Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொசுக்கள்: சிறிய பூச்சி... பெரிய அச்சுறுத்தல்! - நாம் அறியாத உண்மைகள்!

கொசுக்கள்: சிறிய பூச்சி... பெரிய அச்சுறுத்தல்! - நாம் அறியாத உண்மைகள்!

Kalki Online 5 months ago

லக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின் படி கொசுக்களினால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

பெண் கொசுக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மட்டுமே நமக்கு கொசுக்களால் ஏற்படும் நோய்களை தவிர்க்க முடியும். கொசுக்கள் ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பெண் கொசுக்களின் வாழ்நாள் 40 முதல் 50 நாட்கள் வரையும், ஆண் கொசு ஒரு வாரத்திற்கும் குறைவாகவே உயிர் வாழ்கின்றன. கொசுக்கள் குடும்பம் அனாஃபிலினே, க்யூலிசினே என்ற இரண்டு துணைக் குடும்பங்களைக் கொண்டுள்ளது. ஏடிஸ், அனாஃபிலஸ், க்யூலெக்ஸ் போன்ற 40 பேரினங்களும் அவற்றுக்கு கீழ் 3500 கொசு வகைகள் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. 3500 வகைகளில் சில நூறு கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கின்றன.

கொசுக்கள் நோய்களை பரப்பினாலும், அவை உணவுச்சங்கிலியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மீன்கள், பறவைகள், வவ்வால்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களுக்கு இவை ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் சிலவகை கொசுக்கள் முக்கியமான மகரந்த சேர்க்கையாளர்களாகவும் இருக்கின்றன.

இந்தியாவில் ஏடிஸ் கொசு டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸை பரப்புகிறது. சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் இவை பகலில் மட்டுமே கடிக்கும். அனோபிலிஸ் எனப்படும் கொசு மலேரியாவைப் பரப்புகிறது. கியூலெக்ஸ் கொசு ஜப்பானிய மூளைக்காய்ச்சலையும், பிலேரியாசிஸ் நோயையும் பரப்புகிறது. இந்தியா கொசு இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது.

கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், கொசுவலைகளைப் பயன்படுத்துதல், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துதல், புகை அடித்தல் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. கொசு பரவலைத் தடுக்க குப்பைத் தொட்டிகளைத் தினமும் தவறாமல் காலி செய்ய வேண்டும். சிறிய உணவுத் துகள்கள்கூட பூச்சிகளை ஈர்க்கக்கூடும். கொசுக்கள் முட்டையிடுவதற்கு சில அங்குலம் பரப்பளவுக்கு தண்ணீர் இருந்தால்கூட போதும். இதுவரையில் காணப்படாத ஐஸ்லாந்தில் கூட கொசுக்கள் குடியேறிவிட்டது நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

கொசுக்களுக்கு இரத்தம் முதன்மையான உணவல்ல. பெண் கொசுக்கள் முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே மனிதர்களைக் கடிக்கின்றன. ஆண் கொசு மனிதர்களையோ அல்லது விலங்குகளையோ கடிப்பதில்லை. கொசுக்கள் மனிதர்களின் இரத்த வகை, உடல் வெப்பநிலை, வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு, உடலில் இருந்து வெளிப்படும் கொசுக்களை ஈர்க்கும் ஒருவகையான வாசனையின் அளவு போன்றவற்றைப் பொருத்துத்தான் கடிக்கின்றன. 'ஓ' வகை இரத்தமுள்ளவர்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதில்லை. கருவுற்றிருக்கும் பெண்களையும் கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன. டச்சு நாட்டின் மலேரியா கொசு நம் முகத்திலும், ஆப்பிரிக்க மலேரியா கொசு கணுக்கால் மற்றும் கால்களில் கடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

1897-ம் ஆண்டு ஆகஸ்ட், 20-ம் நாள் மலேரியா நோய்க் கிருமிகள் கொசுக்களின் வழியாக பரவுவதை மருத்துவர் சர் ரொனால்டு ராஸ் கண்டறிந்தார். அக்கண்டுபிடிப்பின் நினைவாக ஆகஸ்டு 20, உலக கொசுக்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அறிவியலும் தொழில்நுட்பங்களும் இவ்வளவு வளர்ந்த பின்னும் மலேரியா போன்ற ஆட்கொல்லி நோய்களால் மக்கள் இறப்பது மட்டும் இன்னும் தீரவே இல்லை.

முறையான நீர் வடிகால்கள் இல்லாமை போன்றவைகளால் கொசுக்கள் பல்கிப் பெருகுவதால் பலர் உயிரிழக்கிறார்கள். மருத்துவம், சுகாதாரம் போன்றவை விற்பனைக்கான சரக்காக மாற்றப்பட்டு விட்டன. கொசுக்களை ஒழிக்க பயன்படும் நச்சுக் கொல்லிகளின் வீரியத்தை ஓரளவிற்கு மேல் நம்மால் அதிகப்படுத்தவும் முடிவதில்லை.

வெப்ப மண்டல நாடுகளில் கொசு முட்டைகள் 48 மணிநேரத்திற்குள் பொரிந்து லார்வா புழுக்களாகி, அவை கூட்டுப்புழுவாகி கொசுவாக மாறுவதற்கு 5 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. மழை நீர் அல்லது கழிவு நீர் ஓரு சில நாட்கள் தங்கினாலே கொசுக்கள் உற்பத்தியாவதற்கு போதுமானதாகும். தற்போது முற்றிலும் மலட்டுத் தன்மையுள்ள ஆண் கொசுக்களை உருவாக்குவதை நவீன மரபணு திருத்தம் செய்யும் தொழில்நுட்பங்கள் எளிமையாக்கியுள்ளன. சில கொசுக்களின் மரபணுவில் மாற்றம் செய்து ஆண் கொசுக்களை மட்டுமே அவை ஈன்றெடுக்க வைக்கலாம்.

கொசு கடித்தால் இனி நோய் வராதா? பாக்டீரியா மூலம் கொசுக்களை மாற்றியமைத்த விஞ்ஞானிகள்!

ஆண் கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு பின்வரும் சந்ததிகள் முட்டையிலிருந்து பொரிந்து லார்வா நிலை வந்தவுடன் இறந்துவிடுமாறும் மாற்றியமைக்கலாம். இவற்றை விடுவிக்கும் போது அவை உடனடியாக பெண் கொசுக்களை கண்டடையும். இந்த செயல்முறையை திரும்ப திரும்ப செய்யும் போது 4 முதல் 5 மாதங்களுக்குள்ளாகவே கொசுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 85% குறைந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆக, நோய் பரப்பும் ஒரு குறிப்பிட்ட கொசு வகையை ஓரிரு ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக ஒழித்துவிட முடியும். ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் நல அரசு - ஆட்சியாளர்கள், மக்கள் நல கொள்கைகள், நிதி ஒதுக்கீடு போன்றவை தேவையாக இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online