Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இல்லத்தரசிகள் ஷாக்..! ஆரோக்யா பால், தயிர் விலை நாளை முதல் உயர்வு!

இல்லத்தரசிகள் ஷாக்..! ஆரோக்யா பால், தயிர் விலை நாளை முதல் உயர்வு!

Kalki Online 2 weeks ago

மிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியிலும் கடந்த ஓராண்டாகவே பால் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது.வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நிலவி வரும் தட்டுப்பாட்டுக்கு இடையே தங்களது பால் வணிகத்தை தக்கவைத்து கொள்ள தனியார் பால் நிறுவனங்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளன. இதனால், பால் உற்பத்தியாளர்களை கவர்வதற்காக போட்டி போட்டுக் கொண்டு கொள்முதல் விலையை அவை அதிரடியாக உயர்த்தி வழங்கி வருகின்றன.

இவ்வாறு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் இழப்பைச் சரிகட்ட, நுகர்வோருக்கான பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் தற்போது முடிவு செய்துள்ளன. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியிருந்தன.இந்நிலையில்,இத்தகைய கூடுதல் செலவினங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க, நடப்பு ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தும் இறுதி முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன.

 ஆரோக்யா

அதன்படி, ஆரோக்யா பால் நிறுவனம் நாளை (9-ந் தேதி) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால்,

  • 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.29-ல் இருந்து ரூ.31 ஆகவும்,

  • நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும்,

  • கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.39-ல் இருந்து ரூ.41 ஆகவும் விலை உயர்கிறது.

இதேபோல்,

  • 1000மில்லி (1 லிட்டர்) சமன்படுத்தப்பட்ட பால் ரூ.54-ல் இருந்து ரூ.57 ஆகவும்,

  • நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66-ல் இருந்து ரூ.69 ஆகவும்,

  • கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.73-ல் இருந்து ரூ.76 ஆகவும்,

  • 500 கிராம் ஹட்சன் தயிர் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும்,

  • ஆரோக்யா தயிர் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது.

ஆரோக்கியா தொடர்ந்து, அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அடுத்தடுத்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவில் இருக்கின்றன. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடப்பாண்டு தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய கோடைகால பருவமழை பொய்த்துப் போனதாலும், கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு முழுவதும் பாலுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாலும் முன்னணி மற்றும் சிறு, குறு, நடுத்தர தனியார் பால் நிறுவனங்களுக்கிடையே பால் கொள்முதல் செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள், தங்களின் பால் வணிகத்தை தக்க வைத்துக்கொள்ள, போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்கி வருவதோடு, பால் கொள்முதலுக்கேற்ப விவசாய பெருமக்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கி வருவதால் தமிழ்நாடு அரசின் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட ஆவினுக்கு வழங்குவதை குறைத்துக் கொண்டு தனியாருக்கு பால் வழங்கத் தொடங்கியுள்ளதால் கடந்தாண்டு திமுக ஆட்சியில் இருந்தே ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் சுமார் 25 லட்சம் லிட்டராக சரிந்தது தற்போது வரை அது உயரவே இல்லை.

தனியார் பால் நிறுவனங்களின் தவிர்க்க முடியாத இந்த விற்பனை விலை உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் ஆரோக்யா நிறுவனம் விற்பனை விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அநநிறுவனத்தை கேட்டுக் கொள்கிறது.

மேலும், கோடைகால பருவமழை பொய்த்துப் போனதால் வரும் மழைக்காலத்தில் கூட மழைப் பொழிவு குறைவாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வரலாறு காணாத வகையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

கடந்த 2011-2016-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட "விலையில்லா கறவை மாடுகள் திட்டம்" தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ததோடு, 2020-2021-ம் நிதியாண்டில் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் சுமார் 43 லட்சம் லிட்டர் வரை உயர காரணமாக இருந்தது. ஆனால் 2021-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அந்த திட்டத்தை கைவிட்ட காரணத்தால் ஆவினுக்கான பால் கொள்முதல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணமாக இருந்தது.

எனவே தமிழ்நாட்டில் வரும் மாதங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உடனடியாக விவசாய பெருமக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி, கால்நடைகளுக்கான தீவனம், மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களை கவனத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, அதற்கேற்ற வகையில் ஆவின் பால் விற்பனை விலை, விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெள்ளைத் துணிகள் மஞ்சள் நிறமாக மாறுகிறதா? 5 நிமிடம் போதும், பளிச்சென்று மாற்றிவிடலாம்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online