Dailyhunt
காளிதாஸ் 2 திரை விமர்சனம்

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

Kalakkal Cinema 3 weeks ago

புறநகர் சென்னையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அபர்ணதி - அனந்த் நாக் தம்பதியின் 4 வயது மகள் திடீரென காணாமல் போகிறார்.

இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ, அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தியை சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார்கள். ஆனால் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே குழந்தையின் சடலம் கிடைக்கிறது. அதே சமயம், அஜய் கார்த்திக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இல்லாததால், வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் அவரை விடுவிக்கிறார்.

குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர் யார் என்பதை கண்டுபிடிக்க பரத் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள, அஜய் கார்த்தியே குற்றவாளி என்று நிரூபிக்க பவானி ஸ்ரீ முயற்சிக்கிறார். இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அதே குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பது பரபரப்பை அதிகரிக்கிறது. இந்த தொடர் சம்பவங்களின் பின்னணி என்ன? உண்மையான குற்றவாளி யார்? என்பதையே சஸ்பென்ஸாக சொல்லும் படம் தான் 'காளிதாஸ் 2'.

ஒரே ஒரு குற்றச்சம்பவத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், அதனுடன் பல சம்பவங்களை இணைத்து விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை தக்க வைத்திருக்கும் திரைக்கதை, பார்வையாளர்களை சீட் நுனியில் வைத்தே செல்கிறது.

காளிதாஸ் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பரத், மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அலட்டலற்ற அணுகுமுறை, கூர்மையான விசாரணை ஆகியவற்றின் மூலம் அனுபவமுள்ள அதிகாரியின் தன்மையை நம்பகமாக காட்டுகிறார். எந்தவித கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல், கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து அவர் காட்டும் நடிப்பு, படம் முழுவதும் வலுவாக திகழ்கிறது.

அஜய் கார்த்தி, அமைதியான தோற்றத்திலும் கண்களால் பேசும் நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். அதிக வசனங்கள் இல்லாதபோதிலும், கதையின் மையத்தில் இருப்பதால் அவரது நடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பிய சங்கீதா, எதிர்பாராத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். பவானி ஸ்ரீ, அதிகாரத்தின் ஆவேசத்துடன் செயல்படும் அதிகாரியின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்துகிறார். அபர்ணதி, குறைந்த காட்சிகளிலேயே திரைக்கதைக்கு முக்கிய திருப்பத்தை அளிக்கிறார். அனந்த் நாக், பிரகாஷ் ராஜ், கிஷோர் ஆகியோரின் திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, முழுப் படத்திலும் ஒரு தனித்துவமான நிறத்தை பயன்படுத்தி, பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளார். புறநகர் சென்னை மற்றும் குடியிருப்பை பல கோணங்களில் காட்டிய விதம் கவனிக்கத் தக்கது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அதிகம் பேசவில்லை என்றாலும், பின்னணி இசை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமைதியான சூழலை காக்கும் வகையில் இசை அமைக்கப்பட்டிருப்பது படத்தின் உணர்வை உயர்த்துகிறது.

புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு, திரைக்கதையின் சஸ்பென்ஸை சரியாக தக்க வைத்திருக்கிறது. அரவிந்தன் ஆனந்த் எழுதிய திரைக்கதை, பல சம்பவங்களை ஒன்றாக இணைத்து சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

இயக்குநர் ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கான அனைத்து அம்சங்களையும் சரியாக பயன்படுத்தி, காவல்துறையின் பணிச்சுமை மற்றும் அழுத்தங்களை நெருக்கமாக காட்டியுள்ளார். ஆரம்பத்திலேயே கதைக்குள் இழுத்து, இறுதி வரை எதிர்பார்ப்பை குறைக்காமல் கொண்டு செல்வது அவரது பலம்.

மொத்தத்தில், 'காளிதாஸ் 2' - விறுவிறுப்பும் சஸ்பென்ஸும் கலந்த, காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் ஒரு தரமான திரில்லர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalakkal Cinema