Dailyhunt
எரிவாயு பயன்பாட்டைக் குறைப்போமா? - எரிசக்தி தட்டுப்பாட்டிற்கான மாற்று வழிகள்!

எரிவாயு பயன்பாட்டைக் குறைப்போமா? - எரிசக்தி தட்டுப்பாட்டிற்கான மாற்று வழிகள்!

Kalki Online 3 weeks ago

மெரிக்கா ஈரான் போர் தொடங்கியதில் இருந்து மற்ற நாடுகளை விட இந்தியா கடுமையாக ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

அது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்று நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும். உலகிலேயே எல்பிஜி-யை அதிகம் பயன்படுத்தும் மூன்றாவது நாடு இந்தியா. அதனால்தான், எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறையால் இந்தியாவில் முதலில் உணவகங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. அடுத்ததாக பொதுமக்களும் வீட்டிற்கு சிலிண்டர் கிடைக்காமல் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்தியா எல்பிஜி எரிவாயுவிற்கு அரபு நாடுகளை சார்ந்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்கா- ஈரான் போர் நடைபெற்று வரும் வேளையில், இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

இதை தொடர்ந்து கத்தாரிலிருந்து 46,200 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றி வந்த 'ஷிவாலிக்' என்ற இந்தியக் கப்பலும், 46,500 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றி வந்த நந்தாதேவி கப்பலும் குஜராத் துறைமுகங்களுக்கு வந்தடைந்தன.

92,700 மெட்ரிக் டன் எல்பிஜியிலிருந்து எத்தனை சிலிண்டர்கள் நிரப்பப்படும்?

கப்பல்களிலுள்ள 92,700 மெட்ரிக் டன் எல்பிஜியை அளவீட்டிற்காக கிலோகிராம் அளவாக நாம் மாற்றிக்கொள்வோம்.

1 மெட்ரிக் டன் = 1,000 கிலோகிராம்

92700 மெட்ரிக் டன் = 92,700,000 கிலோகிராம்

1 வீட்டு உபயோக சிலிண்டரில் அடைக்கப்பட வேண்டிய எல்பிஜியின் அளவு 14.2 கிலோகிராம் என்ற சராசரி அளவைக் கொண்டது.

இரு கப்பல்களிலுள்ள 92,700,000 கிகி எரிவாயுவை 14.2 கிகி அளவில் வீட்டு சிலிண்டர்களில் நிரப்ப ஆரம்பித்தால், அது மொத்தமாக 65,28,169 சிலிண்டர்களில் நிரப்ப முடியும். இந்தியாவில் மொத்தம் 33 கோடி எல்பிஜி நுகர்வோர் உள்ளனர். தற்போது பெற்ற எரிவாயுவின் வரவின்படி 65,28,169 குடும்பங்கள் மட்டுமே பலனடையும். இதன் மூலம் முதற்கட்டமாக எல்பிஜி கிடைக்காமல் திண்டாடுபவர்களை சமாளிக்க முடியும். மேலும் அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை.

தற்போது தட்டுப்பாடு உள்ளவர்களுக்கு கப்பலில் வந்த எரிவாயு நெருக்கடியை குறைக்க உதவும். மேலும், மத்திய அரசு வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை அளிப்பதில் முன்னுரிமை அளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களிடம் வற்புறுத்தியுள்ளது. அடுத்ததாக மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் தொடர்ச்சியாக எல்பிஜி நுகர்வோர் அதிகரித்துள்ளனர். ஆனால், உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40% அளவிலே உள்ளது. மீதமுள்ள 60% தேவைக்கு கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதுவே தற்போதைய நெருக்கடிக்கு காரணம். கடந்த சில ஆண்டுகளாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், நல்ல வேளையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இந்தியா அரபு நாடுகளையே கச்சா எண்ணெய்க்கும் நம்பி இருந்தால், இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். அதனால், இந்தியா அரபு நாடுகள் அல்லாத, வேறு சில நாடுகளிலிருந்தும் எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும்.

இது போர் காலத்தில் எரிவாயு சிக்கல்களிலிருந்து தப்பிக்க உதவும். மக்களும் உணவு தேவைக்கு எல்பிஜியை அதிகம் பயன்படுத்துவதை குறைக்கவேண்டும். எலக்ட்ரிக் அடுப்புகள், இன்டக்சன் அடுப்புகள், எலக்ட்ரிக் குக்கர்கள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கி, எரிவாயுவின் தேவையை குறைத்துக் கொள்ளவேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online