சீதையின் அருள் பெற்ற அனுமன்!பேசாத குழந்தையைப் பேச வைத்து, கல்வி அறிவு அறவே இல்லாத குழந்தையை தனது திருவருளால் மேதாவி ஆக்கிய திருமகளின் அருள் ஆச்சரியங்கள் பலவற்றை நாம் கேட்டிருப்போம்.
கார்த்திகை மாதம் பொதுவாக திருமகளுக்கு மிக உகந்தது என்றே சொல்லுவோம். தீப லட்சுமியாக தீபத்தின் வழியே நம் இல்லங்களுக்கு திருமகள் வருவது இந்த மாதத்தில்தானே? அப்படிப்பட்ட ஒரு கார்த்திகை மாதத்தில்தான் திருமகளின் பக்தரான, சுந்தர தாத்தாசார்யாரின் மனைவிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த அந்தக் குழந்தைக்கு தாங்கள் தினமும் வணங்கும் சாரங்கபாணியின் பெயரையே சூட்டி விட வேண்டும் என பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். கும்பகோணத்தில் அவர்கள் வாழ்ந்திருந்த அந்த அக்ரஹாரத்து மக்கள் அனைவருமே அந்தக் குழந்தை பிறந்ததை எண்ணி சந்தோஷப்பட்டனர். திருமால், திருமகள் அடியவராக இருந்த தாத்தாச்சார்யாரின் வேண்டுதல் பலித்துவிட்டது என சந்தோஷ உணர்வோடு அங்கிருந்தவர்களுக்கு, சந்தேக உணர்வும் மெல்ல அந்தக் குழந்தையை பார்த்ததுமே வர ஆரம்பித்தது. சந்தோஷத்திற்கான காரணம் அக்குழந்தையின் வரவு, சந்தேகத்திற்கான காரணம் அக்குழந்தையிடமிருந்து வராமல் இருந்த அழுகை சப்தமும், அசைவும். அழகாய் பிறந்த இக்குழந்தை ஏன் அசையாமல் அப்படியே இருக்கிறது? ஏன் அழாமல் இருக்கிறது என்ற கேள்வி அவர்களிடையே எழாமல் இல்லை.
பிறந்த அந்தக் குழந்தையைப் பார்த்ததுமே கலங்கி நின்ற தாத்தாசார்யார், கோமளவல்லி தாயாரை நினைத்து, "இது என்ன சோதனை தாயே? எங்களுக்கே ஏன் இந்த வேதனை? இத்தனை வருடங்களாக நாங்கள் ஏங்கியது ஒரு குழந்தையின் வரவிற்காகதானே? அப்படி வரமாய் ஒரு குழந்தையை உனது தயவால் எங்களுக்குக் கொடுத்துவிட்டு, அது இப்படி அசையாமல் இருக்கும்படி செய்துவிட்டாயே? உனது திருவடிதான் எங்களுக்கு ஒரே கதி திருமகளே… அந்தக் குழந்தையைக் காக்க வேண்டியது இனி உனது பொறுப்பு" என்று மனதில் கெஞ்சிகொண்டிருந்தார் அந்தத் திருமகளின் பக்தர்.
கண்களை மூடி அவர் அப்படியே தியானம் செய்துகொண்டிருந்தபோது அவர் வாசம் செய்த வீட்டில் திடீரென தாமரை மலர்களின் வாசம் வீச ஆரம்பித்தது. அவருக்கோ அவரது மனைவிக்கோ ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் வீட்டு வாசலில் அழகான இளம் பெண் ஒருத்தி நீல நிறப் புடைவையை உடுத்திக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து, நுழைந்த வேகத்திலேயே அங்கிருந்த அந்தக் குழந்தையையும் தன்னோடு எடுத்துக்கொண்டு சென்று விட்டாள். என்ன நடந்தது? என்பது சற்று நேரத்துக்கு அந்தப் பெற்றோருக்குப் புரியவில்லை.
நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!சற்று நேரத்தில் சுதாரித்த அவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க கும்பகோணத்தில் உள்ள பல தெருக்களுக்கு தனது குழந்தையைத் தேடி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர், சுந்தர தாத்தாசார்யார், "என் குழந்தையைக் காணவில்லயே, என்ன செய்வேன்? ஏது செய்வேன்?" என்று அழுதுகொண்டே, அவர் என்றுமே நம்பி வழிபடும் சாரங்கபாணி திருக்கோயிலுக்கு சென்று கோமளவல்லி தாயாரிடம் தனது குழந்தையைக் காணவில்லை என்று முறையிடச் சென்றபோது அங்கே அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், கோமளவல்லி தாயார் தனது தரிசனத்தை அவருக்கு காட்டுவதற்கு முன்பு தனது கரிசனத்தை அந்தக் குழந்தையின் ரூபத்தில் காட்டிக் கொடுத்தாள். அந்தத் திருமகளின் சன்னிதிக்கு எதிரே நீல நிறப் பட்டு துணி சுற்றப்பட்டு தனது குழந்தை இருப்பதைப் பார்த்து பூரித்துபோனார், சுந்தர தாத்தாசாரியார். அந்தக் குழந்தை நன்றாக கை, கால்களை அசைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கொட்டியது.
கருணையின் விலாசம்!கோமளவல்லி தாயாரை அலங்கரித்துக் கொண்டிருந்த நீல நிறப் பட்டாடையின் ஒரு பகுதிதான் அந்தக் குழந்தையை அரவணைத்துக்கொண்டிருந்தது. குழந்தையின் வாய் ஓரத்தில் ஒட்டி இருந்த பால், அது கோமளவல்லி தாயாரே தயாபரியாய் அக்குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டி இருக்கிறாள் என்று காண்பித்துக் கொடுத்தது. சட்டென்று அங்கே வந்த கோயில் அர்ச்சகர், "இந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?" என்று கேட்க, அதற்கு சுந்தர தாத்தாசாரியாரோ, "இதோ இக்கோயிலின் பெருமாள் பெயரைத்தான் வைக்கப் போகிறேன்" என்று சொல்ல, அதற்கு அர்ச்சகரோ, "இது தாயாரின் குழந்தை. தாயாரின் திருவருளால் பிறந்த குழந்தை. அதனால் அவளின் திருக்குமாரன் என்று சொல்லும்படி லட்சுமிகுமாரன் என்றே இந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டுங்கள்" என்று கூறினார். அப்படி உலகமே வியக்கும் அளவுக்கு மகா பண்டிதராக விளங்கியவர்தான் லட்சுமி குமார தாத்தாச்சாரியார். திக்கற்றவர்கக்கும் திசையாய் அருளும் திருமகளின் கருணையை என்னவென்று புகழ்வது?
திருமகள் திருவருள் வளரும்…
(இந்த திருமகள் திருவருள் தொடர் வெள்ளிதோறும் இடம்பெறும்)
திருமகள் திருவருள் - அனைத்து அத்தியாயங்களையும் படிக்க கீழே உள்ள 'Click Here' பட்டனை கிளிக் செய்யவும்.
Click Here
