Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி ரகசியம் மற்றும் ஸ்தல வரலாறு!

கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி ரகசியம் மற்றும் ஸ்தல வரலாறு!

Kalki Online 1 month ago

ன்னியாகுமரியில் அருளும் குமரி அம்மன் ஆலயம் அன்னை பராசக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் ஒன்று.

அன்னையின் முதுகுப்பகுதி விழுந்த இடம். பரசுராமர் கட்டிய இந்த ஆலயம் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது. அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடலும் கூடும் இடத்தில் அன்னை குமரியாக நின்று அருள்வதற்குப் பின்னால் உள்ள வரலாற்றை அறிந்து கொள்ளலாமா?

பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது எனவும், அப்படி நேர்வதாக இருந்தாலும் கன்னிப் பெண்ணால் மட்டுமே மரணம் ஏற்படவேண்டும் என்று பிரம்மதேவரிடம் இருந்து வரம் பெற்றுக்கொண்டான். அவன் விரும்பிய வரம் கிடைத்ததால் ஆணவம் கொண்ட அசுரன், தலைக்கனம் கொண்டு அனைவரையும் துன்புறுத்தினான்.

தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். இதனால் தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். பாணாசுரன் பிரம்மாவிடம் பெற்ற வரம் குறித்து ஈசன் அறிந்ததால், அன்னையை பகவதி அம்மனாக, குமரியாக அத்தலத்தில் அவதரிக்க வைத்தார். தகுந்த காலம் வந்ததும், சிவபெருமான் பகவதியை மணம்புரிய விரும்பினார். திருமணத்திற்கான முகூர்த்தம் குறிக்கப்பட்டது.

சிவபெருமானுக்கும் அன்னை பகவதிக்கும் திருமணம் நடந்துவிட்டால், பாணாசுரன் வதம் நடக்காது என்பதால், நாரதர் இந்தத் திருமணத்தைத் தடுத்துநிறுத்த நினைத்தார். அதனால் முதலில் பகவதி அம்மனிடம் நயமாகப் பேசி, சிவபெருமானிடம் சில கோரிக்கைகளை வைக்கும்படி சொன்னார். அதாவது திருமணத்திற்கு சிவபெருமான் வரும்போது

கண் இல்லாத தேங்காய்

நரம்பில்லாத வெற்றிலை

அடித்தண்டு இல்லாத கரும்பு

ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என்றும், அதிகாலை சேவல் கூவும்முன்பு வந்துவிடவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கும்படி சொன்னார் நாரதர். அதன்படியே சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தார் அன்னை பகவதி.

 பகவதி அம்மன் - Kanniyakumari Temple

சிவபெருமானும் தன் வலிமையால் அனைத்தையும் ஏற்பாடு செய்தார். மண நாளன்று அதிகாலையில் சுசீந்தரத்தில் இருந்து கன்னியாகுமரி கிளம்பத் தயாரானார். அப்போது நாரதர் சேவல் வடிவம் எடுத்து, விடியும் முன்பே கூவிவிட, கால தாமதம் செய்துவிட்டதாக எண்ணி சிவபெருமான் கன்னியாகுமரி செல்லாமல் சுசீந்தரத்திலேயே தங்கிவிட்டார்.

திருமணம் செய்துகொள்ள சிவபெருமான் வராததால் பகவதி அன்னை கோபம் கொண்டார். அந்த நேரத்தில் அன்னையைக் கண்ட பாணாசுரன், பகவதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஏற்கனவே கோபத்தில் இருந்த பகவதி, நவராத்திரியின் இறுதி நாளான விஜயதசமியன்று பாணாசுரனை வதம் செய்து, கடற்கரை ஓரத்தில் குமரியாக, அன்னை பகவதியாகத் தங்கி, அனைவருக்கும் அருள்செய்யலானார்.

காசி பிந்து மாதவர் கோவில்: 5 நதிகள் சங்கமிக்கும் ரகசியமும் சிவபெருமான் ஓதும் ராம மந்திரமும்!

இங்கு அன்னை குமரிப் பெண்ணாக, வலது கரத்தில் பூமாலையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தவம் செய்கிறார். அன்னையின் சிலை பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. பிற்காலத்தில் திருவிதாங்கூர் மன்னரால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

ஒருமுறை திருவிதாங்கூர் மன்னரின் கனவில் ஒரு சிறுமி தோன்றி, தனக்கு மாணிக்க மூக்குத்தி செய்து தரும்படி கேட்டாள். தன் அரசவையில் உள்ள பெரியவர்கள் மற்றும் ஆச்சாரியர்களிடம் இதுகுறித்து மன்னர் சொல்ல, கன்னியாகுமரி பகவதி அம்மன்தான் கனவில் வந்தவர் என்பது தெரியவந்தது. அதனால் மன்னர் ஒளிமிகுந்த மாணிக்க மூக்குத்தியை அன்னைக்கு அர்ப்பணித்தார்.

அன்னையின் மூக்குத்தி மிகவும் சக்திவாய்ந்த ஒளியைத் தரக்கூடியது. முற்காலத்தில், அன்னையின் மூக்குத்தியில் இருந்து வந்த ஒளியை, கலங்கரை விளக்கின் ஒளியெனத் தவறாக நினைத்து வந்த கப்பல் பாறையில் மோதி சேதமடைந்தது. அதனால் அதன் பிறகு, கிழக்கு வாசல் கதவை அடைத்துவைக்கும் பழக்கம் வந்தது. வருடத்திற்கு ஐந்து முறை மட்டும் கிழக்கு வாசல் கதவு திறக்கப் படுகிறது. தெற்கு வாசல் கதவு பக்தர்களின் பயன் பாட்டிற்குத் திறந்து வைக்கப்படுகிறது.

ஆரவல்லி சகோதரிகளை வீழ்த்திய வனபத்ரகாளியம்மன் கோவில் ரகசியம்!

முக்கடலின் அலைகளின் ஆரப்பரிப்புக்கு நடுவே அன்னையின் அருள்மிகுந்த தரிசனம் மெய்சிலிர்க்கும் அனுபவம்.

இந்தத் தொகுப்பின் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தின் அற்புத ஆன்மீகப் பின்னணி, வைர மூக்குத்தியின் ஒளி மறைந்துள்ள ரகசியம் மற்றும் ஆலய நடைமுறைகளின் ஆன்மீகக் காரணங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, உங்கள் அடுத்த ஆன்மீகப் பயணத்தை முழுமையான பக்தியுடனும் விழிப்புணர்வுடனும் திட்டமிட முடியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online