
சிவபெருமானுக்கு உரிய விரதங்களுள், நல்ல பலன்களை அளிக்கும் கேதாரகௌரி விரதமும் ஒன்றாகும். கன்னியர்கள் நல்ல கணவனை வேண்டியும், சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதத்தினை செய்வதுண்டு.
கேதார கௌரி -- பெயர் காரணம்:
கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக்- குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். கஇப்பகுதியில், சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரி மற்றும் அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். மேலும், வயலில் இருக்கும் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும், ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் என்றும் கூறப்படுகிறது.
அம்பிகையின் கோபம்:
முன்னொரு காலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருக்கும் நேரம், பிருங்கி முனிவர் நடனமாடினார். இதைக் கண்டுகளித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து, சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆசிரமமும் சூழலும் புதுப்பொலிவுடன் விளங்கியது. ஹோமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடு திரும்பிய மாபெரும் தவஸியான கௌதம முனிவர் தமது ஆசிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் "இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்" என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி "தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்". முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும்படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து அருள் புரிகின்றாள்.
இந்நாளில் அம்பிகை சிவனை நோக்கி "எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் செய்தாலும், விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். சிவனும் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று "அங்கனமே ஆகுக" என்று அருள் புரிந்தார்.
கங்கையில் குளிக்கும் அனைவருக்குமே மோட்சம் கிடைத்துவிடுமா?பூலோகத்திற்கு விரதம் வந்த கதை:
சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரதத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தார்கள். மிகவும் வறுமையினால் வாடிய இவர்கள், இவ்விரதத்தை கடைப்பிடிக்க, சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.

