Dailyhunt
இனி IT ஆபீஸிற்கு அலைய தேவையில்லை..! வருமான வரித்துறையின் 'AI.. Kar Saathi' அறிமுகம்!

இனி IT ஆபீஸிற்கு அலைய தேவையில்லை..! வருமான வரித்துறையின் 'AI.. Kar Saathi' அறிமுகம்!

Kalki Online 1 week ago

முன்பெல்லாம் வருமான வரி செலுத்தும் நடைமுறை பலருக்கு தலைவலி பிடித்த காரியமாக இருந்தது. ஆனால் தற்போது மிகவும் எளிமையான, ஆன்லைன் செயல்முறையாக மாறியுள்ளது.

சரியான திட்டமிடல் மற்றும் வருமான வரி போர்டல் மூலம் டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தினால், வரி செலுத்துவது கடினமல்ல.

இந்நிலையில் இந்திய வருமான வரித்துறை, வரி செலுத்தும் முறையை இன்னும் எளிமையாக்கவும், வரி செலுத்துவோரின் சந்தேகங்களைத் தீர்க்கவும் 'கர் சாதி' (Kar Saathi) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியாளர் மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதாவது கர் சாதி (Kar Saathi) என்பது இந்திய வருமான வரித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அதிநவீன AI-இயங்கும் (செயற்கை நுண்ணறிவு) சாட்போட் மற்றும் இணையதளமாகும்.

இது வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் வரி செலுத்துவோரின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: சம்பளதாரர்கள், பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்..!

அதாவது பயனர்கள் நேரடியாக வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, படிப்படியான வழிகாட்டுதலை வழங்குவது, வருமான வரி படிவங்களைப் பதிவிறக்கம் செய்வது, தாக்கல் செய்யும் முறை மற்றும் புதிய வரி விதிமுறைகள் போன்ற அனைத்து சந்தேகங்களையும் இந்த ஏஐ கருவி வழிகாட்டுகிறது.

தொழில்நுட்ப ரீதியாக மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், சாதாரண மக்களும் வரி விதிமுறைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள ஒரு பாலமாக அமையும். குறிப்பாக PAN பொருத்தமின்மை மற்றும் ITR பிழைகள் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.

இது வரி செலுத்துவோருக்கான "ஒரே இடத்தில் அனைத்துத் தீர்வுகளையும் வழங்கும்" ஒரு அமைப்பாக செயல்படுகிறது. வரி விதிகளைப் புரிந்துகொள்வது முதல், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளை விளக்குவது மற்றும் நேரடி வரி இணக்கம் குறித்த கேள்விகளுக்குத் தீர்வு காண்பது வரை அனைத்தையும் இது உள்ளடக்கியுள்ளது.

இந்த முன்முயற்சி, வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறையை எளிமையாகவும், விரைவாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2025-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்த நிலையில் புதிய விதிமுறைகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள இது பெரிதளவில் பயன்படும் என்று கருதப்படுகிறது. மேலும் வரி ஏய்ப்பு இல்லாத, நேர்மையான வரி செலுத்தும் முறையை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

அதேசமயம் மக்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது, வருமான வரி தாக்கலில் உண்மையைத் தவிர, பொய்களைச் சொல்லக் கூடாது.

ஒருவேளை நீங்கள் எதாவது பொய் சொல்லி, வருமான வரி அதை கண்டுபிடித்தால், உங்களைத் தேடி வருமான வரி நோட்டீஸும், அபராதமும் ஒன்று.

'Deduction' வேண்டுமென்பதற்காக, தேவையில்லாத பொய்களைச் சொல்லி, சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

நகைக்கடன் வாங்கினால் வருமான வரி கட்ட வேண்டுமா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி..!

அதேபோல் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது மிக மிக கவனம் தேவை. ஐ.டி.ஆர் படிவத்தை மாற்றி தாக்கல் செய்வது, தவறான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கப்படலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online