Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆண் குழந்தைகளுக்கு விரைப்பை வலி: உதாசீனப்படுத்தினால் வரும் ஆபத்து!

ஆண் குழந்தைகளுக்கு விரைப்பை வலி: உதாசீனப்படுத்தினால் வரும் ஆபத்து!

Kalki Online 3 months ago
Kalki Strip

விரையில் வலி - கால தாமதத்தால் விரை இழந்த சிறுவன் - டாக்டர் க. இராவணன் அவர்களின் விழிப்புணர்வு பகிர்வு:

வழக்கமாக இரவு ஏழு மணியுடன் கிளினிக் முடிந்து விடும். அன்று சரியாக ஏழு மணிக்கு 5 வயது சிறுவனை அவன் பெற்றோர் அழைத்து வந்தனர்.

"என்ன ஆச்சு?" என்றேன்.

தந்தை, "விரைப் பகுதியில் வலிக்குதுன்னு சொல்றான் சார... இடது பக்கம் கொஞ்சம் வீக்கமாகவும் இருக்கு."

"எப்போதிருந்து?"

"ரெண்டு நாளா சொல்றான் டாக்டர். ஆனா இப்பதான் அதிகமா இருக்கு, அழுவுறான்" - அம்மா.

"ஏன் உடனே வரல?"

"இவர் வேற ஊர்ல வேலை செய்றார். கூட்டிட்டு வர ஆளில்ல. இப்பதான் வந்தார். அதான் உடனே வந்தோம் டாக்டர். கொஞ்சம் தயவு பண்ணி பாருங்க."

குழந்தையை உயரமான மேசையில் படுக்க வைத்து விரைப் பையை பரிசோதித்தேன். இடது பக்கம் லேசாக வீங்கி இருந்தது. மெதுவாக தொடும்போதே வலியால் துடித்தான். அனிச்சை செயல் சுத்தியல் (Reflex hammer) கொண்டு தொடைப் பகுதியில் லேசாக கோடு போட்டுப் பார்த்தேன். பொதுவாக 'கிரெமாஸ்ட்ரிக் தசை சுருக்கம்' ஏற்பட்டு விரை மேலே போக வேண்டும். ஆனால் சிறுவனுக்கு அப்படி ஆகவில்லை.

"ஏதாவது அடி பட்டதா?"

"தெரியல டாக்டர். ஆனா நேத்து பூரா கட்டில், சோஃபா மேல ஏறி குதிச்சிட்டு இருந்தான், அதான் பிறகுதான் வலி சொன்னான்."

"எனக்கு டவுட்டா இருக்கு. அடி பட்டதா, விரை முறுக்கி இருக்கா தெரியல, விரைக்கு போற ரத்த ஓட்டம் பாதிச்சுருக்கான்னு பாக்க ஒரு அல்ட்ரா சவுண்ட், டாப்ளர் ஸ்கேன் பண்ணிட்டு வாங்க."

ஸ்கேனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு. செவிலியரை அழைத்து இவங்க ஸ்கேன் ரிபோர்ட் வந்த உடனே எனக்கு இன்ஃபாம் பண்ணுங்க என்றேன்.

சுமார் அரை மணிநேரத்தில் ஸ்கேன் ரிபோர்ட் வந்தது. அதில் விரைக்கு செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடை பட்டிருப்பதாக இருந்தது.

உடனே குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மருத்துவரை பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

"டாக்டர் இப்போ இருப்பாரா, ஏதாவது எமர்ஜென்சியா?" - தந்தை.

"ஆமாம், அவசரம்தான்" என்று சொல்லிவிட்டு என் அலைபேசியை எடுத்து குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன். அவரும் "உடனே வரச் சொல்லுங்கள்," என்றார்.

குழந்தையின் தந்தையிடம் அந்த சிறப்பு மருத்துவரின் விலாசத்தை கொடுத்து குழந்தையை அழைத்துப் போக சொன்னேன்.

அரை மணி நேரத்தில் எனக்கு அலைபேசியில் சர்ஜன் அழைத்தார். "குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும். மயக்க மருந்து சிறப்பு மருத்துவரிடம் தகவல் சொல்லியாச்சு. குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து விட்டேன்," என்று தகவல் சொன்னார்.

"டூ தி பெஸ்ட் டு தி சைல்டு சார்," என்று சொல்லி அலைபேசியை அணைத்தேன்.

எப்போ தூங்கினேன் என்று தெரியவில்லை. காலை ஐந்து மணிக்கு எழுந்து மெசேஜ் பார்த்தேன்.

சர்ஜன் தான் அனுப்பியிருந்தார் இரவு 1 மணிக்கு.

"சாரி டாக்டர். ஓபன் பண்ணி பார்த்ததில் குழந்தையின் இடப் பக்க விரை முழுவதுமாக ரத்த ஓட்டம் பாதிக்கப் பட்டு செயலிழந்து விட்டது."

வேறு வழியில்லாமல் இடது விரையை நீக்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், ஆனால் வலது பக்க விரைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் எழுதியிருந்தார்.

காலை 10 மணிக்கு குழந்தையின் பெற்றோரை அழைத்து பேசினேன்.

ஆண் குழந்தைகளை அதிகம் தாக்கும் திக்குவாய்! பெற்றோர்களே உஷார்!

"விளையாடும் போது ஏற்பட்ட விபத்து தான். கால தாமதமாகி விட்டதால் ரத்த ஓட்டம் முழுமையாக தடைபட்டு விட்டது. வலி ஏற்பட்டு 6 லிருந்து 10 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்திருந்தால், விரையை முழுமையாக செயல்பட வைக்க முடியும்."

"எங்களுக்கு தெரியாது டாக்டர், இப்போ அவனோட எதிர்காலம்?" என்று தயங்கினார் தாய்.

அவர்கள் சந்தேகத்தை புரிந்து "எதிர்காலத்தில் திருமணம், தாம்பத்யம், குழந்தை பேறு இதற்கெல்லாம் எந்த ஒரு சிக்கலும் இருக்காது, ஆனால் இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..." என்று அவர்களை தைரியப் படுத்தி அனுப்பினேன்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online