தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'சீயான் 63' திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம் தற்போது அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
நடிகர் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு 'இருமுகன்' படத்தில் வெற்றிகரமாக இணைந்திருந்த விக்ரம் - ஆனந்த் சங்கர் கூட்டணி, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்திற்கான விரிவான முன்தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை நிறைவு செய்து ரசிகர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
'சீயான் 63' திரைப்படம் குடும்ப பின்னணியுடன் கூடிய ஆக்சன் திரில்லராக உருவாகவுள்ளது. விக்ரமின் மாஸ் அம்சங்களுடன், குடும்ப உறவுகள், உணர்வுபூர்வமான தருணங்கள், பரபரப்பான திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகள் இணைந்த முழுமையான பொழுதுபோக்கு படைப்பாக இது அமையும் என கூறப்படுகிறது.
இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றுகிறார். அவரது இசை, படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
வலுவான கூட்டணி, அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழு மற்றும் பெரிய தயாரிப்பு மதிப்புடன் உருவாகும் 'சீயான் 63', தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

