Dailyhunt
அர்ச்சுனன் தேரில் அனுமன் கொடி? இது எப்படி?

அர்ச்சுனன் தேரில் அனுமன் கொடி? இது எப்படி?

Kalki Online 2 weeks ago

திரேதாயுகம் முடிந்து துவாபரயுகம் துவங்கிய போது சிரஞ்சீவியான அனுமன், ராம நாமத்தை உச்சரித்தபடி சேதுக்கரையில் தவம் இருந்தார்.

துரியோதனன் கூறியபடி பாண்டவர்களுக்கு நாடு நகரங்களை திருப்பி கொடுக்க மறுத்ததால் போரிடுவதை தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயம் ஏற்பட்டது. இதில் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் சிவபெருமானிடம் இருந்து தவத்தின் மூலம் பாசுபத அஸ்திரத்தை பெற்று வர புறப்பட்டார்.

பல புனித தலங்களில் நீராடிய அர்ச்சுனன் சேதுக்கரை வந்து தியானத்திலிருந்த அனுமனைக் கண்டு அருகில் சென்றார். "நீ யாரப்பா?" என அனுமான் கேட்க, "பஞ்சபாண்டவர்களில் வில்வித்தையில் சிறந்த அர்ச்சுனன் நான்" என பதில் அளித்தார்.

அர்ச்சுனன், "ராமர் வில்வித்தையில் சிறந்தவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க, அம்புகளைக் கொண்டு பாலம் அமைக்காமல் வானரங்களை வைத்து கற்கள், பாறைகளால் பாலம் கட்ட வேண்டிய அவசியம் இல்லையே?" எனக் கேட்டான்.

அனுமன் யோசித்து, "அம்பால் கட்டும் பாலம் என் போன்ற வானர வீரர்களை தாங்குமா?" எனக் கேட்டதற்கு அர்ச்சுனன், "பெரிய பெரிய மலைகளை கூட தாங்கும் வலுவான பாலத்தை என்னால் கட்ட முடியும்," என பெருமையுடன் கூறினான்.

அர்ஜுனன் தேர்க்கொடியில் அனுமன் வந்த ரகசியம் : ஶ்ரீ சத்யசாயி பாபா விளக்கம்!

ராமபிரானை அவமதிக்கும் இந்த அகம்பாவப் பேச்சு அனுமனுக்கு வருத்தத்தை அளித்தது. "அர்ச்சுனா அம்புகளினால் நீ பாலத்தை அமைத்துக் காட்டு! என்னைத் தாங்குகிறதா எனப் பார்ப்போம் " என்றார்.

இதில் ஜெயிப்பவர்கள் மற்றவர்களுக்கு அடிமை என்ற வாக்குறுதியுடன் போட்டிக்கு இருவரும் சம்மதித்தனர். அர்ச்சுனன் அம்புகளால் பாலத்தை உருவாக்க, அனுமன் ராம நாமத்தை உச்சரித்தபடி பாலத்தின் மீது ஒரு காலை வைத்த பொழுதே நொறுங்கி விழுந்தது.

அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன் கிருஷ்ணரை நினைத்து, "நான் என்ன குற்றம் செய்தேன். எனக்கு ஏன் இந்த அவமானம்" என மனதிற்குள் வேண்டினான்.

அப்போது அந்தணர் வடிவில் வந்த கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், "வீரனாக தெரியும் உன் முகத்தில் சோகம் படர்ந்திருப்பதன் காரணம் என்ன?" எனக் கேட்டார்.

அர்ச்சுனன் நடந்தவற்றை கூற, போட்டி என்றால் அதற்கு நடுவர் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார் என அந்தணர் கூறியதைக் கேட்டு, இருவரும் சம்மதித்து மறுபடியும் போட்டிக்கு தயாராகினர்.

இப்போது அம்புகளால் அர்ச்சுனன் கட்டிய பாலத்தின் மீது ஏறிய அனுமனை தாங்கிய பாலம் வலுவாக இருந்தது. அனுமன் முழு பலத்தை காட்டியும் பாலத்தை அசைக்க முடியவில்லை.

இதில் ஏதோ மாயம் உள்ளது என்பதை உணர்ந்த அனுமன், "ஸ்ரீ ராமா! இது என்ன சோதனை!" என கை கூப்பி வணங்க, அந்தணர் உருவில் இருந்த கிருஷ்ணர் சுய ரூபத்தில் தோன்றினார்.

"என் பலம் எங்கே போயிற்று?" எனக்கேட்ட அனுமனுக்கு, கிருஷ்ணர், "எக்காலத்திலும் உன்னுடைய பலம் குறைந்து போகாது. உன்னால் மாபெரும் காரியம் நடக்க வேண்டி உள்ளது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கும் போரில் சாரதியாக அர்ச்சுனனுக்கு நான் உதவ இருக்கிறேன். அச்சமயம் அர்ச்சுனன் தேருக்கு நீ கொடியாக இருந்து பாண்டவர்கள் வெற்றிபெற உதவ வேண்டும்," என அனுமனிடம் கேட்க அதற்கு அனுமனும் சம்மதிக்க கிருஷ்ணர் மறைந்தார்.

அர்ச்சுனரிடம் சென்ற அனுமன், "உன்னைப் பற்றி அறியாமல் போட்டியிட்டதற்கு வருந்துகிறேன். நடக்க இருக்கும் போரில் நானே கொடியாக இருந்து உனக்கு பாதுகாப்பளித்து வெற்றி பெற உதவி புரிகிறேன்," என வாக்களித்தார். அர்ச்சுனனும் தனது தவறுக்கு மன்னிப்பு கோர, இருவரும் ஆலிங்கனம் செய்து கொண்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online