Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

முரசொலி தலையங்கம் (31-08-2026)

பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு...!

'சொன்னது எதையும் செய்ய மாட்டேன்' என்று சபதம் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

கொடுத்த வாக்குறுதிகளை அவர் மறந்து விட்டார். நினைவுக்கு வந்த ஒருசில வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றுகிறார். பொய்யிலே பிறந்த அவரது ஆட்சி பொய்யிலே புரண்டு கொண்டு இருக்கிறது.

'நான் வாக்குறுதி கொடுத்தால் அனைவருக்கும் கொடுப்பேன். தி.மு.க.மாதிரி அதில் அளவுகோல் வைத்து, அவர்களுக்கு கிடையாது, இவர்களுக்கு கிடைக்காது என்று சொல்ல மாட்டேன்' என்று வாய்க்கு வந்த படி உளறினார். தேர்தல் முடிந்து, ஆட்சிக்கு வந்த பிறகு அவர் செய்வது அனைத்தும் முழுமையானது அல்ல. அரைகுறையானது தான்.

* அனைவருக்கும் 6 சிலிண்டர் இலவசம் என்று சொன்னார் விஜய். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும்' என்று சொன்னார் விஜய். இப்போது 3 சிலிண்டர் தான் தரப்போவதாகச் சொல்கிறார். அதுவும் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் கிடைக்குமாம். அதாவது மாதம் 20 ஆயிரம் ஊதியம் வாங்குகிறவர்களுக்கு மட்டும்தான் 3 சிலிண்டராம். 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டம் என்பது, 'அன்னபூரணி சூப்பர் மூன்று' ஆகிவிட்டது.

* அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று முதலமைச்சர் ஆனதும் அறிவித்திருக்கிறார் விஜய்.

* அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். இப்போது அதிலும் அரைகுறையான அறிவிப்பு தான். 50 ஆயிரம் வரை தள்ளுபடி என்றார். அடுத்து 70 ஆயிரம் வரை தள்ளுபடி என்றார்.

* மகளிருக்கு தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாப் பயணம் என்று தேர்தலுக்கு முன்னதாகச் சொன்னார் விஜய். மாநகர, நகரப் பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாப் பயணம் என்று இப்போது அறிவித்துள்ளார்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை 5 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயரும் என்று பரபரப்பாக அறிவித்தார். ஆண்டு வருமானம் 1.20 லட்சம் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதாவது குடும்பத்தின் மாத வருமானம் 10 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால்தான் இதில் பங்கெடுக்க முடியும்.

* பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் என்று அறிவித்தார் விஜய். இப்போது அரசாங்க மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்று அறிவித்துள்ளார் விஜய்.

"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். உலகத்துல மனுஷனா பிறக்கிறதே பெரிய விஷயம். அதுவும் நம்ம தாய்நாடான தமிழ்நாட்டுல பிறக்கிறது மிகப்பெரிய வரம். அப்படி நம்ம தமிழ்நாட்டுல பிறக்கிற குழந்தைகளை வரவேற்கிற திட்டம்தான் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம். தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்கமோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு பேபி வெல்கம் கிட்டும் வழங்கப்படும்." என்றார். இப்போது அரசாங்க மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் என்று சொல்வது மோசடி அல்லவா?

தான் எவ்வளவு பெரிய பொய்யர் என்பதை தினந்தோறும் மெய்ப்பித்துக் கொண்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதந்தோறும் 2,500 ரூபாய் தருவோம் என்றவர் அவர். பெண்கள் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கமும், பட்டுச்சேலையும் வழங்குவோம் என்றவர் அவர். மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க பெற்றோருக்கு 15 ஆயிரம் தருவேன் என்றவர் அவர்.

மற்றவர்களை மாதிரி அடித்துவிட மாட்டோம். நிறைவேற்ற முடிந்த வாக்குறுதியைத்தான் சொல்வோம்' என்றார் விஜய். ஏன் அவரால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிறைவேற்ற முடியவில்லை. நிறைவேற்றுவதற்காக ஏதாவது முயற்சி எடுத்தாரா? இல்லை.

தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த நெல் குவிண்டாலுக்கு 3,500, கரும்பு டன்னுக்கு 4,500 விலை தருவேன் என்பது அறிவிக்கப்படவில்லை. தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையைத் தீர்ப்பேன் என்றார். தினமும் அவர்கள் போராடி வருகிறார்கள். 'அண்ணனை எங்கே காணோம்' என்று கேட்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். 'அடுத்த பிறவியில்விவசாயியாக பிறப்பேன்' என்று சொன்னவர் இந்த பிறவியில் விவசாயிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்.

முதலமைச்சர் விஜய்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரால் வீட்டிலும் இருக்க முடியவில்லை. தலைமைச் செயலகத்திலும் இருக்க முடியவில்லை. சட்டசபையிலும் இருக்க முடியவில்லை. ஜெயிலுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குமாக அலைகிறார்? என்னதான் ஆய்வு பண்ணுகிறாரோ?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal