Dailyhunt
கவலைகள் பலவிதம்... ஆனால், தீர்வு மட்டும் ஒரே விதம்...

கவலைகள் பலவிதம்... ஆனால், தீர்வு மட்டும் ஒரே விதம்...

Kalki Online 0 months ago

"வாழ்க்கையின் அமுக்கங்களுக்கும், அழுத்தங்களுக்கும் தவறான பொருத்தப்பாடுகள் ஏற்படும் பொழுது தோன்றும் உணர்ச்சி அறிகுறியே கவலை" என்று கவலையின் தோற்றம் பற்றி கூறுகிறார் மன இயல் வல்லுனரான ராஸ்.

கவலை நம் எல்லோருக்கும் உண்டு. அவரவர் குடும்பச் சூழலுக்கு தகுந்தவாறு, வேலை செய்யும் இடம், வெளிநாட்டில் வேலைக்குச் சென்றவர்களுக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறோமே என்று கவலை. ஆஸ்டலில் சென்று படிப்பவர்களுக்கு உறவினர்களோடு சேர்ந்து இருக்க முடியவில்லையே என்ற கவலை. முதலாவதாக வெற்றி பெற்றவரைப் பார்த்து மூன்றாவதாக வந்தவருக்கு நாம் முதலாவதாக வரவில்லையே என்று கவலை. நல்ல வசதி வாய்ப்போடு இருப்பவர்களைப் பார்த்து நமக்கு அது கிட்ட வில்லையே என்ற ஏக்கம் நிறைந்த கவலை. இப்படி கவலை அவரவரின் வசதிக்கேற்ப, மனநிலைக்கு ஏற்ப மாறுபாடுகளை அடைந்து வருகிறது என்பதுதான் உண்மை.

மேலே கூறிய இந்த கவலை எல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் இருப்பது இயல்புதான். ஆனால் இக்கட்டான ஒரு நேரத்தில் காசு பணம் இன்றி தவிக்கும் வேளையில், உடம்பில் நோயோடு இருக்கும் ஒருவரைப் பார்த்து கோபம் மூட்டும் வகையில் யாராவது கேள்வி கேட்டால் அந்த நேரத்தை கடப்பது மிகவும் கடினம்.

"ஏன் சம்பாதிக்கும் பொழுது சேர்த்து வைத்துக் கொள்ளவில்லையா? இப்பொழுது தவிக்கிறாய்? யார் செய்வார்?"

அந்த முறை பரிட்சையில் தோல்வி அடைந்த ஒருவரைப் பார்த்து, "சும்மா சுற்றித் திரிந்தாய். அப்போ படித்திருந்தால் இந்நேரம் பாஸாகி இருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்பொழுது அழுது என்ன பயன்?"

என்றெல்லாம் ஒருவர் கேட்டால் அதைப் பொறுத்துக் கொள்வது மிகவும் கடினம்.

தீக்குச்சித் தத்துவம் தெரியுமா மக்களே? ஒரே ஒரு வார்த்தை... அதோகதிதான்!

இதையெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எளிதாக கேட்டு விட்டு நகர்ந்து விடுவார்கள். அதிலும் சிலர் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதை கேட்பதற்காகவே அப்படியே நிற்பார்கள்.

ஞானி ஒருவர் தன் மகனிடம், "இந்த மாதிரியான தருணங்களில் கோபமூட்டும் வகையில் யார் கேள்வி கேட்டாலும் 24 மணி நேரத்துக்குப் பிறகு பதில் சொல்," என்று வாக்கு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அதைப் பின்பற்றி அவரது மகனுக்கு வந்த பிரச்னைகள் எல்லாம் அவர் மறுநாள் பதில் சொல்லும் முன்பாகவே தானாகவே விலகி ஓடின.

ஏனெனில் கவலைகள் நிலைப்பதில்லை. அது நிச்சயமாக மாற்றம் அடைந்தே தீரும். இதுதான் கவலையை மறக்கும் கலை. பிறகு கவலைகளை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு அதிலிருந்து மீண்டு வரும் வழியை கண்டுபிடித்து வாழ்வதுதான் சிறந்த முறை. இதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். கவலைகள் காணாமல் போகும். வாழ்வு வசமாகும்.

மனசும் உடம்பும் ரொம்ப சோர்வா இருக்கா.. இந்த ரகசியங்களை ட்ரை பண்ணா நீங்களும் எனர்ஜெடிக் ஆகலாம்!

அதை விடுத்து எதற்கெடுத்தாலும் தயங்குவோரும், அஞ்சுவோரும், கவலைப்படுவோரும் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியாது. எனவே மனத்தை பண்படுத்திக் கொண்டு எது நடந்தாலும் நடக்கட்டும் என மனம் கலங்காமல், எதனையும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை பெற்று விடுங்கள். கவலை திவாலாகும்.

இந்த உலகில் யாரும் நமக்கு உண்மையாக இல்லை என்று நீங்கள் கவலைப்பட்டால் ... கண்ணாடியைப் பார்த்துக் கொள்ளுங்கள்..

நமக்கு உண்மையாக இருப்பவர்கள் நாம் மட்டும்தான் !

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online