Dailyhunt
பேபி கேர்ள் (2026) - சினிமா விமர்சனம் : குழந்தை கடத்தலும், அதிரடி திருப்பங்களும்!

பேபி கேர்ள் (2026) - சினிமா விமர்சனம் : குழந்தை கடத்தலும், அதிரடி திருப்பங்களும்!

Kalki Online 2 months ago

23/01/2026 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த 'லோ பட்ஜெட்' திரைப்படம் 'பேபி கேர்ள்'.

முதல் 15 நாட்களில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது 13/02/2026 முதல் ஓடிடியில் (OTT) தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.

தொடர்ந்து நான்கு தோல்விப் படங்களைத் தந்த நிவின் பாலிக்கு, இது ஒரு எதிர்பாராத வெற்றிப் படம். 'வர்ஷம் மாயா' ஹிட்டைத் தொடர்ந்து இதுவும் ஒரு ஹிட் படமே. சுரேஷ் கோபி + பிஜூ மேனன் நடித்த 'கருடன்' (2023) என்ற வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படத்தைக் கொடுத்த இயக்குநர் அருண் வர்மாவின் அடுத்த படம் இது. (குறிப்பு: தமிழில் சூரி + எம். சசிகுமார் நடிப்பில் வந்த 'கருடன்' (2024) திரைப்படத்திற்கும், மலையாள 'கருடன்' (2023) படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை).

ஸ்பாய்லர் அலெர்ட் :

நாயகன், கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராகப் பணிபுரிகிறார். ஒருநாள் அவருடன் பணிபுரியும் ஊழியர், அடுத்த நாள் பணிக்குத் தாமதமாக வரப்போவதாகச் சொல்கிறார். அந்த நாளில் நாயகனும் தாமதமாகவே பணிக்கு வருகிறான். அன்று பிறந்து 3 நாட்களே ஆன ஒரு குழந்தை காணாமல் போகிறது. நாயகன் தாமதமாக டியூட்டிக்கு வந்ததால், போலீஸ் அவரைச் சந்தேகிக்கிறது; விசாரிக்கிறது. இதனால் நாயகன் தானாக முன்வந்து காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்கும் படலம்தான் மொத்தத் திரைக்கதை.

நாயகனாக நிவின் பாலி அடக்கி வாசித்துள்ளார். 'ஹீரோ பில்டப்' இல்லாத அவரது 'அண்டர் பிளே' ஆக்டிங் சிறப்பு. நாயகியாக வரும் லிஜோ மோல் ஜோஸ் நாயகனுக்கு ஜோடி இல்லை; ஆனாலும், அவரது நடிப்புக்கு இணையாகப் படத்தில் வேறு யாரும் இல்லை. குழந்தை பாசத்தில் தவிப்பது, புகுந்த வீட்டில் சிரமங்களை எதிர்கொள்வது, கணவனைத் துணிச்சலாக எதிர்ப்பது என விருதுக்குத் தகுதியான நடிப்பு.

சங்கீத் பிரதாப்பிற்கு அருமையான ரோல்; படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். நாயகனை விட அதிகக் காட்சிகளில் வருகிறார்; நடிப்பும் கச்சிதம். போலீஸ் ஆபீசராக வரும் அபிமன்யுவின் நடிப்பு அருமை. ஜாபர் இடுக்கி ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார். சாம் சி.எஸ். இசையில் ஒரே ஒரு பாட்டு 'ஓகே' ரகம்; பின்னணி இசை சிறப்பு. பைஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு அருமை. சையித் குமரனின் எடிட்டிங்கில் படம் 124 நிமிடங்கள் ஓடுகிறது.

சபாஷ் டைரக்டர் :

1 பாபி - சஞ்சய் இருவரின் திரைக்கதை அருமை. ஒரு சாதாரண கதைக்கருவை 'சீட் எட்ஜ்' த்ரில்லராக மாற்றும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. (2013-ல் வெளியான 'மும்பை போலீஸ்' என்ற மெகா ஹிட் க்ரைம் த்ரில்லர் படத்தின் திரைக்கதை இவர்களுடையது தான்).

2."காணாமல் போனது ஒரு குழந்தைதானே? அதைக் கண்டுபிடிக்க நாம் ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்?" என ஒரு போலீஸ் கேட்கும்போது, அதற்கு உயர் அதிகாரி சொல்லும் பதில் 'டச்சிங்'. (நாளை அதே குழந்தை சிக்னலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வரலாம், அதைத் தடுக்கும் பொறுப்பு நமக்கு உண்டு).

3 நாயகி ஆக வரும் லியோ மோல் ஜோசின் பிரமாதமான நடிப்பு பெண்களை மிகவும் கவரும்.

4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது.

லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்

1.குழந்தையைக் கட்டைப்பையில் வைத்துக் கடத்தும் காட்சி, ஏற்கனவே அதிஷாவின் திரைக்கதையில் வெளிவந்த 'டிஎன்ஏ' (2025) என்ற தமிழ்ப்படத்தில் வந்திருக்கிறது.

2. பின் பாதி திரைக்கதை கொஞ்சம் இழுவை தான். படமே முடிந்த பின் மீண்டும் 30 நிமிடம் கதையை இழுக்கிறார்கள்.

3.படத்தின் 'டைட்டில் டிராக்' இசை, 'ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி' படத்தின் டைட்டில் டிராக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

4.கதை ஒரே நேர்க்கோட்டில் செல்லாமல் அக்கா-தம்பி, ஒரு தம்பதி, நாயகன் என 3 ட்ராக்குகளில் திரைக்கதை அமைவதால், நாம் யாருடன் பயணிப்பது என்ற குழப்பம் வருகிறது.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்-13+ (குடும்பத்துடன் பார்க்கலாம்)

ஃபைனல் கமெண்ட் - குழந்தை கடத்தல், அம்மா செண்டிமெண்ட் இருப்பதால் பெண்களைக் கவரும் படம் இது.

ரேட்டிங் 3/5

'மை லார்ட்' திரை விமர்சனம்: மனிதம் மரித்து விடவில்லை என்று சொல்லும் படம்..!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online