Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரசு வாகன பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடு- விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

அரசு வாகன பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடு- விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

Kalki Online 44 mins ago

ரசு அதிகாரிகள் தங்களிடம் கூடுதலாக உள்ள அரசு வாகனங்களை, உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் அரசு வாகனங்களின் தேவையற்ற பயன்பாட்டை தடுக்க, தலைமைச் செயலகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அரசின் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தவும், வாகனங்களை அதிகார வரம்பை மீறி வைத்திருப்பதைத் தடுக்கவும் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக மற்றும் அதிமுக என பெரிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியது. பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து தமிழத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து அதனை சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பாரம்பரிய திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு புதிய அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. நிர்வாகத்தில் வேகம் காட்டக் கோரி சில முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது மற்றும் காத்திருப்புப் பட்டியலுக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும். தெரிந்தவர், தெரியாதவர் என்றெல்லாம் பார்க்க மாட்டேன் என்று எச்சரித்துள்ளார்..

இந்நிலையில் தான் ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுத் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரே ஒரு சொகுசு வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 41 அரசு துறைகளில், 15,000த்துக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பொதுத்துறை வாயிலாக, சொகுசு கார்கள் வழங்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணைகளில், பல மூத்த ஐஏஎஸ் மற்றும் துறை தலைமை அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனங்களைத் தாண்டி, துறை சார்ந்த கூடுதல் வாகனங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

சில அதிகாரிகள் தங்களது அலுவலகம், சொந்த வீடு மற்றும் உதவியாளர்களின் பயன்பாட்டிற்காக ஒரே நேரத்தில் 4 வாகனங்கள் வரை சட்ட விரோதமாக தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 முதலமைச்சர் விஜய்|அரசு வாகனங்கள்

அதேபோல், எரிபொருள் படிகளிலும் மிகப்பெரிய அளவில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. ஓடாத வாகனங்கள், பயன்படுத்தாத வாகனங்களுக்கும், எரிபொருள் நிரப்புவதாக, போலி கணக்கு காட்டப்பட்டு லட்சக்கணக்கில் அரசுப் பணம் சுருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நிலவரப்படி, தமிழக அரசு தனது வாகனங்களுக்கு எரிபொருளுக்காக மட்டும் மாதந்தோறும் சுமார் ரூ.25 கோடியை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. வாகனங்களை முறைப்படுத்தினால், அரசின் செலவு குறையும். இந்த முறைகேடுகள் தெரியவந்ததை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனப் பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, இனிமேல் ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுத் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரே ஒரு சொகுசு வாகனத்தை(அரசு வாகனங்கள்) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குட் நியூஸ்.!! குறையப்போகுது வீட்டுமனை விலை! தமிழக அரசின் மெகா அறிவிப்பு.!

தங்கள் அலுவலகம், வீடுகளில் உள்ள வாகனங்களை, துறை தலைமை அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மாநகரின் பல்வேறு அரசு வளாகங்களில் அதிகாரிகள் தங்களது கூடுதல் வாகனங்களை வரிசையாக ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் சேப்பாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, எம்.ஆர்.சி., நகர், தரமணி, கிண்டி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் இயங்கி வரும் துறை அலுவலகங்களுக்கு, தங்கள் பயன்பாட்டில் இருந்த வாகனங்களை, அரசு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

இதேபோல, ஐஏஎஸ், அல்லாத பிற துறை உயர் அதிகாரிகளும், தங்களிடம் உள்ள அரசு வாகனங்களின் விவரங்கள் குறித்த முழுமையான விவரங்களை உடனடியாக வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

குட் நியூஸ்..! இனி இரண்டே நாட்களில் சாதி சான்றிதழ்: தமிழக அரசு அதிரடி!

குறிப்பாக வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய முக்கியத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் இது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை சொந்தப் பயன்பாட்டில் வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online