந்து வைத்தேனே, விடுதலைப் போராட்ட வீரர் குமரிக் கோமேதகம் பொன்னப்ப நாடார் அவர்களின் அன்புப் பேரன். அது உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட ராஜேஷ் குமாருக்குக் கை சின்னத்தில் கிள்ளியூர் மக்கள் மீண்டும் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் நமது வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெருமதிப்பிற்குரிய சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் மீண்டும் இந்தத் தொகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சகோதரி தாரகை கத்பர்ட் அவர்கள். மீனவப் பின்னணி கொண்டவர்! கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார். இன்னும் சொன்னால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்டத் தலைவர் தாரகை கத்பர்ட் அவர்கள். 2024-ஆம் ஆண்டு விளவங்கோடு இடைத்தேர்தலில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இப்போது குளச்சல் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு குளச்சல் தொகுதி மக்கள் கை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய வெல்லும் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர். செல்வசுவாமி அவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அவர். ஏழுதேசம் பேரூராட்சித் தலைவராகப் பணியாற்றியவர். மக்களுக்காகவும், குறிப்பாக விவசாயிகளுக்காகவும் தொடர்ந்து போராடக் கூடியவர். அவருக்கு, பத்மநாபபுர மக்கள் ஏற்கெனவே சகோதரர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு எவ்வாறு ஆதரவு அளித்தீர்களோ, அதேபோன்றே செல்வசுவாமி அவர்களுக்கும் ஆதரவளித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளந்தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களால் அறிமுகப்படுத்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டி.டி. பிரவீன் அவர்கள். பிரவீன் கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்த பிரிவினருக்காகப் பல்வேறு உதவிகளை செய்யக் கூடியவர். தென்னிந்தியத் திருச்சபை தெற்கு கேரளத் திருமண்டலத்தின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகிக்கக் கூடியவர். பிரவீன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த 6 வேட்பாளர்களையும் வெற்றி பெற வைப்பீர்களா? வைப்போம்.

இந்தக் குமரி மாவட்டத்திற்கு நாம் பல்வேறு திட்டங்களை உருவாக்கி, பல்வேறு சாதனைகளை நாம் செய்து காட்டியிருக்கிறோம். எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தால் எனக்கு இந்த ஒரு நாள் போதாது! அதனால், சிலவற்றை மட்டும் நான் சுருக்கமாக குறிப்பிட்டுச் சொல்கிறேன்!

குமரிக்குச் சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும் வகையில், வள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்க அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிப் பாலம். பல்லாயிரம் பேர் தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கன்னியாகுமரி பேரூராட்சி என்பது, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. மார்த்தாண்டத்தில் தினசரி சந்தை.

குளச்சல், பத்மநாபபுரத்தில் புதிய பேருந்து நிலையங்கள். 283.69 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. பள்ளம்துறை, எடப்பாடு மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டார் புனித சவேரியார் தேவாலயம் சீரமைக்க நிதி உதவி செய்யப்பட்டிருக்கிறது.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு 400 ஆண்டுகள் கழித்து, குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. நாகர்கோயில் மாநகராட்சியில் 55 ஆயிரத்து 709 வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

தோவாளை மலர் சந்தை வளாகம் முழுவதும் உயர்மட்ட மேற்கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. பத்மநாபபுரத்தில் மத்திய ஆய்வகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோக, வடசேரியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைய இருக்கிறது.

தக்கலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் தொழில்நுட்பப் பூங்கா விரைவில் அமைய இருக்கிறது. வாணியக்குடியில் புதிய மீன்பிடி துறைமுகம் மற்றும் குளச்சல் துறைமுக விரிவாக்கத்திற்கு அடிக்கல்லை நான் நாட்டியிருக்கிறேன். இதற்காக மகிழ்ச்சி அடைந்த வாணியக்குடி விசைப்படகு உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் எல்லோரும் எனக்கு நன்றி சொன்னது கூட இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் நன்றியின் அடையாளமாக ஒரு விசைப்படகு மாதிரியை எனக்குப் பரிசாக வழங்கினார்கள். இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமான திட்டங்களே இன்னும் முப்பது இருக்கிறது. நான்தான் நேரமில்லாத காரணத்தினால் மிகவும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்காக இவ்வளவும் செய்து கொடுத்த உரிமையோடு, உறவோடு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். உங்களிடம் எனக்கு அந்த உரிமை இருக்கிறதுதானே? குமரி மாவட்டம் என்பது மீனவ நண்பர்கள் நிறைந்த மாவட்டம். மீன் பிடித்தல் என்பது வெறும் தொழில் இல்லை; அது ஒரு வாழ்க்கை முறை! நம் பண்பாட்டின் அடையாளம்!

நெய்தல் திணையாகத் தமிழ் இலக்கியத்தில் போற்றப்படும் சிறப்புக்குரியது. அப்படிப்பட்ட மீனவர்களுக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் சிலவற்றை மட்டும் நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் 121 மீன்வள உட்கட்டமைப்பு பணிகள்,

46 புதிய மீன் இறங்குதளங்கள்,

29 மீன் இறங்குதள மேம்பாட்டுப் பணிகள்,

மானிய டீசல் அதிகரிப்பு,

மீனவ மகளிருக்கு மானியங்கள்,

மீனவக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு UPSC தேர்வுக்கான பயிற்சி - இவ்வாறு பலவற்றைச் செய்திருக்கும் ஆட்சிதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி!

அதுமட்டுமல்ல, கடந்த 2004--ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிலத்தில் வீடு கட்டித் தரப்பட்டது. அந்த வீடுகளுக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான், அவர்கள் பெயரிலேயே கணினிப் பட்டா வழங்கியிருக்கிறோம்.

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணி 253 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. பாரம்பரிய மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 483 வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் மீன்பிடி குறைவுக் கால நிவாரணம் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, 5 ஆயிரம் ரூபாய் என்று வழங்கப்பட்டு வந்த மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை, 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினோம்.

மீன்பிடி குறைவுக் காலமான ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வழங்கப்பட்டு வந்த நிவாரண தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினோம். இப்போது தேர்தல் அறிக்கையில், இதுதொடர்பாக அடுத்த அதிரடி வாக்குறுதிகளை உங்களுக்காக வழங்கியிருக்கிறோம். நீங்கள் பார்த்திருப்பீர்கள். இனி, மீன்பிடித் தடைக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை மாதம் 8 ஆயிரம் இல்லை, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்! இனி, மீன்பிடி குறைவுக்கால நிவாரணத்தொகை மாதம் 6 ஆயிரம் இல்லை, 9 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்! நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியா?

அதேபோல், மீனவ மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு மீனவர்/மீனவ மகளிர் சேமிப்பு நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் 117 கோடியே 94 இலட்சம் ரூபாய் சேமிப்பு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்குக் காலையில் மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தபோது, என்னிடம் சில கோரிக்கைகளை உரிமையோடு வைத்தார்கள். கழக மீனவரணிச் செயலாளர் சகோதரர் ஜோசப் ஸ்டாலினும் என்னிடம் சில கோரிக்கைகளைச் சொன்னார். அதன் அடிப்படையில் சில புதிய வாக்குறுதிகளையும், மீனவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில் இருந்து உங்களுக்கு நான் வழங்குகிறேன்.

மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான வயது வரம்பு 65-இல் இருந்து 70 வயதாக உயர்த்தப்படும். மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு, இப்போது வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்களோடு, கூடுதலாக அவர்களின் 70 வயது முதல் 75 வயது வரை மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி மீனவர்களின் உண்மையான நண்பனாக - உற்ற தோழனாகச் செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு. ஆனால், வெளியுறவுக் கொள்கையைக் கையில் வைத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கடல் கடந்து மீன்பிடிக்கச் செல்லும் நம்முடைய மீனவர்களைக் காக்கத் தவறிவிட்டது! தவறியது மட்டுமல்ல; வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்திருக்கிறது! சிறிய அண்டை நாடுகளிடம்கூட இந்தியாவிற்குச் செல்வாக்கு இல்லாத நிலையைப் பிரதமர் மோடி அவர்கள் உருவாக்கி இருக்கிறார்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைத்து பா.ஜ.க. அரசு அக்கறை செலுத்தவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. அதன் விளைவுதான் நம்முடைய மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படை நடத்தும் தொடர் தாக்குதல்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி என்ன சொன்னார், ''மன்மோகன் சிங் என்ற பலவீனமான பிரதமர் ஆள்வதால்தான் நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. பலமான பிரதமர் நான் வந்தால் நடக்காது" என்று பேசினார்.

இப்போது நடக்கிறதா? இல்லையா? நடந்து கொண்டிருக்கிறது. இப்போது, தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மாண்புமிகு மோடி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்ள மாட்டாரா? இந்தக் கேள்வி மட்டுமா இருக்கிறது. இன்னும் கேள்விகள் அடுக்கடுக்காக இருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் என்ன என்று தெரியும் உங்களுக்கு...

கோவை, மதுரை மெட்ரோ இரயில், ஓசூர் விமான நிலையம், பேரிடர் நிவாரண நிதி, பள்ளிக் கல்வி நிதி, கீழடி ஆய்வறிக்கை, தொகுதி மறுவரையறையில் உரிய நியாயம், நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு, தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் புதிய இரயில்வே திட்டங்கள். இப்படி, தமிழ்நாட்டின் சார்பில் பிரதமர் மோடி அவர்களைக் கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கிறது. இதெல்லாம், நான் தொடர்ச்சியாகக் கேட்கும் கேள்விகள். இதெற்கெல்லாம் பதில் இருக்கிறதா? இல்லை.

இப்போது, புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது! என்ன தெரியுமா? சிறுபான்மையின மக்களை, குறிப்பாக கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்டிருக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத் திருத்தம்! அதாவது, FCRA மசோதா! இதற்காகவும் தமிழ்நாட்டில் இந்த ஸ்டாலின்தான் முதல் குரல் கொடுத்திருக்கிறேன். இரண்டு நாள் முன்பே, இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். நேற்று, மீண்டும் பிரதமர் அவர்களுக்கு அரசின் சார்பில் விளக்கமாக நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

இந்தச் சட்டத் திருத்தத்தால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவச் சமுதாய மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். சான்றுகளைச் சமர்ப்பிப்பதில் சிறிய தாமதம் உள்ளிட்ட பிற காரணங்களைச் சுட்டிக் காட்டி, ஒரு அமைப்பின் அங்கீகாரத்தை இரத்து செய்து, அவர்களிடம் இருக்கும் நிதியையும், சொத்தையும் பறித்துக் கொள்ள இந்த கொடுங்கோல் சட்டம் வழிவகுக்கிறது. சொத்து என்றால், மக்களுக்குச் சேவையாற்றும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள் இவைதான்.

இன்னும் கொடுமை என்னவென்றால், பாதி நிதியை வெளிநாட்டில் இருந்து பெற்று, மீதியை உள்நாட்டில் இருந்து பெற்று உருவாக்கிய சொத்துகளைக் கூட, இந்தச் சட்டம் வந்தால் முடக்கிவிட முடியும். பிரதமர் மோடி அவர்கள் கண்துடைப்புக்காக, பல கிறிஸ்தவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ஏழைகளின் கல்விக்காகவும் - மருத்துவத்துக்காகவும் அவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் பாராட்டிப் பேசியிருக்கிறார். ஆனால், இப்போது என்ன செய்கிறார்? இதுதான், அவரது உண்மையான முகம். இப்போது திடீர் என்று இப்படி ஒரு தன்னிச்சையான கொடுங்கோல் சட்டத்தை கொண்டு வந்தால், குறிப்பாக, பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், கிராமப்புற ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

நிதி தருவதற்கு முன்வருபவர்களையும் அச்சுறுத்துவது மாதிரியான பிரிவுகள் இந்தச் சட்டத் திருத்தத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ கல்வி, மருத்துவ அமைப்புகள் இயங்கி வருகிறது. அவையெல்லாம் இல்லாமல் போனால், அரசால் அவர்கள் செய்து வரும் சேவையை, உடனே இட்டு நிரப்ப முடியாது என்பதையும் என்னுடைய கடிதத்தில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். மொத்தத்தில், இந்தச் சட்டத் திருத்தம், மத சுதந்திரம் மற்றும் சமூக சேவை செய்ய விரும்பும் மக்கள் மீதான கடுமையான தாக்குதல்! அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளைப் பறிக்கும் செயல்!

கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் - தேவாலயங்கள் அதிகம் இருக்கும், கேரளம், அசாம் மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கும் காரணத்தினால், இப்போதைக்கு பயந்து போய் பா.ஜ.க. அரசு சற்று பின்வாங்கி இருக்கிறது. ஆனால், கூடிய விரைவில் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டி, இந்த மசோதாவை நிறைவேற்றிச் சட்டம் ஆக்குவதுதான் பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்! கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களால் இந்துக்களும்தான் அதிகம் பயனடைகிறார்கள். மதவெறிப் பார்வையுடன் மனிதநேயச் செயல்பாடுகள் மேல் தொடுக்கும் இந்தத் தாக்குதல், ஒரு மதத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே எதிரானது! இந்தியா மேல் உலக அளவில் அழிக்க முடியாத களங்கத்தை இந்தச் சட்டம் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. நாடாளுமன்றமே முடங்கும் அளவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள்.

இதில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? சொல்லுங்கள் பழனிசாமி அவர்களே... இந்த F.C.R.A. சட்டத் திருத்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லை, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு சட்டத் திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்தது போன்றே, அடுத்து கிறிஸ்தவ மக்களுக்கும் துரோகம் செய்யத் தயார் ஆகிவிட்டீர்களா?

நேற்று ஒரு கூட்டத்தில் பழனிசாமி பேசியிருக்கிறார். சிறுபான்மையினரைக் கண்ணை இமை காப்பது போன்று, அ.தி.மு.க. காக்கும் என்று சொல்கிறார். இப்போது FCRA-வுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

அ.தி.மு.க. என்ற கட்சி பா.ஜ.க.வின் கொத்தடிமைக் கூட்டமாக மாறிப் போயிருக்கிறது. அடிப்படை மனசாட்சி இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களும், சில நிர்வாகிகளுமே வெளிப்படையாகப் புலம்புகிறார்கள். தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இப்படி ஒரு நிலைமையில் அ.தி.மு.க.வைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் பழனிசாமி!

இன்னும் ஷார்ப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற 'நேம் போர்டை' காப்பாற்றிக்கொள்ள, டெல்லிக்கு அவர் காவடி தூக்குகிறார். நேற்று நெல்லைப் பொதுக் கூட்டத்தில், தலைவர் கலைஞர் குறித்த பழனிசாமி அவர்களின் தரம்கெட்ட பேச்சைக் கண்டித்து நான் பேசியிருந்தேன். அதைக் கேட்டு, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கட்சிக்காரர்கள் ஃபோனிலும், சமூக வலைத்தளங்களிலும் தங்களுடைய ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். "எங்கள் மனதில் என்னென்ன இருந்ததோ, அதையெல்லாம் பேசிவிட்டீர்கள் தலைவரே" என்று சொன்னார்கள். மறைந்த தலைவரைப் பற்றி இவ்வாறு தவறாகப் பேசுவது, அரசியல் மாண்பு கிடையாது.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவரை எதிர்த்து, அவரின் ஆட்சியின் குறைகளை எதிர்த்து, நாம் நேரடியாக அரசியல் செய்திருக்கிறோம். ஆனால், அவர் மறைந்த பிறகு, உச்சபட்ச அரசியல் நாகரிகத்தை நாம் இன்றைக்கும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம்.

'திண்ணையில் கிடந்தவனுக்கு, திடுக்குனு யோகம் அடித்த மாதிரி' முதலமைச்சரான பழனிசாமியிடம் அந்த நாகரிகத்தை எதிர்பாக்க முடியுமா? அவர் இவ்வாறு பேசுவது முதல் முறையும் கிடையாது. 2019 தேர்தலின்போதே கலைஞரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள். அதுபற்றி அரசே விசாரிப்போம் என்று வாய்க் கொழுப்போடு பேசினார். அதற்குப் பிறகு என்ன ஆனது? மக்களால் தோற்கடிக்கப்பட்டார் பழனிசாமி.

அதன்பிறகு, மேலும் மேலும் தோல்விகள் பெற்றாலும், அதிலிருந்து அவர் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாமல், 2021, 2024, 2026 அதுவரை பழைய ரெக்கார்டு போன்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பார்களே தவிர, வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டார்கள்.

பழனிசாமி அவர்களிடம் சொல்வதற்குச் சாதனைகள் இல்லை! மக்கள் பட்ட வேதனைகள்தான் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக குரல் கொடுக்க துணிச்சலும் இல்லை! உதவியவர்களுக்கு நன்றியும் இல்லை! மனம் முழுவதும் துரோக நஞ்சுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட இவர் கொடுக்கும் வாக்குறுதிகளையும் தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை.

ஏன்? 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகளை நான் வாசித்தால் அது பழனிசாமிக்கே நினைவிற்கு வராது. ஆனால், தி.மு.க. வாக்கு கொடுத்தால் அதை எப்படியாவது செய்து முடிப்போம்! அப்படி, இந்தத் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் 'சூப்பர்ஸ்டார்'தான் தி.மு.க. தேர்தல் அறிக்கை!

நேற்றுகூட திருநெல்வேலியில் பாடிக் காண்பித்தேன். நீங்கள் கேட்டிருப்பீர்கள். மறுபடியும் பாட வேண்டுமா? "சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்". எனவே, அதில் சொல்லியிருக்கும் சில மெகா ஹிட் அறிவிப்புகளை மட்டும் இப்போது தலைப்புச் செய்தியாக ஒரு லிஸ்ட் போட்டுச் சொல்கிறேன்!

ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, ஆயிரம் ரூபாயிலிருந்து, இனி மாதம் 2 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை, இனி, மாதத்திற்கு ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என எல்லா உதவித்தொகைகளும் டபுள் மடங்காக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு, இனி, எந்த சூரிட்டியும் இல்லாமலேயே, 5 இலட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். குமரி மாவட்டம் இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம். இனி, பேரிடர் கால இழப்பீடுகளாக, இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் நீண்டகாலப் பயிர்களுக்கு 27 ஆயிரம் ரூபாய், மானாவாரிப் பயிர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்.

கல்லூரி, பாலிடெக்னிக் என உயர்கல்வி படிக்கும் 35 இலட்சம் மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் லேப்டாப் முழுமையாக வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும். தென் மாவட்டங்கள் கல்வி மற்றும் சுகாதாரக் குறியீடுகளில் உரிய வளர்ச்சியை பெறவும், தொழில்மயமாவதை உறுதிசெய்யவும் இந்தத் தென்மாவட்டங்களுக்காகச் சிறப்பு வளர்ச்சித் திட்டம் நிறைவேற்றப்படும்.

இது எல்லாவற்றிற்கும் மேல், ஒரு அல்டிமேட் அறிவிப்பு இருக்கிறது. அது என்ன? இல்லத்தரசி திட்டம்! அதில் என்ன கொடுக்கப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கான கூப்பன்! அது எதற்கான கூப்பன்? இல்லத்தரசிகளான நீங்கள், உங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருளை, உங்கள் ஊரில், உங்களுக்கு விருப்பமான கடையில், உங்களுக்குப் பிடித்த மாதிரி வாங்கிக் கொள்வதற்கான கூப்பன்! புது பொருளா அல்லது பழைய பொருளைக் கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்சா? எல்லாமே உங்கள் சாய்ஸ்தான்!

இப்போது புடவைக் கடைக்குச் செல்கிறீர்கள். 300, 400, 500, இப்போதெல்லாம் ஆயிரம் ரூபாய் வரை புடவை வந்துவிட்டது. ஒரு புடவை எடுக்க, எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள்? இது நல்ல கலரா? நம்மிடம் இந்தக் கலர் இருக்கிறதா? நமக்கு மேட்ச் ஆகுமா? இதை எடுத்துச் சென்றால் நம்முடைய வீட்டுக்காரர் சந்தோஷப்படுவாரா? இப்படியெல்லாம் யோசிப்பீர்கள். சாயம் போகுமா? போகாதா? அல்லது சுருங்கிவிடுமா? அல்லது சுருங்காதா? இப்படியெல்லாம் யோசித்து, தொட்டுப் பார்த்து, தடவிப் பார்த்து, சில்க்கா? நைலக்சா? காட்டனா? இதெல்லாம் பார்த்து வாங்குகிறீர்கள்.

ஆனால், இன்றைக்கு உங்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கு, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு போன்ற எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தைப் பற்றிதான் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வின் நட்சத்திர பரப்புரையாளராக இந்த இல்லத்தரசித் திட்ட வாக்குறுதி இன்றைக்கு மாறியிருக்கிறது! இப்படி ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம்.

நாங்கள் சொன்னால், சொன்னதைச் செய்வோம். ஏன், செய்வதைத்தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். தமிழ்நாட்டை எப்படிப்பட்ட ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று நான் சொல்லியிருக்கிறேன். இதிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்தாக வேண்டும்.

தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியத் துணைக்கண்டமே குமரியில் இருந்துதான் தொடங்குகிறது! இங்கிருந்தே திராவிட மாடல் 2.0-வின் வெற்றியும் தொடங்க வேண்டும்!

அதற்கு, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் நமது வேட்பாளர் மகேஷுக்கும், நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் நமது வேட்பாளர் ஆஸ்டின் அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற வைக்க வேண்டும்!

அதேபோன்று, கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய வேட்பாளர் ராஜேஷ் குமார் அவர்களுக்கும், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய வேட்பாளர் தாரகை கத்பர்ட் அவர்களுக்கும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் நமது வேட்பாளர் பிரவீன் அவர்களுக்கும் நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்!

அதேபோன்று, பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் நமது வேட்பாளர் செல்வசுவாமிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்!

அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஒரு ஆட்சியை வழங்குவோம். நாடு வளம் பெற - நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal