Dailyhunt
பல நூற்றாண்டுகள் பழைமையான பொக்கிஷங்கள் நிறைந்த தஞ்சை அரண்மனை!

பல நூற்றாண்டுகள் பழைமையான பொக்கிஷங்கள் நிறைந்த தஞ்சை அரண்மனை!

Kalki Online 1 year ago

தொன்மையின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது தஞ்சாவூர் அரண்மனை. தஞ்சையில் உள்ள பழைமையான எண்ணற்ற இடங்களில் மராட்டிய அரண்மனை முக்கியமான ஒன்றாகும்.

இந்த அரண்மனைக்குள் சென்றால் 400 ஆண்டுகளுக்கு முன்பு சென்றதைப் போன்ற உணர்வு ஏற்படும். அந்த அளவுக்கு இந்த அரண்மனைக்குள் எண்ணற்ற பொக்கிஷங்கள் உள்ளன. அதில் ஒரு பகுதியாக அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய உடைகளிலிருந்து ஆயுதங்கள் வரை பல பொக்கிஷங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தஞ்சை அரண்மனை நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1674ல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது. இந்த அரண்மனை வளாகத்தில்தான் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.

இந்த அருங்காட்சியகமானது அரண்மனையின் முதல் மாடியில் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் மராட்டிய மன்னர்கள், பிரிட்டிஷ் காலத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் சரபோஜி மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ராஜாக்களின் உடைகள், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் ராஜாக்கள் பயன்படுத்திய நாற்காலிகள், வீணைகள் மற்றும் அக்காலத்து துப்பாக்கிகள், வாள்கள், பழங்கால பீங்கான் பொருட்கள் ஆகியவை உள்ளன.

மேலும், அக்கால மக்கள் சமைப்பதற்குப் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் 20 நாடுகளின் நாணயங்கள், இந்தியாவில் ஆரம்ப காலம் முதல் இக்காலம் வரை இருக்கும் அனைத்து நாணயங்களும், உதாரணமாக டச்சு நாணயம், சூரத் நாணயம் இதுபோன்று இருபதுக்கும் மேற்பட்ட நாணயங்கள் இங்கு உள்ளன‌.

சபரிமலை ஐயப்பன் கோயில் படி பூஜையின் சிறப்புகள்!

தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனைக்கு வந்து செல்லாமல் போக மாட்டார்கள். அதுவும் அருங்காட்சியகத்திற்கு வரும்போது இவ்வளவு பழைமையான பொருட்களைப் பார்த்து வியந்து போவார்கள். அந்த அளவுக்கு இந்த அரண்மனையில் பல பொக்கிஷங்கள் இருக்கின்றன. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் குகை ஒன்று மிக நீண்ட தூரம் இருக்கின்றது‌. ஆனால், பாதுகாப்பின்மை காரணமாக அந்தக் குகையானது அடைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை தஞ்சை பெரிய கோயிலில் இருந்து வடக்கு திசையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online