Dailyhunt
பூமியைச் சுற்றி இத்தனை ஆயிரம் ஆபத்துகளா... நாசா வெளியிட்ட பகீர் தகவல்!

பூமியைச் சுற்றி இத்தனை ஆயிரம் ஆபத்துகளா... நாசா வெளியிட்ட பகீர் தகவல்!

Kalki Online 2 months ago

நாம் தினமும் அண்ணாந்து பார்க்கும் வானத்தில் ஆயிரக்கணக்கான ஆபத்துகள் மறைந்து கிடக்கின்றன. விண்வெளி, அழகிய நட்சத்திரங்களின் இருப்பிடம் மட்டுமல்ல, அது பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் பிரம்மாண்டமான பாறைகளின் பாதையும் கூட.

ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டுவதுபோல ஒரு விண்கல் பூமியைத் தாக்குவது கற்பனை என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், அது எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய நிஜம் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, நம் கண்களுக்கும், நவீன கருவிகளுக்கும் சிக்காத ஆயிரக்கணக்கான விண்கற்கள் விண்வெளியில் சுற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது. இவை பூமியைத் தாக்கினால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

விண்கற்கள்!

பொதுவாகப் பூமியை அழிக்கக்கூடிய அளவுக்குப் பெரிய மலை போன்ற விண்கற்களை விஞ்ஞானிகள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். அதேபோல, மிகச்சிறிய கற்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போதே தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், இவை இரண்டுக்கும் இடைப்பட்ட 'நடுத்தர ரக' விண்கற்கள் தான் இப்போது பெரிய தலைவலியாக மாறியுள்ளன.

பீனிக்ஸ் நகரில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் பேசிய நாசாவின் கோள் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் டாக்டர் கெல்லி ஃபாஸ்ட், சுமார் 140 மீட்டர் அகலம் கொண்ட 15,000 விண்கற்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே விண்வெளியில் சுற்றித் திரிவதாகத் தெரிவித்துள்ளார்.

நகரங்களை அழிக்கும்!

இந்த நடுத்தர அளவு விண்கற்களைச் சாதாரண தொலைநோக்கிகளால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இருட்டில் இருக்கும் ஒரு கறுப்புப் பூனையைத் தேடுவது போல இது சவாலானது. ஆனால் இவற்றின் தாக்கம் பயங்கரமானது. ஒருவேளை இவற்றில் ஒன்று மக்கள் வசிக்கும் ஒரு நகரத்தின் மீது விழுந்தால், அந்த நகரமே வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும். ஒரு பெரிய நகரத்தையே அழிக்கும் சக்தி இவற்றுக்கு உண்டு. இதுவரை 140 மீட்டருக்கு மேல் உள்ள விண்கற்களில் வெறும் 40 சதவீதம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாக உள்ளது.

இதற்குச் சிறந்த உதாரணமாக 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். அன்று கால்பந்து மைதானம் அளவுக்குப் பெரிய 'YR4' என்ற விண்கல் பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றது. அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அது நம்மைக் கடந்து சென்ற பிறகுதான் விஞ்ஞானிகளுக்கே அது பற்றித் தெரியவந்தது. நமது தற்போதைய தொழில்நுட்பத்தில் உள்ள இடைவெளியை இது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பாதுகாப்பு?

விண்கற்களைத் திசை திருப்பும் 'டார்ட்' (DART) தொழில்நுட்பத்தை நாசா வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்திருந்தாலும், அது மட்டுமே போதுமானதாக இல்லை. திடீரென நாளை ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தால், அதைத் தடுப்பதற்கான எந்த ஒரு விண்கலமும் இப்போது தயார் நிலையில் இல்லை. அதற்கான நிதியுதவியும் போதிய அளவில் ஒதுக்கப்படவில்லை. ஆபத்து வரும் முன் காப்பதே சிறந்தது.

இந்தக் குறைபாட்டைச் சரிசெய்ய நாசா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பூமியைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத விண்கற்களைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக, 'Near-Earth Object Surveyor' என்ற அதிநவீன விண்வெளித் தொலைநோக்கியை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது விண்ணில் மறைந்திருக்கும் ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து நமக்கு எச்சரிக்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online