Dailyhunt

பலாக்காயில் இருக்கும் ஆஹா பலன்கள்!

Kalki Online 2 years ago

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் சுவை அனைவரையும் கவரும். பொதுவாகவே, பழங்கள் என்றாலே சத்து மிக்கவையாகக் கருதப்படும்.

பலாப்பழமும் அப்படித்தான். பலாப்பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. இதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள் நோய்க்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. முக்கியமாக, இதில் உள்ள வைட்டமின் சி மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செயலாற்றி உடல் நலனைக் காக்கிறது. பலாப்பழம் பழுக்காமல் காயாக இருக்கும்போதும் அதில் நிறைந்த சத்துக்கள் உள்ளன என்பதை நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள்.

அதேபோல், பலாப்பழத்தின் உள்ளிருக்கும் பலாக்கொட்டையின் ருசியும் சமையலுக்கு உதவுகிறது. ஆம், பலாக்கொட்டையில் உள்ள மாவுச்சத்து பலாக்கொட்டைக்கு மிகுந்த சுவையை தருவதோடு, அதை கூட்டு, பொரியல் என செய்து உணவாகவும் உபயோகிக்க உதவுகிறது. பலாக்கொட்டையை சிறிது உப்பு போட்டு வேகவைத்து தோலுரித்து அப்படியே சுவைத்தாலும் ருசியாக இருக்கும்.

இனி, பலாக்காயின் நன்மைகளைப் பார்ப்போம். லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சும் ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கேன்சர் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம், உயர்தரமான மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், சபோனின், ஐசோபிளாவின் மற்றும் லீக்கினேஸ் போன்ற தாவர ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஐக்கலின் நமது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

பலாக்காய் உண்ணும் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும், உடல் உஷ்ணத்தை தணித்து பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி போன்றவற்றை குணமாக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது. மேலும், இதை தொடர்ந்து உண்டால் ஆண்களின் தாது விருத்திக்கும் உதவுகிறது. பலாக்காய் உடலுக்கு ஊட்டச்சத்து தருவதாக அமைகிறது.

பலாக்காயில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டு அதன் காய்களையும் உணவில் சேர்த்து மலச்சிக்கலை தவிர்க்கலாம். ஆனால், பலருக்கும் பலாக்காய் செரிமானம் ஆகாமல் இருக்கும் பிரச்னை உண்டு. எளிதில் செரிமானம் ஆக அதனுடன் இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.

பலாக்காயின் தித்திப்பான சுவை சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்ற தவறான தகவல் உள்ளது. ஆனால், இதில் உள்ள அதிகப்படியான மாவு சத்து மற்றும் நார்ச்சத்தினால் நம் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது என்பதுதான் உண்மை. மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பலாக்காய் உணவுகளை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் நமது உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறைகிறது என மருத்துவ ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

பூச்சிக் கடியா? இந்த 10 கைவசம் இருக்கா? உடனடியாக இதை மட்டும் செய்யுங்க!

மேலும், இதில் உள்ள காப்பர் சத்து தைராய்டு ஹார்மோன் பிரச்னைகளை தடுப்பதிலும் வைட்டமின் b6 இரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டின் அளவை குறைத்து இதய பாதிப்புகளை குணப்படுத்துகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துக்கள் புது இரத்த செல்களை உருவாக்குவதோடு, இரத்த சோகை பிரச்னைகளையும் சரிசெய்கிறது என்கின்றனர்.

இந்த பலாக்காய் அரிசிக்கு நிகரான மாவுச்சத்தை கொண்டுள்ளதால் இலங்கையில் இந்தப் பலாக்காய் உணவுகளை ஊட்டச்சத்து வேண்டி அதிகமாக பயன்படுத்துகின்றனர். கேரளத்தில் இதில் உள்ள சத்துகளை அறிந்து இந்த பலாக்காய் உணவுகளை கிட்டத்தட்ட பல ஆயிரம் வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல், பலாக்காயை அதிக அளவில் உண்பதால் செரிமான பிரச்னை, வயிற்று வலி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அதனால் ஒவ்வாமையும் ஏற்படும் என்பதால் அவரவர் உடல் நலனை கருத்தில் கொண்டு இதை எடுத்துக் கொள்வது நல்லது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online