Dailyhunt
"பிரதமர் மோடிக்கு எப்போதும் அஞ்சாத தலைவர்கள்" : முரசொலி தலையங்கம்!

"பிரதமர் மோடிக்கு எப்போதும் அஞ்சாத தலைவர்கள்" : முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (07-05-2026)

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம்!

மிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று முக்கியமான மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

முதலமைச்சர் பதவியில் இருந்து மூன்று எதிரிகள் இறங்கி விட்டதாக அவர் மகிழ்ந்திருப்பார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சித் தகுதியைப் பெறாமல் போயிருக்கலாம். அதற்காக பிரதமர் மோடியின் கட்சி ஆட்சிக்கு வந்துவிடவில்லை. 27 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்தான் மோடியின் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. பழனிசாமி மூலமாக ஆட்சியைப் பிடிக்க நினைத்த பா.ஜ.க. படுகுழிக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே இதில் மோடி மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிறது?

கேரளாவில் தேர்தல் களத்தில் பா.ஜ.க.வே இல்லை. அங்கே மோதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருந்த ஆட்சி, காங்கிரஸ் வசம் வந்துள்ளது. 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் 182 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. 35 இடங்களை இடதுசாரி அணி பிடித்துள்ளது. பா.ஜ.க. எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது தெரியுமா? மொத்தமே 3 தான். அதாவது 140 தொகுதிகளில் வெறும் 3 இடங்களைப் பிடித்துள்ளது பா.ஜ.க. எனவே இதில் மோடி மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிறது?

மேற்கு வங்கத்தில் மூன்று முறையாக வென்று முதலமைச்சராக இருந்தார் மம்தா. 15 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். அந்த அதிருப்தியை பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது. பா.ஜ.க.வின் எதிரிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் ஆகியவை தனித்தனியாகப் போட்டியிட்டதும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஒரு காரணம் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்கத்தையே குறிவைத்தபடி இருந்தார். பெண் வாக்காளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், பேருந்துகளில் இலவசப் பயணம் ஆகிய வாக்குறுதிகளால் பா.ஜ.க. மக்களை ஈர்த்தது. இது ஆட்சி மாற்றத்துக்கு மிக முக்கிய காரணம் ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் 40.81 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜ.க., 45.46 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. திரிணாமுல் வாக்குகள் முழுமையாக வீழ்ந்துவிடவில்லை. இருப்பினும் மேற்கு வங்கத்தை நினைத்து மட்டுமே பிரதமர் மோடி மகிழலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் - ஆகிய மூவருக்கும் முடிந்த அளவு குடைச்சல் கொடுத்து வந்தார் பிரதமர் மோடி. பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் என்பதை விட, அதிகாரம் பொருந்திய ஆளுமைகள் இவர்கள் என்பதும் மோடி கொடுத்த குடைச்சலுக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

பிரதமர் ஆவதற்கு முன்னால் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் தான் நரேந்திர மோடி அவர்கள். அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமைகளுக்காக கடுமையாகக் குரல் கொடுத்தவர். 'டெல்லியில் இருந்து ஆள்வதா?' என்று கேட்டவர் தான். பிரதமர் ஆனதும் அளித்த பேட்டியில், 'நான் அப்படி இருக்க மாட்டேன். எந்த மாநிலத்தையும் பழிவாங்க மாட்டேன். மாநிலங்களை மதித்துச் செயல்படுவேன்' என்று சொன்னவர் தான் மோடி அவர்கள். ஆனால் இதற்குமுற்றிலும் விரோதமாகத் தான் கடந்த 12 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். மாநிலங்களுக்கு எதிராக அவர் நடத்தி வரும் வேட்டையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தான் தமிழ்நாடும், கேரளாவும், மேற்கு வங்கமும்.

தமிழ்நாட்டை மொத்தமாகப் பழிவாங்கினார்கள். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு, 18 ஆண்டுகளாகக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மதுரைக்கு மெட்ரோ ரயில், திருச்சிக்கு மெட்ரோ ரயில், கோவைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தரவில்லை. ஓசூர் விமானநிலையத்துக்கு அனுமதி தரவில்லை. சென்னை மெட்ரோ திட்டத்துக்காக ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை முழுமையாகத் தராமல் இழுத்தடிக்கிறார்கள். பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு தர வேண்டிய திட்டங்களுக்கான நிதியைக் கூட நிறுத்தி வைக்கிறார்கள். ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரால் வசூலிக்கப்படும் அநியாய வரி காரணமாக தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு மட்டும் 9 ஆயிரத்து 698 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இப்படி செயற்கையான ஒரு நிதி நெருக்கடியை உருவாக்கியது ஒன்றிய பா.ஜ.க.

இதே நிலைமை தான் கேரளாவுக்கும், மேற்கு வங்கத்துக்கும். இதே நிலைமைகள் தான் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கும்.

மாநில முதலமைச்சர்கள், டெல்லிக்குப் போய் போராட்டம் நடத்திய காட்சிகள் எல்லாம் மோடி ஆட்சிக் காலத்தில் தான் நடந்தன. டெல்லிக்குப் போய் சாலையில் நின்று போராட்டம் நடத்தினார் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் போராட்டம் நடத்தினார். இதெல்லாம் இந்திய நாட்டின் பிரதமருக்குத் தான் அவமானம்.

ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் எதேச்சதிகார தன்மையால் அதிகம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர்கள், இனி முதலமைச்சர் நாற்காலியில் இல்லை என்று பிரதமர் மோடி மகிழலாம். ஆனால் இவர்கள் அரசியல் களத்தில் பலம் பொருந்திய தலைவர்கள். அந்தந்த மாநில எல்லைகளைக் கடந்த தலைவர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய உறுப்பினர்களை திராவிட முன்னேற்றக் கழகமும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வைத்துள்ளது. இந்த உறுப்பினர்கள், பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டையும், கேரளத்தையும், மேற்கு வங்கத்தையும் நினைவூட்டிக் கொண்டே தான் இருப்பார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal