Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பொய் சொல்லும் டி.கே.சிவக்குமார்... தீர்ப்புகளை மதிக்காத கர்நாடகம்!" : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

"பொய் சொல்லும் டி.கே.சிவக்குமார்... தீர்ப்புகளை மதிக்காத கர்நாடகம்!" : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் என எதையும் மதிக்காத கர்நாடகம், இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பையே திரித்துப் பொய் பேசுகிறது என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து "கர்நாடக முதலமைச்சர் சொல்வது பொய்!" என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு :-

'மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது' என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொல்வது பொய். அப்படி எந்த அனுமதியையும் உச்சநீதிமன்றம் வழங்கவில்லை.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள முடியாது.

மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒன்றிய அரசின் நீர்வள ஆணையம் கர்நாடக மாநிலத்துக்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது.

2025 நவம்பர் மாதம், திட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றம் தடை செய்ய மறுத்தது. 'உரிய முடிவை காவிரி மேலாண்மை ஆணையம்தான் எடுக்க வேண்டும்' என்றும் தீர்ப்பில் சொன்னது. ஆனால், அணை கட்ட உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது.

அறிக்கை தயாரிக்க அனுமதி தந்ததே தவிர, அணை கட்டிக்கொள்ள அனுமதி தரவில்லை. எனவே, கர்நாடக முதலமைச்சர் சொல்வது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் திசைதிருப்புவதாகும்.

'காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவில் உடன்பாடு இல்லை என்றால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடலாம்' என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

மேகதாது அணையைக் கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி தரவில்லை. எனவே, அதற்கு முன்னால் உச்சநீதிமன்றத்தில் இதனை விவாதிக்கத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதே தவிர, மேகதாது அணையைக் கட்ட பச்சைக்கொடி காட்டவில்லை.

'முன்கூட்டியே இப்படிமனு தாக்கல் செய்ய வேண்டாம்' என்றுதான் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் சொன்னது. 'பரிசீலனை செய்வதைத் தடுக்க வேண்டாம்' என்றுதான் தீர்ப்பு சொன்னது. இதை வைத்து அணை கட்ட அனுமதி தந்துவிட்டார்கள் என்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பேசுவது தவறானது. அந்த மாநில மக்களையும் சேர்த்து ஏமாற்றுவதாகும்.

மேகதாது அணை கட்டும் மிரட்டலை இன்று நேற்றல்ல, 1980ஆம் ஆண்டு முதலே செய்து வருகிறது கர்நாடகம். 01.01.1982இல் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்ட குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டியை அழைத்தார் முதலமைச்சர் குண்டுராவ். 'கன்னட மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசு' என்றார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அணை கட்டக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பிறகு குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. அப்போதிருந்தே தங்களது சுயலாபத்துக்காக மேகதாதுவைப் பயன்படுத்துகிறார்கள்.

1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, மைசூர் அரசு, சென்னை அரசின் ஒப்புதல் இன்றி புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது. புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தினால், அது குறித்த முழு விவரங்களையும் சென்னை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சென்னை அரசு, தன்னுடைய பகுதியின் பாசனப் பரப்புக்குப் பாதகம் நேராத வகையில் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றுதான் இருக்கிறது. இதன்படி நடக்கிறதா கர்நாடகம்?

தலைவர் கலைஞர் வலியுறுத்தியதன் காரணமாக, அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களால் 02.06.1990 அன்று காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 25.06.1991 அன்று நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வந்தது. 205 டி.எம்.சி. தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதை ஒழுங்காகக் கொடுத்து வருகிறதா கர்நாடகம்?

05.02.2007 அன்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. அதன்படி முறையாகத் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தந்து வருகிறதா கர்நாடகம்?

கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் மூன்று பகுதிகள்:

  1. கபினி அணை - 60 டி.எம்.சி.

  2. கிருஷ்ணராஜ சாகர் - 52 டி.எம்.சி.

  3. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணையிலிருந்து பிலிகுண்டுலு வரை உள்ள பகுதிகளில் பெய்யும் மழையால் கிடைக்கும் நீர் - 80 டி.எம்.சி.

ஆக மொத்தம் 192 டி.எம்.சி. பிலிகுண்டுலுவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். அதை முறையாக வழங்குகிறதா கர்நாடகம்?

இறுதித் தீர்ப்பில் குறுவை, சம்பா, தாளடி பயிரிட்ட பாசனப் பரப்பு விடுபட்டிருந்தது. பாரம்பரிய உரிமைகளைக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

16.02.2018 அன்று உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில், ''மேல்பகுதி மாநிலம், கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு அட்டவணைப்படி வழங்க வேண்டிய நீர் வரத்தைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது'' என்று இருக்கிறது.

அட்டவணைப்படி உள்ள அளவையாவது கர்நாடகம் வழங்குகிறதா என்றால் அதுவும் இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாகக் கீழ்ப்பகுதி மாநிலத்தைப் பாதிக்கும் வகையில் கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது தீர்ப்புக்கு எதிரானது அல்லவா?

'எந்த மாநிலமும் நீரைப் பயன்படுத்தும் அதிகாரம் பாதிக்கப்படக் கூடாது' என்பதுதான் 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அதற்கு முரணாக அணை கட்டுவது தீர்ப்புக்கு எதிரானது அல்லவா?

'கர்நாடகாவின் தேவைகளில் பெரும்பகுதியை ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கங்களில் இருக்கும் நீரைக் கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சொல்கிறது. அதை மீறி ஏன் மேகதாது கட்ட வேண்டும்?

'தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முடியாது' எனக் காவிரி மேலாண்மை வாரியம் முன்பு ஒருமுறை சொல்லியிருக்கிறது. அதை மீறி ஏன் அணை கட்ட வேண்டும்?

இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் என எதையும் மதிக்காத கர்நாடகம், இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பையே திரித்துப் பொய் பேசுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal