Dailyhunt
அறிவியலை மிஞ்சும் இயற்கை: மரணமில்லா வாழ்வும், மர்மமான பிறப்பும்!

அறிவியலை மிஞ்சும் இயற்கை: மரணமில்லா வாழ்வும், மர்மமான பிறப்பும்!

Kalki Online 0 months ago

யற்கை அன்னை தனது படைப்பில் எண்ணற்ற மர்மங்களையும் ஆச்சரியங்களையும் ஒளித்து வைத்துள்ளது. நாம் சாதாரணமாகக் காணும் விலங்குகளுக்கு அப்பாற்பட்டு, சில உயிரினங்கள் அறிவியலால் கூட எளிதில் விளக்க முடியாத விசித்திரமான பண்புகளைக் கொண்டுள்ளன.

பிறக்கும்போதே அடுத்த தலைமுறையைத் தன் வயிற்றுக்குள் சுமந்து வரும் அஃபிட்கள்(ஒரு வகை செடி பேன்கள்) மற்றும் முதுமையை வென்று மீண்டும் மீண்டும் இளமையைப் பெறும் ஜெல்லிமீன்கள் என, இயற்கையின் இந்த வியக்கத்தக்க விந்தைகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

அஃபிட்டின் சுவாரசியமான சில தகவல்கள்

தொலைநோக்கி வளர்ச்சி (Telescoping Generations): பெண் அஃபிட்கள் கருவுறாமலேயே குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை (Parthenogenesis). ஒரு பெண் அஃபிட் தனது வயிற்றில் ஒரு கருவை வளர்க்கும்போதே, அந்தச் சிறிய கருவின் வயிற்றுக்குள்ளும் அடுத்த தலைமுறைக்கான கரு வளரத் தொடங்கிவிடும். அதாவது, ஒரு பாட்டி அஃபிட், தன் வயிற்றுக்குள் இருக்கும் மகளையும், அந்த மகளின் வயிற்றுக்குள் இருக்கும் பேத்தியையும் ஒரே நேரத்தில் சுமந்து கொண்டிருக்கும். இந்தத் திறனால் இவை மிகக் குறுகிய காலத்தில் தங்களது எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் பெருக்கிக் கொள்கின்றன.

அழியாத உயிரினம் (Immortal Jellyfish): துரிடோப்சிஸ் டோர்னி (Turritopsis dohrnii) என்ற ஒரு வகை ஜெல்லிமீன், முதுமை அடைந்தாலோ அல்லது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, மீண்டும் தனது குழந்தை பருவத்திற்கே (Polyp stage) சென்றுவிடும். அதாவது, இது தொழில்நுட்ப ரீதியாக ஒருபோதும் சாவதே இல்லை!

இது எப்படி "மீண்டும் பிறக்கிறது"?

இந்த ஜெல்லிமீன் முதுமை அடையும்போதோ, காயம் ஏற்படும்போதோ அல்லது உணவின்றி தவிக்கும்போதோ ஒரு அற்புதமான உத்தியைக் கையாள்கிறது. இது தனது உடலில் உள்ள முதிர்ச்சியடைந்த செல்களை மீண்டும் இளமையான செல்களாக மாற்றிக்கொள்கிறது. பொதுவாக ஒரு ஜெல்லிமீன் முட்டையிலிருந்து லார்வாவாக மாறி, பிறகு கடலடியில் ஒட்டிக்கொண்டு வளரும் (Polyp stage), இறுதியில் முழு ஜெல்லிமீனாக (Medusa) மாறும்.

இயற்கையின் 'உயிரியல் புதையல்'! வடகிழக்கு இந்தியக் காடுகளில் ஒளிந்திருந்த ரகசியம்!

பின்னோக்கிய பயணம்: இந்த அழியாத ஜெல்லிமீன் மட்டும், தான் இறக்கும் தருவாயில் மீண்டும் அந்த 'Polyp' நிலைக்குச் சென்றுவிடுகிறது. அங்கிருந்து மீண்டும் ஒரு புதிய ஜெல்லிமீனாக வளரத் தொடங்குகிறது. இது பார்ப்பதற்கு மிகப் பெரியதாகத் தெரிந்தாலும், உண்மையில் ஒரு சுண்டு விரல் நகத்தின் அளவை விடச் சிறியது (சுமார் 4.5 மிமீ). இவை முதலில் மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டறியப்பட்டன. ஆனால், இப்போது உலகம் முழுவதிலும் உள்ள கடல்களில் காணப்படுகின்றன.

"அழியாதது" என்று சொன்னாலும், மீன்கள் இவற்றை வேட்டையாடித் தின்றாலோ அல்லது கடுமையான நோய் தாக்கினாலோ இவை இறந்துவிடும். ஆனால், முதுமையால் இவை ஒருபோதும் இறப்பதில்லை.

முடிவில்லாத சுழற்சியைக் கொண்ட ஜெல்லிமீன்களும், அதிவேகமாகத் தனது இனத்தைப் பெருக்கும் அஃபிட்களும் உயிர்வாழ்தல் (Survival) எனும் போராட்டத்தில் இயற்கையிடம் பெற்ற வரங்கள் அசாத்தியமானவை. இத்தகைய விசித்திரமான விலங்குகளைப் பற்றி ஆராயும்போது, பூமி எவ்வளவு பெரியது என்பதும், அதில் மனித அறிவுக்கு எட்டாத ரகசியங்கள் இன்னும் எவ்வளவு புதைந்து கிடக்கின்றன என்பதும் நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்த அதிசயங்களைப் பாதுகாப்பதும், அவற்றைப் போற்றுவதும் நமது கடமையாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online