Dailyhunt
அதிர்ஷ்டம் என்பது பிறப்பில் இல்லை, நாம் வளர்க்கும் எண்ணத்தில் இருக்கிறது!

அதிர்ஷ்டம் என்பது பிறப்பில் இல்லை, நாம் வளர்க்கும் எண்ணத்தில் இருக்கிறது!

Kalki Online 4 days ago

ரு தந்தை சிறுவயதிலேயே தன்னுடைய தாயை இழந்த தன் மகளை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார். புற்றுநோயின் காரணமாக சிறுமியின் தாய் இறந்து விட்டார்.

இதனால் வீட்டிற்கு வந்த உறவினர்கள் அனைவரும் "இந்த சிறுமி 'அதிர்ஷ்டம் இல்லாதவள்' அதனால் தான் அவளுடைய தாய்க்கு இப்படி ஆயிற்று" என்று கூறி வந்தனர். இதை கேட்ட சிறுமியின் தந்தைக்கு கோபம் வந்துவிட்டது.

சிறுமிக்கும் தாயினுடைய இறப்பிற்கும் சம்பந்தமில்லாத நிலையில் தன் மகளை பிரச்சனையான சூழ்நிலைகளில் நம்பிக்கையோடு வாழ வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் தினந்தோறும் தோல்வியோடு வரும் மகளை "நாம் அதிர்ஷ்டசாலிகள்" என்று கூறி வளர்த்து வந்தார்.

இதுவே மகளுக்கு பழக்கப்பட்டு நாளடைவில் ஏதாவது பிரச்சனை வந்து கஷ்டப்பட்டால் 'நான் அதிர்ஷ்டசாலி; இப்பிரச்சனையினால் எனக்கு ஏதேனும் நன்மை உண்டு' என்ற எண்ணத்துடன் தோல்வியை ஏற்று சமாளிக்கும் வண்ணம் வளர்ந்திருந்தாள்.

மேலும் அந்தத் தந்தை அடிக்கடி தன் மகளுக்கு ஒரு கதையைக் கூறி வந்தார். சிறுவன் ஒருவன் தன்னுடைய காலில் போட 'நல்ல ஷுக்கள்' இல்லையே என ஆதங்கத்துடன் சோகமாக தெருவில் அமர்ந்திருந்தான். அப்போது அவனிடம் வந்த ஒருவர், "தம்பி! ஏன் சோகமாக இருக்கிறாய்?" என அன்போடு கேட்க, தன் காலில் போட நல்ல ஷூக்கள் இல்லை என அவன் வாய் திறந்து கூற நினைத்தபோது, தன்னிடம் அன்போடு கேட்ட மனிதரின் கால்களை பார்த்தான்.

அவனுக்கு ஆச்சரியமாக போய்விட்டது. ஏனென்றால் அந்த மனிதரின் கால்களில் "அடிப்பாதமே இல்லை". உடனே அந்த சிறுவன் ஏதும் சொல்லாமல் ,"ஒன்றும் இல்லை" எனக் கூறிவிட்டு ஒருவித எழுச்சியுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். எனக்கு காலில் அணிய ஷூக்கள் இல்லை என்று அழுகிறேன். ஆனால் அடிப் பாதமே இல்லாத ஒரு மனிதன் மகிழ்ச்சியோடு இருக்கின்றானே! என அவனுக்கு புரிந்து விட்டது.

இந்த கதையைக் கேட்ட சிறுமியும் 'நான் அதிர்ஷ்டசாலி' என்று மிகவும் பலமாக நம்பினாள். தாயை இழந்த சோகமோ தனக்கு வேண்டியது கிடைக்காத சூழ்நிலையோ அந்த சிறுமியை சிறிதும் பாதிக்கவில்லை. இப்படியே வளர்ந்த சிறுமி படித்து முடித்து வேலை தேடி நேர்காணலுக்குச் சென்ற போதும் வேலை கிடைக்கவில்லை. "அப்போதும் உனக்கு வேலை கிடைக்கவில்லையே!" என்று வருத்தமா என கேட்பவர்களுக்கு, இல்லை இல்லை.. "நான் வேலை கிடைக்காத அதிர்ஷ்டசாலி" என்றே கூறி வந்தாள்.

'இன்னும் 5 நிமிஷம் தூங்கலாம்' - இந்த ஒரு எண்ணம் உங்கள் வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது?

"எப்படி நீ அதிர்ஷ்டசாலியாவாய்?" என்று கேட்பவர்களுக்கு, "நான் இன்னும் உயர்ந்த ஒரு வேலைக்கு செல்வேன். எனக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நான் தான் தேட வேண்டும்" என மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் நினைத்தது போலவே அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்த போதும், 'நாம் அதிர்ஷ்டசாலிகள்' என்று எண்ணியபடியே மகிழ்ச்சியோடு தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள்.

ஒவ்வொருவரும் அவரது வாழ்வில் 'நாம் அதிர்ஷ்டசாலிகள்' என்று நினைத்து வாழும் போது உண்மையிலேயே நாம் மற்றவர்களை விட பல வகையில் அதிர்ஷ்டசாலிகள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும். நம் கண் முன்னே வாழ்ந்து சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள் நமக்கு சொல்லும் செய்தியாகவும் இது இருக்கிறது.

மேலும் 'எண்ணம் போல் வாழ்க்கை' என்பதற்கிணங்க 'நாம் அதிர்ஷ்டசாலிகள்' என்று கூறி வரும் போது உண்மையிலேயே நாம் அதிர்ஷ்டசாலிகளாகவே மாறி விடுகிறோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online