Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்துவதுதான் 'தூயசக்தி' அரசியலா? : முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!

ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்துவதுதான் 'தூயசக்தி' அரசியலா? : முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பதில் என்ன?

விஜய் வீட்டை விட்டு வெளியில் வந்தால் சேனல்கள் லைவ் செய்கிறார்கள் என்ற மிதப்பில் இருக்கிறது த.வெ.க.

அரசு. ஆனால், இந்த ஆட்சி மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை பத்திரிக்கையாளர்கள் வைக்கும் போது இவர்கள் பதில் என்ன? அடக்குமுறையும் ஆணவமும்தான். ரசிக லைவில் மிதக்கும் விஜய்க்கு இது போன்ற விமர்சனங்கள் கசக்கிறது.

'Times Of India' ஆசிரியரின் சமூக வலைத்தளப் பக்கத்தை முடக்குகிறது த.வெ.க. அரசு. அதன் ஆசிரியர் அருண்ராம், முதலமைச்சர் விஜய்யை முன்பு சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை சட்டபூர்வ நடவடிக்கை மூலமாக மறைத்துள்ளது த.வெ.க. அரசு. 'ஜனநாயகன்' படத்தில் நடித்தவர், 'சர்வாதிகாரியாக' வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

விஜய்யின் ஆறுமாத ஆட்சியின் அருவெறுப்புக் காட்சிகளை ' Times Of India' ஆசிரியர் அருண்ராம் விமர்சித்து எழுதினார். அதனை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

''த.வெ.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் நீண்டு கொண்டே செல்கிறது'' என்று எழுதியது அந்த நாளிதழ். அதற்குப் பதில் சொல்ல வேண்டாமா தூயசக்தி விஜய்?

''தூய அரசியல் என்ற விஜய்யின் பொய் பிம்பம், 6 மாதங்களிலேயே கிழிந்து தொங்குகிறது" என்று டைம்ஸ் எழுதுகிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டாமா?

'' த.வெ.க.வினர் மீதான பாலியல் குற்றங்கள், கொள்ளை, ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில், அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் த.வெ.க.வில் பெயர் தெரியாத கட்சித் தொண்டர்கள் கிடையாது. குற்றம்சாட்டப் பட்டவர்கள் துணை சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்களாக உள்ளார்கள்" என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது. இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா விஜய்?

"மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், இன்னமும் எம்.எல்.ஏ. பதவியில் தொடருவது வெட்கக்கேடானது. ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது ஏன் FIR கூட பதிவு செய்யவில்லை?, அருள்விக்னேஷை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்க விஜய் ஏன் பயப்படுகிறார்?" என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுப்பிய கேள்விக்கு விஜய் சொல்லப் போகும் பதில் என்ன?

''கட்சியின் தலைவராக இருக்கும் விஜய், சொந்தக் கட்சியினர் மீதான குற்ற வழக்குகளில் மவுனமாகவே இருக்கிறார் . இது மிகப்பெரிய அவமானம்" என்று 'Times of India' கடுமையாக விமர்சித்துள்ளது. பதில் சொல்ல வேண்டாமா தூயசக்தி விஜய்?

'Times Of India' எழுதிய இன்னொரு கட்டுரையில் த.வெ.க. அரசின் இ. டெண்டர் முறைகேடுகளை அம்பலப்படுத்தி உள்ளது. ''இ-டெண்டர் விதிகளை த.வெ.க. அரசு தளர்த்தியிருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். குறைந்த தொகை மதிப்பிலான பணிகளுக்கு இ-டெண்டர் தேவையில்லை.. நேரடி டெண்டர் என்பது, டெண்டர்களை முன்கூட்டியே முடிவு செய்வதற்கான திட்டமா? இந்தப் புதிய அறிவிப்பால், டெண்டர் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருக்காது" என்றும் சொல்லி இருக்கிறது. இதற்கு விஜய் பதில் என்ன?

இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத விஜய் அரசு, ஆசிரியர் அருண்ராமின் புகைப்படத்தை நீக்கி தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இவை தொடர்ச்சியாக நடக்கத் தொடங்கி இருக்கின்றன.

ஜோசியர் ஆலோசனைப்படி முகாம் அலுவலகத்தை மாற்றுகிறார் விஜய். அந்த வீட்டைப் பார்க்க வந்தார் விஜய். கடந்த 17 ஆம் தேதியன்று அதைப் பார்க்க வந்தவரை வீடியோ எடுக்க வந்த ஊடகங்களை எதற்காகத் தடுக்க வேண்டும்? அவர் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே 'லைவ்' போடச் சொல்லும் அதிகாரிகள், இதை மட்டும் எதற்காகத் தடுக்க வேண்டும்? பள்ளிப் பேருந்து ஒன்றை குறுக்கே நிறுத்தி எதற்கு ஊடகங்களை மறைக்க வேண்டும்?

சில நாட்களுக்கு முன் ஆந்திராவில் ஒரு நிகழ்ச்சி. அதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவிடம் 'தி வீக்' செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியம் தொழில் முதலீடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டுக்கான முதலீடு சமீபகாலமாக குறைந்து வருவதும், ஆந்திராவுக்கான முதலீடுகள் அதிகமாகி வருவதும் ஏன் என்பது அவரது கேள்வி.

சிரித்துக் கொண்டே ஆந்திர முதலமைச்சர் சொன்னார்: 'அவர்களுக்குத் தேவை மசாலா. எங்களுக்கு தேவை இலக்குகள்' என்று சொன்னார். 'கவர்ச்சி'தான் உங்களுக்குத் தேவை என முகத்தில் அறைந்துவிட்டார் சந்திரபாபு. தமிழ்நாட்டின் இன்றைய நிலைமையை இதை விட யாரும் சரியாகச் சொல்ல முடியாது. இது சமூக வலைதளங்களில் வெளியானது. உடனே அதை விமர்சித்து ஆபாசமான பதிவுகளை த.வெ.க.வினர் செய்து வருகிறார்கள்.

'இல்லை, தமிழ்நாட்டுக்கு அதிகமான முதலீடு வந்துவிட்டது என்று ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துவிட்டதாக ஒரு மாநாடு போட்டாரே தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா. அதில் எது வந்துள்ளது என்பதைச் சொல்லுங்கள். கீர்த்தனா வளம் ஆகி இருக்கிறார். தமிழ்நாடு வளம் ஆகி இருக்கிறதா? ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்ட ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்துவதுதான் தூயசக்தியின் அரசியலா?

ஒரிஜினல் விஜய் இப்படித்தான் இருப்பார். இதை ஊடகங்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal