Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அலிபாபாவுக்கு மட்டும்தான் குகையா! கச்சா எண்ணெய்க்கும் இந்தியால குகை இருக்கு!

அலிபாபாவுக்கு மட்டும்தான் குகையா! கச்சா எண்ணெய்க்கும் இந்தியால குகை இருக்கு!

Kalki Online 4 months ago

மெரிக்க - ஈரான் நாடுகளுக்கிடையே போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் இரு நாடுகள் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளும் மேற்காசியப் போரால் பாதிப்படைந்துள்ளன.

இந்தியாவிலும் இரண்டு நாட்களில் கிடைக்க வேண்டிய சிலிண்டர்கள் காலதாமதமாக கிடைப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மத்திய மாநில அரசுகள் அச்சமடைய தேவை இல்லை என்று கூறினாலும் பொதுமக்கள் சிலிண்டர்களையும், பெட்ரோல் டீசல்களையும் வாங்குவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

சிலிண்டர்கள் கிடைக்காமல் ஒரு சில இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஒருவித பரபரப்புடன் காணப்படுகின்றனர். ஆனால் நம்முடைய இந்திய அரசாங்கம் அவசர கால தேவைக்காக கச்சா எண்ணெயை பூமிக்கு அடியில் 3 ரகசிய குகைகளில் சேமித்து வைத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.

நம் நாடு கச்சா எண்ணையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் அவசரகால தேவைகள், போர் போன்ற நெருக்கடியான நேரங்கள், திடீர் தேவை ஏற்படும் காலங்கள், கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ளுதல் போன்ற காலங்களில் நிலைமையை சமாளிக்கவும் தட்டுப்பாடு வராமல் இருக்கவும் பூமிக்கு அடியில் பல லட்சம் டன் கச்சா எண்ணையை மத்திய அரசு பல ஆண்டுகளாக சேமித்து வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் என தென்னிந்திய மாநிலங்களில் மூன்று இடங்களில் மத்திய அரசு பூமிக்கடியில் ரூபாய் 4,100 கோடி செலவில் குகைகள் அமைத்துள்ளன. இவற்றில் விசாகப்பட்டினத்தில் உள்ள குகை மிக பழமையானதாக உள்ளது. பெட்ரோலிய இருப்புகளை பராமரிக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான ஐ எஸ் பி ஆர் 10 ஆண்டுகளுக்கு முன் குகைகளை ஏற்படுத்தி அவற்றை திறம்பட பராமரித்து வருகிறது.

விசாகப்பட்டினம், மங்களூர், படூர் உள்ளிட்ட மூன்று குகைகளில் மொத்தம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை அதாவது 40 மில்லியன் பீப்பாய்கள் சேமித்து வைக்க முடியும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கச்சா எண்ணெய்கள் மூலமாக நம் நாட்டின் தேவையை 10 நாட்களுக்கு பூர்த்தி செய்ய முடியும்.

மேலும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படாத வகையிலும் வெளிப்புற தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் சேதமடையாத வகையிலும் விசாகப்பட்டினம், மங்களூர், படூர் குகைகளில் கச்சா எண்ணெயை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும்.

இசை மும்மூர்த்திகளின் சிகரம்: முத்துசுவாமி தீட்சிதரின் தெய்வீக இசைப் பயணம்!

அதோடு பூமிக்கு அடியில் புகை போன்ற ஆழமான இடத்தில் கச்சா எண்ணெயை சேமித்து வைப்பதால் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதோடு, தீ விபத்து, எண்ணெய் கசிவு போன்ற அபாயங்கள் குறைவாக இருக்கும் என்பதால் இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

மேலும் இதுவரை மத்திய அரசு இந்த குகைகளில் உள்ள கச்சா எண்ணெயை பயன்படுத்தவில்லை. மேற்காசிய போரால் இந்தியா மாற்று வழிகளை கையாண்டு கச்சா எண்ணெய் தேவையை நிறைவு செய்யும். எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளும் கை கூடாத பட்சத்தில்தான் மத்திய அரசு இந்த மூன்று குகைகளில் உள்ள கச்சா எண்ணெய்களை எடுத்து தேவைப்படும்போது பயன்படுத்தும்.

ஆகவே மக்களே சுதந்திரமான ,ஜனநாயக நாட்டில் வாழும் இந்தியர்களாகிய நாம் தேவையற்ற வதந்திகளை நம்பாமல் நம் அன்றாட தேவைக்கேற்ற எரிபொருட்களை மட்டும் வாங்கியும், பயன்படுத்தியும், சிக்கனமாக வாழ முயற்சிப்போம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online