Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரதமர் மோடி தங்கம், வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க சொல்வது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

பிரதமர் மோடி தங்கம், வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க சொல்வது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Kalki Online 1 week ago

ந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கவும், உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுதேசி மற்றும் சுயசார்பு (Atmanirbhar Bharat) கொள்கையை ஊக்குவிக்கவும் பிரதமர் மோடி, தேவையின்றி தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதையும் மற்றும் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. தேவையற்ற தங்கம் வாங்குவதும் வெளிநாடு செல்வதும் நாட்டின் மதிப்புமிக்க வெளிநாட்டு நாணயங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிடும்.

எனவே வெளிநாடுகளில் விடுமுறைக்குச் செல்வதையோ அல்லது வெளிநாடுகளில் திருமணங்கள் நடத்துவதையோ தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக இந்தியாவில் சுற்றுலா செல்வது மற்றும் திருமணங்களை நடத்தும் 'Wed in India' மந்திரத்தைக் கடைப்பிடித்தால் உள்நாட்டு வணிகம் பெருகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் போர்ச் சூழல்களுக்கு மத்தியில், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க சுதேசிப் பொருட்களும் சுயசார்பும் மிக அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

ஏனெனில் இறக்குமதிச் செலவைக் குறைத்து, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (CAD) கட்டுப்படுத்துவதுதான் ஒரு நாட்டின் ஜிடிபி (GDP) வளர்ச்சியை நிலையானதாக மாற்றும்.

பிரதமர் மோடி கூறும் 'தற்சார்பு இந்தியா' என்பது வெறும் அரசியல் கோஷம் அல்ல; அது நாட்டின் அந்நியச் செலவாணியைப் பாதுகாக்கும் மிகப்பெரிய மந்திரச் சொல்லாகும். நாம் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் நமது ரூபாயின் மதிப்பைக் குறைத்து, டாலரின் கரங்களை வலுப்படுத்துகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே 'தேவையின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்' எனப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இதற்கிடையே இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி கண்ட போதும், ​​வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாடுகளில் திருமணங்கள் மற்றும் தேவையற்ற தங்கக் கொள்முதல் ஆகியவற்றைக் தவிர்க்குமாறு பிரதமர் மோடி ஏன் கூறுகிறார்? மேலும், பங்குச் சந்தை ஏன் தேக்க நிலையிலோ அல்லது சரிவிலோ உள்ளது? பொருளாதார நிபுணர்கள் யாராவது விளக்க முடியுமா? என்று ஒரு பயனர் 'X' தளத்தில் எழுப்பிய கேள்விக்கு 'ஜோஹோ' (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கமளித்துள்ளார்.

அந்நியச் செலாவணியைச் சேமிக்க முயற்சிக்கும் அதே வேளையில் விரைவான வளர்ச்சியைக் கண்ட கிழக்கு ஆசியப் பொருளாதாரங்களின் அனுபவத்தில் இதற்கான விடை உள்ளது என்று வேம்பு கூறினார்.

 பிரதமர் மோடி

அதாவது, கிழக்கு ஆசிய நாடுகள் (ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் பின்னர் சீனா) தங்களது வளர்ச்சிப் காலத்தில் (GDP வளர்ச்சி ) பின்பற்றிய இதே பொருளாதார உத்தியைத்தான் இந்திய அரசும் தற்போது பின்பற்ற முயல்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நமது பொருளாதாரம் நல்ல வேகத்தில் வளர்ந்து வருகிறது. இருப்பினும், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் நாம் இன்னும் இறக்குமதியைச் சார்ந்தே இருக்கிறோம். சொல்லப்போனால், பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அந்தளவுக்கு ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளுக்கான தேவையும் அதிகரிக்கிறது என்று ஜோஹோ நிறுவனர் குறிப்பிட்டார்.

அந்த இறக்குமதிச் சார்பைச் சமன் செய்ய, நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது; தற்போது நமது ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.

"இந்தக் கட்டுப்பாடு மிக அவசியம்" - ஏ.ஐ. விதிகளுக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வரவேற்பு!

இருப்பினும், நமது ஏற்றுமதிப் பொருட்களுக்கும் கூட, துல்லியமான இயந்திரங்கள், மூலப்பொருட்கள், CPU-க்கள், GPU-க்கள் மற்றும் மேம்பட்ட மென்பொருள் போன்ற நவீன தொழில்நுட்ப உள்ளீடுகள் தேவைப்படுகின்றன; இவற்றை நாம் இன்றும் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

இத்துறைகள் அனைத்திலும் மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்ச்சியை எட்ட நீண்ட காலம் அல்லது சில தசாப்தங்கள் தேவைப்படும். நாம் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம், ஆனால் நமக்குக் கூடுதல் காலம் தேவை என்று அவர் விளக்கினார்.

மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சியை எட்ட கிழக்கு ஆசிய நாடுகள் அந்நியச் செலாவணியைச் சேமிக்கக் கடுமையாக முயன்ற அதே வேளையில், அவற்றின் பொருளாதாரங்களும் வேகமாக வளர்ந்து வந்தன என்று கூறிய வேம்பு, அதைத்தான் நமது அரசாங்கமும் செய்ய முயற்சிக்கிறது என்றார்.

வேகமாக விரிவடைந்து வரும் அதே வேளையில், அந்த விரிவாக்கத்திற்குத் தேவையான நிதியைத் திரட்ட மூலதனத்தைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய ஒரு நிறுவனத்தின் நிலையைப் போன்றதே இந்தியாவின் தற்போதைய நிலையும் என்றார்.

தங்கம் வாங்க வேண்டாம்.. வெளிநாட்டு திருமணங்களை தவிர்க்கவும்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்கும் வரை இந்த அந்நியச் செலாவணி பாதுகாப்பு முறை அவசியமானது என்றும், தன் பிறகு நாம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online