Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!

கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!

ரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோட்டியால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்தக் கோவில் பரம்பரை தர்மகர்த்தாவாக தமிழரசன் என்பவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தமிழரசன் குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அறிவழகன் மகன் ரவிக்குமார் குடும்பத்தினருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ரவிக்குமார் என்பவர் தற்போது தவெக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடத்துவதற்காக வேண்டி தவெக நிர்வாகி ரவிக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று (ஜூலை 03) கோவிலுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது தமிழரசன் மகள் வேம்பரசி என்பவர் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும், வேண்டுமென்றால் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் போலீசாரிடம் அனுமதி கடிதம் பெற்று வாருங்கள் என ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகளான ரவிக்குமார் மற்றும் அதே கட்சியில் உள்ள கணேஷ் பிரபு ஆகிய இருவரும் சேர்ந்து வேம்பரசி மீது பொது இடத்தில் கண் மூடித்தனமாக கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த வேம்பரசி சுயநினைவின்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

வேம்பரசியை ரவிக்குமார் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பொது இடத்தில் பெண் என்று பாராமல் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்றும், தவெக நிர்வாகிகள் என்பதால் போலீசார் அவர்களை கைது செய்யாமல் இருக்கிறார்களோ? சந்தேகம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் சகோதரர் கார்த்திக் தெரிவிக்கையில், குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர்களுக்கு இடையே ஆர்டிஓ மூலம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையில் பிரச்சனை செய்தவர்களிடம் தட்டிக் கேட்ட எனது சகோதரி வேம்பரசியை தவெக நிர்வாகிகள் ரவிக்குமார் மற்றும் கணேஷ் பிரபு ஆகியோர் பொது இடம் என்று பாராமல் கண்மூடித்தனமாக தாக்கி கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக குடும்பத்தோடு கிராம மக்கள் ஒத்துழைப்போடு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

தவெக நிர்வாகிகள் என்பதாலேயே தனிச் சட்டம் எதுவும் உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal