ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் என்னும் கடவுச்சீட்டு கட்டாயம் தேவை. பாஸ்போர்ட் இன்றி எவரும் சொந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது.
பாஸ்போர்ட் இன்றி வேறு நாட்டில் நுழைந்துவிட்டால், அங்கு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். அரிதாக ஒரு சிலருக்கு மட்டும் மரியாதை நிமித்தம் காரணமாக பாஸ்போர்ட் இன்றி வெளிநாட்டில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய குடிமக்களைப் பொறுத்த வரையில் நேபாள் மற்றும் பூட்டானுக்கு பாஸ்போர்ட் இன்றி நுழைவது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இந்தியாவில் பாஸ்போர்ட் சம்மந்தமான வேலைகளை வெளியுறவு துறை அமைச்சகம் செய்கிறது. பாரம்பரிய பாஸ்போர்ட் நடைமுறையில் இருந்து தற்போது பயோமெட்ரிக் அம்சங்கள் சேர்க்கப்பட்ட இ-பாஸ்போர்ட்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இவை இந்திய குடிமக்களுக்கான வெளிநாட்டு பயணத்தை விரைவாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றியுள்ளது. பயணம் செய்பவரின் தகுதிக்கு ஏற்ப, சோதனைகளை எளிதாக்க 4 நிறங்களில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிறமும் ஒரு தனித்துவமான நோக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
கருநீல நிற பாஸ்போர்ட்:
இது இந்தியாவில் அனைவருக்கும் வழங்கப்படும் அதிகாரப் பூர்வமான பொதுவான பாஸ்போர்ட். இது ஒரு தனிநபர் பயன்பாட்டிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. இதை சுற்றுலா, கல்வி, மருத்துவம், வணிகம், வேலைவாய்ப்பு போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும். கோடிக் கணக்கான இந்தியர்கள் இந்த பாஸ்போர்ட்டைதான் வைத்திருக்கிறார்கள். இந்த பாஸ்போர்ட் தற்போது மேம்பட்ட பாதுகாப்பிற்காக பயோமெட்ரிக் சிப் பொருத்தப்பட்டு இ-பாஸ்போர்ட்டாகக் கிடைக்கிறது. அனைவருக்கும் பொதுவான நீலநிற பாஸ்போர்ட் எளிமையாக அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கிறது.
வெள்ளை நிற பாஸ்போர்ட்:
பொதுவாக அரசு உயர் அதிகாரிகளுக்காக வழங்கப்படும் பாஸ்போர்ட் இது. சாதாரணமாக இந்த வெள்ளை பாஸ்போர்ட்டை மாநில, மத்திய அரசு அதிகாரிகள் பெற முடியாது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு அரசு சார்பில் செல்ல தகுதியான இராணுவ உயர் அதிகாரிகள், உயர் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் குடியுரிமை அதிகாரிகளிடம் விரைவாக முன்னுரிமை பெற வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் இ பாஸ்போர்ட் அம்சத்துடன் கிடைக்கிறது. இந்த மதிப்புமிக்க பாஸ்போர்ட் பெற பிரதமர் அலுவலக ஒப்புதல் பெறவேண்டும்.
அடுத்தவரைக் குறை சொல்லும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?அரக்கு நிற பாஸ்போர்ட்:
இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் விரைவான விசா செயலாக்கம் போன்ற இராஜதந்திர சலுகைகளை அனுபவிக்கிறார்கள் மற்றும் பல நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலைப் பெறுகிறார்கள். இந்த பாஸ்போர்ட் இராஜதந்திர சிறப்பு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் , மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாட்டில் தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறையில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கிடைக்கிறது. இதுவும் இ பாஸ்போர்ட் வடிவில் கிடைக்கிறது. இந்த பாஸ்போர்ட் பெற துறை சார்ந்த அனுமதி கடிதமும் , பிரதமர் அலுவலக ஒப்புதலும் பெறப்பட வேண்டும்.
ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்:
இந்த பாஸ்போர்ட் முன்பு பொதுவாக 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்காதவர்கள் அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டில் சுரண்டலுக்கு எதிராக பாதுகாப்பை வழங்க, சோதனைகளை நடத்தி எச்சரிக்க உதவியது. பாதுகாப்பு வழங்குவதாக இருந்தாலும் இது குறைவாக படித்தவர்கள் என்ற பேதத்தினை வழங்குவதாகவும் இருந்தது.
மேலும் இந்த வகை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு குறைவான ஊதியம் பாரபட்சம் பார்க்கப்பட்டாதால் 2018 ஆம் ஆண்டு முதல் ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் நிறுத்தப்பட்டது.

