Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அதிமுகவில் 'சின்னம்மா' என்ட்ரி... ஆட்டம் காணுமா தற்போதைய தலைமை?

அதிமுகவில் 'சின்னம்மா' என்ட்ரி... ஆட்டம் காணுமா தற்போதைய தலைமை?

Kalki Online 4 days ago

தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், டிடிவி தினகரனை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் நேருக்கு நேர் பேசியது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக அதிமுகவுக்குள் சசிகலாவும் வர வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

சுமார் 60 ஆணடு காலம் தமிழகத்தை ஆண்ட திமுக மற்றும் அதிமுகவுக்கு பதிலாக தவெக என்னும் புதிய கட்சி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளது. அதுவும் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

இதில் திமுகவை பொறுத்தவரை அந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளித்தன. சமீபத்தில் மதிமுகவும் திமுக கூட்டணியை விட்டு விலகியது.

தமிழகத்தில் மற்றொரு பிரதான கட்சியான அதிமுக தேர்தலில் 47 இடங்களை மட்டுமே பெற்று மாபெரும் பின்னடைவைச் சந்தித்ததுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு (EPS) எதிராக அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உட்கட்சி பூசல் வெடித்தது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு எதிராக வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்ததுடன் இவர்கள் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து செயல்பட்டனர். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள், கட்சி கட்டளையை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எனவே அவர்களின் கட்சிப்பதவிகளை பறித்து கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தது. இதனிடையே சி.வி.சண்முகம் தலைமையிலான அதிருப்தி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கே. மரகதம், டி. ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மற்றும் வி. சத்தியபாமா ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

 EPS Sasikala

அதிருப்தி அடைந்த பல முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிர்த்து தெரிவித்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்து வருவதால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி புதிய பொறுப்புகளை அறிவித்த போதிலும், பல மூத்த தலைவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் அதிருப்தி மற்றும் கோஷ்டிப் பூசல் தொடர்ந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாகவும், தனிப்பட்ட முறையில் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

எடப்பாடியின் இந்தச் செயல்பாடுகளுக்கு எதிராக, கே.சி. வீரமணி மற்றும் எஸ்.எம். சுகுமார் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்தனர். அவர்களைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளையும் எடுத்தது.

கட்சியை விட்டுச் சென்ற தலைவர்களை மீண்டும் அழைத்து வர எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவெகவில் இணைவது அக்கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தவெகவை நோக்கி நகர்ந்து வரும் அரசியல் சூழலில், அதிமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், சில மாவட்ட நிர்வாகிகள், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சியை கட்சி தலைமை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாகவும் அதற்கு அவர், டிடிவி தினகரன் தற்போது தனியாக ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.

தினகரனை அன்போடு வரவேற்ற எடப்பாடி பழனிசாமி - வலுப்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி..!

அப்படியிருக்கும்போது அவரை எப்படி அழைத்து வந்து கட்சியில் சேர்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிர்வாகிகள் டிடிவி தினகரனை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது எடப்பாடியை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது என்றும் சொல்கின்றனர்.

இந்நிலையில் மறுபுறம் சசிகலாவை சைலன்டாக அதிமுகவுக்குள் கொண்டுவரும் வேலையும் நடந்து வருவதாக சொல்கின்றனர். ஏற்கனவே சசிகலா அதிமுக ஒன்று சேர வேண்டும் இல்லை என்றால் தோல்விதான் மிஞ்சும் என சொல்லி வந்தார். அவர் சொன்னது போலவே அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

அத்துடன் முக்கிய தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கட்சியை விட்டு வெளியேறி வருவதையடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் மீண்டும் அதிமுகவில் எழத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அதிமுகவில் இருக்கும் தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் மூலம் சசிகலா இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் எழுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக அதிமுக கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் கட்சியினரை ஒன்றிணைக்க என்ட்ரி கொடுக்க சசிகலா தயாராகி வருவதாக டெல்டா அதிமுகவினர் கூறுகின்றனர்.

"நீக்கப்பட்டது நீக்கப்பட்டதுதான்": ஓபிஎஸ்-ன் கோரிக்கையை அடியோடு நிராகரித்த எடப்பாடி பழனிசாமி..!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற குரல்கள் சில மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடமிருந்து எழுந்தாலும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் ரீ-என்ட்ரி குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித சாதகமான பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online