Dailyhunt
கோபத்தைக் குறைக்க வேண்டுமா? இந்த 10 வினாடி இடைவெளி உங்களுக்கு உதவும்!

கோபத்தைக் குறைக்க வேண்டுமா? இந்த 10 வினாடி இடைவெளி உங்களுக்கு உதவும்!

Kalki Online 3 weeks ago

வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் என்பது ஒரே நாளில் நிகழ்ந்து விடுவதில்லை. அவை நாம் அன்றாடம் செய்யும் மிகச்சிறிய செயல்களின் தொகுப்பாகவே அமைகின்றன.

ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நம் வாழ்வை மேம்படுத்தும் '10 வினாடி ரகசியங்கள்' சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

உணவிற்கு நன்றி கூறுதல்:

நாம் உண்ணும் உணவு வெறும் சுவைக்காக மட்டுமல்ல, அது ஆரோக்கியத்தையும் அளித்து, விரைவில் உடலின் ஒரு அங்கமாக மாறப்போகிறது. எனவே உணவை உண்பதற்கு முன் ஒரு 10 வினாடி அந்த உணவை வழங்கிய இயற்கைக்கும், அதற்காக உழைத்தவர்களுக்கும் மனதார நன்றி கூறுங்கள். இந்தச் செயல் உணவின் மீதான விழிப்புணர்வையும் மரியாதையையும் அதிகப்படுத்தும். மேலும் உண்ட பின் அதன் சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு நன்றாக செரிமானமும் ஆகும்.

ஆழ்ந்த சுவாசம்:

கோபமாக இருக்கும்போதோ அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போதோ, 10 வினாடிகளுக்கு கண்களை மூடி ஒரு ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக வெளிவிடுங்கள். இது நரம்பு மண்டலத்தை உடனடியாக அமைதிப்படுத்தும். ஒரு நிமிடம் யோசிக்காமல் பேசும் வார்த்தையைவிட, இந்த 10 வினாடி மௌனம் பல உறவுகளையும் சூழ்நிலைகளையும் காப்பாற்றும்.

கட்டுப்பாட்டு எல்லை:

பிறரால் ஏதேனும் ஒரு பிரச்னை வரும்போது, இது என் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று 10 வினாடி உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். மற்றவர்களின் செயல்கள் அல்லது கடந்த கால நிகழ்வுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நம் எண்ணங்களும் செயல்களும் மட்டுமே நம் வசம் உள்ளன. இதை உணரும் 10 வினாடி, தேவையற்ற கவலைகளில் இருந்து உங்களை விடுவித்து, தீர்வு நோக்கி நகர வைக்கும்.

குடிகாரன் பூட்டு முதல் காதல் பூட்டு வரை: பூட்டுகளின் பல முகங்கள்!

காலைப் பொழுதின் முதல் மந்திரச் சொற்கள்:

காலையில் கண் விழித்தவுடன் அலைபேசியைத் தேடாமல், ஒரு 10 வினாடி உங்கள் கைகளை உற்று நோக்கி, 'இன்று ஒரு புதிய நாள் எனக்குக் கிடைத்துள்ளது. இந்நாள் மகிழ்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்ற நன்றியுணர்வோடு சொல்லிதொடங்குங்கள். இது அந்த நாள் முழுவதற்குமான நேர்மறை ஆற்றலை விதைக்கும். விழிப்புணர்வோடும் சுறுசுறுப்போடும் இயங்க வைக்கும்.

தர்மசங்கடமான சூழலில் மௌனம்:

யாராவது உங்களை விமர்சிக்கும்போது, அல்லது தர்சங்கடமான கேள்விகள் கேட்கும்போது, கோபப்படாமல் உடனடியாகப் பதில் அளிக்காமல் 10 வினாடி இடைவெளிவிடுங்கள். இது உங்களை ஒரு நிதானமான மனிதராகக் காட்டும். இந்த இடைவெளியில் உங்கள் அறிவு, உணர்ச்சிகளைவிட மேலோங்கிச் செயல்படத் தொடங்கும். நிதானமான பதில் எப்போதும் சிறந்தது.

இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு:

தண்ணீர் அருந்தும்போதோ அல்லது காற்றைச் சுவாசிக்கும்போதோ, அவை நம் உயிர் ஆதாரங்கள் என்பதை ஒரு 10 வினாடி உணருங்கள். மண்ணும், நீரும், காற்றும் இன்றி நாம் இல்லை என்ற எண்ணம் வரும்போது, இயற்கையைப் பாதுகாக்கும் எண்ணமும், நாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்ற உண்மையும் தானாகவே விளங்கும்.

உங்கள் வீட்டு துளசி எப்போதும் பசுமையாக இருக்க வேண்டுமா?

தூங்கும் முன்:

இரவு உறங்கச் செல்லும் முன், அன்று நடந்த ஒரு நல்ல விஷயத்தை மட்டும் நினைவுகூர்ந்து 10 வினாடி புன்னகைக்கவும். இது உங்கள் ஆழ்மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைத்து, நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

பெரிய தத்துவங்களைப் பின்பற்றுவதை விட, இதுபோன்ற மிகச்சிறிய செயல்களைச் சீராகச் செய்வதே ஒரு மனிதனைச் சிறந்தவனாக மாற்றுகிறது. இந்த 10 வினாடி ரகசியங்களை பின்பற்ற அதிக நேரத்தை எடுக்கப்போவதில்லை; மாறாக, நேரத்தின் தரத்தை உயர்த்தப் போகின்றன. இன்று முதல் இந்த எளிய மாற்றங்களைத் தொடங்கிப் பாருங்கள், வாழ்க்கை புதுப்பொலிவு பெறும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online