Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஐந்து முகம், எட்டு கரங்கள் கொண்ட முருகன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Kalki Online 2 years ago

முருகப்பெருமானை ஆறுமுகன் என்ற பெயர் கொண்டும் அழைப்பர். அவர் ஆறு முகங்களைக் கொண்டிருப்பதால் அப்பெயர் முருகனுக்கு வந்தது.

ஆறுமுகம் கொண்ட முருகனை பல தலங்களில் தரிசித்திருக்கலாம். ஆனால், ஐந்து முகம் கொண்ட முருகப்பெருமானை பற்றி கேள்விப்பட்டதுண்டா?

கோவை மாவட்டம், அன்னூர் அருகிலுள்ள இரும்பொறையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓதிமலை முருகன் கோயில். முருகன் கோயில்களிலேயே ஓதிமலை கோயில்தான் மிக உயரமான கோயிலாகும். இந்த மலை 3000 அடி உயரமும் 1800 படிக்கட்டுகளும் கொண்டது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழைமையான கோயிலாகும்.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்து அவரை இம்மலையின் அருகிலே இரும்புச்சிறையில் அடைத்துவிட்டு பின்பு முருகப்பெருமான் இந்த ஓதிமலையிலேயே தங்கி படைக்கும் தொழிலை செய்திருக்கிறார். பிரம்மனை இரும்புச்சிறையில் அடைத்த இடம்தான் இன்று இரும்பொறை என்ற பெயரில் உள்ளது.

முருகப்பெருமான் படைத்தல் தொழிலை செய்தபொழுது அனைத்து ஆத்மாவும் பூமியில் புண்ணிய ஆத்மாவாகவே பிறந்தது. அதனால் அவற்றிற்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் ஏற்பட்டது. பூமா தேவி சிரமப்பட்டதால், தேவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். முருகனிடமிருந்து படைக்கும் தொழிலை பெற்று திரும்பவும் பிரம்மனிடமே தரும்படி கேட்டுக்கொண்டார்.

இதனால் சிவபெருமானும் முருகனை சந்தித்து பிம்மனிடமே படைக்கும் தொழிலை தரும்படி கேட்டுக்கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளைச் சொன்ன முருகப்பெருமான், இந்த ஓதிமலையில் வேத ஆகம விதிகளை சிவபெருமானுக்கு ஓதியதால் இது ஓதிமலை என்ற பெயர் பெற்றது.

 ஓதிமலை முருகன் கோயில்

இக்கோயிலின் மலையடிவாரத்திலிருக்கும் சுயம்பு விநாயகரை முதலில் வழிபட்டு விட்டு பின்னர் முருகப்பெருமானை காணச் செல்ல வேண்டும். முருகனைக் காண ஈசன் மட்டுமே தனியாக ஓதிமலைக்கு வந்தார். அதனால் ஈசனுக்கு மட்டுமே சிலையிருக்கிறது. அம்பாளுக்கு தனியாக சன்னிதி கிடையாது. ஆனால், இம்மலையின் மேல் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி என்ற பெயரில் இருவரும் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார்கள்.

இப்பகுதி மக்கள் ஓதிமலை முருகனின் விரும்பம் பெற்றே எந்த காரியமானாலும் செய்கிறார்கள். அரளிப்பூ மாலையை கொண்டு வந்து முருகப்பெருமானின் சிரசில் வைத்து கோரிக்கையை வேண்டுகிறார்கள். அதில் முருகனுக்கு விருப்பமென்றால், மாலை கீழே விழும். இல்லையென்றால் மாலை சிரசிலிருந்து கீழே விழாது.

இக்கோயிலின் வடமேற்கு பகுதியில் போகர் வேள்வி நடத்திய இடம் உள்ளது. அந்த இடத்தில் உள்ள மண் வெண்மையான நிறத்தில் இருக்கும். ஆதியில் இந்த மண்ணைத்தான் திருநீறு பிரசாதமாய் கொடுத்து வந்துள்ளனர்.

அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான 6 அறிகுறிகள்... ஜாக்கிரதை!

நவபாஷாணத்தில் முருகன் சிலை செய்து அதை பழநி மலையில் பிரதிஷ்டை செய்ய முனிவர் போகர் சென்று கொண்டிருந்தார். மேற்கு தொடர்ச்சி மலைக்கு மேல் அவருக்கு பழநிக்கு செல்ல வழி தெரியவில்லை. சட்டென்று அவருக்கு ஓதிமலை நினைவுக்கு வர, முருகப்பெருமானை நினைத்து வேள்வி ஒன்றை நடத்தினார் போகர். அப்போது ஓதிமலையில் முருகன் 6 முகங்களுடனும், 12 கைகளுடனும் இருந்தார் என்பது ஐதீகம். ஆனால், இன்று 5 முகத்துடனும் 8 கரங்களுடனும் காட்சி தருகிறார். இதற்குக் காரணமும் போகர் முனிவர்தான்.

தனது பக்தன் போகருக்கு, பழநி திருத்தலம் செல்ல வழிகாட்ட அதிசயத்தை நிகழ்த்தினார் முருகப்பெருமான். தனது ஆறு தலையிலிருந்து ஒரு தலையைப் பிரித்து, நான்கு கரங்களையும் கொண்டு முருகப்பெருமான் போகர் முன்பு காட்சியளித்து அவரை குமாரப்பாளையம் வரை அழைத்துச்சென்று பின்பு பழநிக்கு வழிகாட்டி விட்டு அங்கேயே குமாரப்பாளையம் முருகனாக அமர்ந்துவிட்டார். இதனால்தான் ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார் என்று தல வரலாறு கூறுகிறது.

எனவே, பழநி மலைக்கு முன்னரே உருவானதுதான் இந்த இரும்பொறை ஓதிஆண்டவர் திருக்கோயில். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். இந்த அமைப்பிற்கு 'திரிகூடபீடம்' என்று பெயர். திங்கள்,வெள்ளி, சஷ்டி, கார்த்திகை, அமாவாசை தினங்களில் மட்டுமே இத்தல முருகப்பெருமானை தரிசிக்க முடியும். எனவே, இந்த அதிசயக் கோயிலை வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோமே!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online